ஆஸ்திரேலிய அணி பாலோ–ஆன்: சிட்னி டெஸ்டில் 4–வது நாள் ஆட்டம் மழையால் பாதிப்பு தொடரை வென்று வரலாறு படைக்கிறது, இந்தியா


ஆஸ்திரேலிய அணி பாலோ–ஆன்: சிட்னி டெஸ்டில் 4–வது நாள் ஆட்டம் மழையால் பாதிப்பு தொடரை வென்று வரலாறு படைக்கிறது, இந்தியா
x
தினத்தந்தி 6 Jan 2019 10:30 PM GMT (Updated: 6 Jan 2019 8:54 PM GMT)

சிட்னி டெஸ்டில் 4–வது நாளில் மழை பாதிப்புக்கு மத்தியில் ஆடிய ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 300 ரன்களுக்கு ஆட்டம் இழந்து ‘பாலோ–ஆன்’ ஆனது.

சிட்னி,

சிட்னி டெஸ்டில் 4–வது நாளில் மழை பாதிப்புக்கு மத்தியில் ஆடிய ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 300 ரன்களுக்கு ஆட்டம் இழந்து ‘பாலோ–ஆன்’ ஆனது. இன்னும் ஒரு நாள் ஆட்டம் மட்டுமே எஞ்சியுள்ள நிலையில் இந்திய அணி அங்கு முதல் முறையாக டெஸ்ட் தொடரை வெல்லப்போவது ஏறக்குறைய உறுதியாகி விட்டது.

சிட்னி டெஸ்ட்

இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 4–வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சிட்னியில் நடந்து வருகிறது. இதில் முதலில் பேட் செய்த இந்தி£ 7 விக்கெட்டுக்கு 622 ரன்கள் குவித்து ‘டிக்ளேர்’ செய்தது. பின்னர் தனது முதல் இன்னிங்சை ஆடிய ஆஸ்திரேலியா 3–வது நாள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 236 ரன்கள் எடுத்திருந்தது. பீட்டர் ஹேன்ட்ஸ் கோம்ப் (28 ரன்), பேட் கம்மின்ஸ் (25 ரன்) களத்தில் இருந்தனர்.

இந்த நிலையில் நேற்றைய 4–வது ஆட்டத்தின் பெரும்பகுதி மழை மற்றும் போதிய வெளிச்சம் இன்மையால் பாதிக்கப்பட்டது.

காலையில் தொடர்ந்து மழை பெய்ததால் மதிய உணவு இடைவேளை வரை ஆட்டம் தொடங்கப்படவில்லை. அதன் பிறகு ஆஸ்திரேலிய வீரர்கள் பேட்டிங் செய்தனர். மொத்தம் 423 ரன்கள் சேர்த்தால் மட்டுமே பாலோ–ஆன் ஆபத்தில் இருந்து தப்பிக்க முடியும் என்ற சூழலில் ஆஸ்திரேலிய வீரர்கள் தடுமாறினர். முந்தைய நாள் ஜோடியான கம்மின்ஸ் 25 ரன்னிலும், ஹேன்ட்ஸ்கோம்ப்ஸ் 37 ரன்னிலும் போல்டு ஆகி சீக்கிரம் நடையை கட்டினர். நாதன் லயன் (0) குல்தீப் யாதவின் சுழலில் சிக்கினார்.

ஆஸ்திரேலியா பாலோ–ஆன்

மூன்று விக்கெட்டுகளை சீக்கிரம் வீழ்த்திய இந்திய பவுலர்களுக்கு கடைசி விக்கெட்டுக்கு இணைந்த மிட்செல் ஸ்டார்க்– ஹேசில்வுட் ஜோடி கொஞ்சம் தண்ணி காட்டியது. இவர்கள் ஒரு மணி நேரம் தாக்குப்பிடித்தனர். கடைசியில் ஹேசில்வுட் (21 ரன், 45 பந்து, 2 பவுண்டரி) குல்தீப் யாதவின் பந்து வீச்சில் எல்.பி.டபிள்யூ. ஆனார். டி.ஆர்.எஸ். முறைப்படி அப்பீல் செய்த போதிலும், அவருக்கு சாதகமான தீர்ப்பு கிடைக்கவில்லை.

முடிவில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 104.5 ஓவர்களில் 300 ரன்களுக்கு ஆல்–அவுட் ஆகி ‘பாலோ–ஆன்’ ஆனது. ஸ்டார்க் 29 ரன்களுடன் (55 பந்து, 3 பவுண்டரி) அவுட் ஆகாமல் இருந்தார். இந்திய தரப்பில் சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் 5 விக்கெட்டுகளை சாய்த்தார். 6–வது டெஸ்டில் ஆடும் குல்தீப் ஒரு இன்னிங்சில் 5 விக்கெட் வீழ்த்துவது இது 2–வது முறையாகும்.

மழையால் பாதிப்பு

இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு பாலோ–ஆன் வழங்கியதால் 322 ரன்கள் பின்தங்கிய நிலையில் ஆஸ்திரேலிய அணி 2–வது இன்னிங்சை தொடங்கியது. அந்த அணி 4 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 6 ரன் எடுத்திருந்த போது, மழை மேகம் திரண்டு இருள் சூழ்ந்ததால், போதிய வெளிச்சம் இல்லை என்று கூறி போட்டியை நடுவர் நிறுத்தினார். நீண்ட நேரம் மோசமான வானிலையே நீடித்தது. மாலையில் மழை தூரலும் விழுந்ததால் அத்துடன் 4–வது நாள் ஆட்டம் முடித்துக் கொள்ளப்பட்டது. நேற்றைய தினம் வெறும் 25.2 ஓவர்கள் மட்டுமே பந்து வீசப்பட்டன.

ஆஸ்திரேலிய அணி இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்கவே இன்னும் 316 ரன்கள் எடுத்தாக வேண்டிய நெருக்கடியில் தவிக்கிறது. இன்றைய கடைசி நாளில் அவர்கள் டிரா செய்ய கடுமையாக போராடுவார்கள். ஆனால் இன்றைய ஆட்டத்தின் போதும் மழை குறுக்கிடலாம். வானம் ஓரளவு மேகம் மூட்டத்துடன் காணப்படும். மழை பெய்ய 30 சதவீதம் வாய்ப்பு இருப்பதாக அங்குள்ள வானிலை ஆய்வு மையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வரலாறு படைக்கும் இந்தியா

இந்த டெஸ்டை பொறுத்தவரை இரண்டு விதமான முடிவுகள் கிடைக்கவே வாய்ப்புள்ளது. ஒன்று இந்திய அணி வெற்றி பெறும் அல்லது டிராவில் முடியும். ஏற்கனவே தொடரில் 2–1 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலை வகிப்பதால் தொடரை கைப்பற்றுவது உறுதியாகி விட்டது.

இதற்கு முன்பு எந்த ஆசிய அணியும் ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரை வென்றதில்லை. அதனால் இந்திய அணி புதிய சகாப்தம் படைக்கப்போகிறது. 1947–ம் ஆண்டு இறுதியில் முதல்முறையாக ஆஸ்திரேலியாவுக்கு பயணித்த இந்திய அணி அங்கு தனது கனவை 12–வது முயற்சியில், அதாவது 71 ஆண்டுகளுக்கு பிறகு நனவாக்குகிறது.

31 ஆண்டுகளுக்கு பிறகு சொந்த ‘பாலோ–ஆன்’ பெற்ற ஆஸ்திரேலியா

*சிட்னி டெஸ்டில் பாலோ–ஆனை தவிர்க்க 423 ரன்கள் எடுக்க வேண்டிய நிலைமையில் ஆஸ்திரேலிய அணி 300 ரன்களுக்கு அடங்கியது. இதையடுத்து ஆஸ்திரேலியாவுக்கு பாலோ–ஆன் வழங்கி தொடர்ந்து பேட் செய்யும் படி இந்திய அணி பணித்தது. சொந்த மண்ணில் ஆஸ்திரேலிய அணி பாலோ–ஆன் பெறுவது கடந்த 31 ஆண்டுகளில் இதுவே முதல் முறையாகும். கடைசியாக இதே மைதானத்தில் 1988–ம் ஆண்டு இங்கிலாந்து அணி, ஆஸ்திரேலியாவுக்கு பாலோ–ஆன் கொடுத்திருந்தது.

*ஆஸ்திரேலியாவுக்கு இந்திய அணி ‘பாலோ–ஆன்’ வழங்குவது இது 4–வது நிகழ்வாகும். ஏற்கனவே 1979–ம் ஆண்டில் டெல்லி, அதே ஆண்டில் மும்பை, 1986–ம் ஆண்டு சிட்னி ஆகிய இடங்களில் நடந்த டெஸ்டுகளில் இந்திய அணி பாலோ–ஆன் கொடுத்திருந்தது.

*முதல் இன்னிங்சில் இந்திய அணி 322 ரன்கள் வலுவான முன்னிலையை பெற்றது. முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நமது அணியின் 2–வது அதிகபட்ச முன்னிலை இதுவாகும். 1998–ம் ஆண்டு கொல்கத்தா ஈடன்கார்டனில் நடந்த டெஸ்டில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியா 400 ரன்கள் முன்னிலை கண்டதே அதிகபட்சமாகும்.


Related Tags :
Next Story