இந்தியா-ஆஸ்திரேலியா லெவன் அணிகள் மோதிய பயிற்சி கிரிக்கெட் ‘டிரா’வில் முடிந்தது


இந்தியா-ஆஸ்திரேலியா லெவன் அணிகள் மோதிய பயிற்சி கிரிக்கெட் ‘டிரா’வில் முடிந்தது
x
தினத்தந்தி 1 Dec 2018 11:30 PM GMT (Updated: 1 Dec 2018 11:27 PM GMT)

இந்தியா- ஆஸ்திரேலியா லெவன் அணிகள் மோதிய பயிற்சி கிரிக்கெட் போட்டி ‘டிரா’வில் முடிந்தது. கடைசி நாளில் விஜய் சதம் அடித்து அசத்தினார்.

சிட்னி,

இந்தியா - ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரிய லெவன் அணிகள் இடையிலான பயிற்சி கிரிக்கெட் போட்டி சிட்னியில் நடந்தது. இதில் முதலில் பேட் செய்த இந்தியா முதல் இன்னிங்சில் 358 ரன்னில் ஆட்டம் இழந்தது. பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலிய லெவன் அணி 3-வது நாள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 356 ரன்கள் எடுத்திருந்தது.

இந்த நிலையில் 4-வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நேற்று நடந்தது. தொடர்ந்து ஆடிய ஆஸ்திரேலிய லெவன் அணி 151.1 ஓவர்களில் 544 ரன்கள் குவித்து மலைக்க வைத்தது. விக்கெட் கீப்பர் ஹாரி நீல்சன் 100 ரன்களும், பின்வரிசை வீரர்களான ஆரோன் ஹார்டி 86 ரன்களும், டேனியல் பாலின்ஸ் 43 ரன்களும், லுக் ராபின்ஸ் 38 ரன்களும் (நாட்-அவுட்), ஜாக்சன் கோல்மான் 36 ரன்களும் எடுத்தனர். இந்திய தரப்பில் முகமது ஷமி 3 விக்கெட்டுகளும், அஸ்வின் 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர். கேப்டன் விராட்கோலி 7 ஓவர்கள் பந்து வீசி 27 ரன்கள் விட்டுக்கொடுத்து சதம் அடித்த நீல்சனின் விக்கெட்டை ‘கேட்ச்’ மூலம் சாய்த்தார்.

அடுத்து 186 ரன்கள் பின்தங்கிய நிலையில் இந்திய அணி 2-வது இன்னிங்சை ஆடியது. இது பயிற்சி போட்டி என்பதால் இந்திய அணியில் உள்ள 16 வீரர்களையும் மாற்றி மாற்றி பயன்படுத்தி கொள்ள அனுமதி உண்டு. இதன்படி முதல் இன்னிங்சில் விளையாடாத முரளிவிஜய் 2-வது இன்னிங்சில் தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்கினார். அவரும், லோகேஷ் ராகுலும் இணைந்து துரிதமான ரன் சேர்ப்பில் கவனம் செலுத்தினர். இவர்கள் முதல் விக்கெட்டுக்கு 109 ரன்கள் திரட்டினர். ராகுல் 62 ரன்களில் (98 பந்து, 8 பவுண்டரி, ஒரு சிக்சர்) கேட்ச் ஆனார். அடுத்து ஹனுமா விஹாரி வந்தார். அவரது துணையுடன் விஜய் அதிரடியில் அமர்க்களப்படுத்தினார். அரைசதத்தை 91 பந்துகளில் கடந்த விஜய் அடுத்த 50 ரன்களை வெறும் 27 பந்துகளில் திரட்டினார். இதில் பகுதி நேர சுழற்பந்து வீச்சாளர் ஜாக் கார்டரின் ஒரே ஓவரில் 3 பவுண்டரி, 2 சிக்சர் உள்பட 26 ரன்கள் விரட்டியது குறிப்பிடத்தக்கது. அவரது இன்னொரு ஓவரில் மேலும் 2 சிக்சர்களும் பறக்க விட்டார்.

பேட்டிங்கில் மிரட்டிய தமிழகத்தை சேர்ந்த விஜய் 129 ரன்கள் (132 பந்து, 16 பவுண்டரி, 5 சிக்சர்) விளாசிய நிலையில் போல்டு ஆனார். அத்துடன் இந்த ஆட்டம் டிராவில் முடித்துக் கொள்ளப்பட்டது. இந்திய அணி 43.4 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 211 ரன்கள் எடுத்தது. விஹாரி 15 ரன்களுடன் களத்தில் இருந்தார்.

அடுத்து இந்தியா -ஆஸ்திரேலியா இடையிலான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதலாவது டெஸ்ட் போட்டி வருகிற 6-ந்தேதி அடிலெய்டில் தொடங்குகிறது. பயிற்சி ஆட்டத்தில் முரளி விஜயும், ராகுலும் நம்பிக்கை தரும் வகையில் ஆடியிருப்பதால் அவர்கள் முதலாவது டெஸ்டில் தொடக்க ஜோடியாக ஆடுவது ஏறக்குறைய உறுதியாகி விட்டது.

‘ஆஸ்திரேலிய தொடரில் சாதிப்பேன்’- விஜய்

பயிற்சி கிரிக்கெட்டில் சதம் நொறுக்கிய பிறகு 34 வயதான முரளிவிஜய் நிருபர்களிடம் கூறியதாவது:-

இந்த ஆட்டத்தில் பவுண்டரி, சிக்சர்கள் அடித்தது நல்ல பயிற்சியாக அமைந்தது. எனது ஆட்டத்திறன் மற்றும் உடல்தகுதியை மேம்படுத்திக் கொள்ள தொடர்ந்து கடினமாக உழைக்கிறேன். இந்த தொடரில் எனது சிறந்த பங்களிப்பை வழங்க ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளேன். அதை செய்வேன் என்ற நம்பிக்கை உள்ளது.

எப்போதும் அணிக்கு வலுவான தொடக்கம் கொடுக்க வேண்டும் என்பதே எனது நோக்கம். அதில் எந்த மாற்றமும் இல்லை. எனக்கும், ராகுலுக்கும் நல்ல புரிந்துணர்வு உண்டு. ஜாலியாக ஆடக்கூடிய ஒரு வீரர் ராகுல். பயிற்சி கிரிக்கெட்டில் கிடைத்த உத்வேகத்தை டெஸ்ட் போட்டிக்கும் கொண்டு செல்வோம் என்ற நம்பிக்கை உள்ளது. நான் காலை பின்பக்கமாக (பேக்புட்) எடுத்து வைத்து விளையாடக்கூடியவன். இந்த மாதிரியான ஸ்டைலுக்கு ஆஸ்திரேலிய ஆடுகளங்கள் மிக பொருத்தமாக இருக்கும். எழும்பி வரும் பந்துகளை நாம் நினைத்த மாதிரி அடிக்க முடியும் என்று விஜய் கூறினார்.



Next Story