கிரிக்கெட்

இலங்கை-இங்கிலாந்து அணிகள் மோதும் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் - இன்று தொடக்கம் + "||" + Sri Lanka and England are the first ever Test cricket - starting today

இலங்கை-இங்கிலாந்து அணிகள் மோதும் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் - இன்று தொடக்கம்

இலங்கை-இங்கிலாந்து அணிகள் மோதும் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் - இன்று தொடக்கம்
இலங்கை-இங்கிலாந்து அணிகள் மோதும் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி காலேயில் இன்று தொடங்குகிறது.
காலே,

இங்கிலாந்து கிரிக்கெட் அணி, இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான ஒருநாள் போட்டி தொடரை 3-1 என்ற கணக்கிலும், ஒரே ஒரு போட்டி கொண்ட 20 ஓவர் போட்டி தொடரை 1-0 என்ற கணக்கிலும் இங்கிலாந்து அணி வென்றது. இதனை அடுத்து இலங்கை-இங்கிலாந்து அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் போட்டி தொடரில் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இலங்கையில் உள்ள காலே மைதானத்தில் இன்று தொடங்குகிறது.


தினேஷ் சன்டிமால் தலைமையில் களம் காணும் இலங்கை அணி, ஒருநாள் மற்றும் 20 ஓவர் போட்டியில் கண்ட தோல்விக்கு பரிகாரம் தேட முயற்சிக்கும். காலே மைதானம் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும். இலங்கை அணியில் சுழற்பந்து வீச்சாளர்கள் ரங்கனா ஹெராத், லக்‌ஷன் சன்டகன், அகிலா தனஞ்ஜெயா ஆகியோர் இடம் பிடித்துள்ளனர்.

92 டெஸ்ட் போட்டியில் விளையாடி 430 விக்கெட்டுகள் வீழ்த்தி இருக்கும் 40 வயதான ரங்கனா ஹெராத்துக்கு இது கடைசி போட்டியாகும். இந்த மைதானத்தில் 99 விக்கெட்டுகள் வீழ்த்தி இருக்கும் ஹெராத் இன்னும் ஒரு விக்கெட் வீழ்த்தினால் 100 விக்கெட்டை எட்டுவார் இந்த மைதானத்தில் அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் பட்டியலில் முரளிதரன் (111 விக்கெட்டுகள்) முதலிடத்தில் உள்ளார். தனது கடைசி போட்டியில் சாதிக்க ஹெராத் முனைப்பு காட்டுவார். அதேநேரத்தில் ஹெராத்துக்கு வெற்றியுடன் விடைகொடுக்க இலங்கை அணியினரும் தீவிரம் காட்டுவார்கள்.

ஜோரூட் தலைமையிலான இங்கிலாந்து அணி சமீப காலங்களில் வெளிநாட்டு மண்ணில் டெஸ்ட் போட்டியில் சிறப்பாக செயல்பட முடியாமல் தடுமாறி வருகிறது. அத்துடன் இலங்கை வீரர்களின் சுழற்பந்து வீச்சு நிச்சயம் இங்கிலாந்து அணியினருக்கு குடைச்சல் கொடுக்கும். மேலும் உள்ளூர் சூழலும் இலங்கை அணிக்கு சாதகமாக இருக்கும். எனவே இந்த போட்டியில் இலங்கை அணி எழுச்சி அடையும் என்று எதிர்பார்க்கலாம். தற்போது இலங்கையில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. மழையால் நேற்றைய பயிற்சிக்கு பாதிப்பு ஏற்பட்டது. இதனால் இந்த போட்டி மழையால் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது. இலங்கையில் நிலவி வரும் அரசியல் குழப்பம் காரணமாக போட்டி நடைபெறும் மைதானத்தில் அதிக பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இலங்கை-இங்கிலாந்து அணிகள் இதுவரை 31 டெஸ்ட் போட்டியில் நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் இங்கிலாந்து அணி 12 டெஸ்டிலும், இலங்கை அணி 8 டெஸ்டிலும் வெற்றி பெற்று இருக்கின்றன. 11 ஆட்டங்கள் டிராவில் முடிந்தன. காலை 10 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை சோனி டென்-2 சேனல் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது.


ஆசிரியரின் தேர்வுகள்...