ரஞ்சி கிரிக்கெட்டில் டெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் தமிழக அணி 432 ரன்கள் குவிப்பு


ரஞ்சி கிரிக்கெட்டில் டெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் தமிழக அணி 432 ரன்கள் குவிப்பு
x
தினத்தந்தி 8 Jan 2019 9:45 PM GMT (Updated: 8 Jan 2019 9:40 PM GMT)

ரஞ்சி கிரிக்கெட்டில், டெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் தமிழக அணி 432 ரன்கள் குவித்தது.

சென்னை,

ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரில் தமிழ்நாடு-டெல்லி அணிகள் இடையிலான லீக் ஆட்டம் சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நேற்று முன்தினம் தொடங்கியது. முதலில் பேட்டிங் செய்த தமிழக அணி தொடக்க நாளில் 3 விக்கெட் இழப்புக்கு 215 ரன்கள் எடுத்து இருந்தது. அபினவ் முகுந்த் (104 ரன்), விஜய் சங்கர் (8 ரன்) களத்தில் இருந்தனர். இந்த நிலையில் 2-வது நாளான நேற்று தொடர்ந்து ஆடிய விஜய் சங்கர் 17 ரன்னிலும், அபினவ் முகுந்த் 134 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர். அடுத்து களம் கண்ட ரஞ்சன் பால் (78 ரன்), ஷாருக்கான் (55 ரன்) அரைசதம் அடித்தனர். முடிவில் தமிழக அணி முதல் இன்னிங்சில் 164.4 ஓவர்களில் 432 ரன்கள் குவித்து ‘ஆல்-அவுட்’ ஆனது. டெல்லி அணி தரப்பில் விகாஸ் மிஸ்ரா 5 விக்கெட்டும், ஷிவம் ஷர்மா 4 விக்கெட்டும் வீழ்த்தினார்கள். பின்னர் தனது முதல் இன்னிங்சை ஆடிய டெல்லி அணி நேற்றைய முடிவில் 12.5 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 35 ரன்கள் எடுத்துள்ளது. 3-வது நாள் ஆட்டம் இன்று நடக்கிறது.

அகர்தலாவில் நடந்த திரிபுரா-ராஜஸ்தான் அணிகள் இடையிலான லீக் ஆட்டம் 2-வது நாளிலேயே முடிவுக்கு வந்தது. முதல் இன்னிங்சில் திரிபுரா அணி 35 ரன்னில் சுருண்டது. ராஜஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 218 ரன்னில் ‘ஆல்-அவுட்’ ஆனது. அடுத்து 183 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது நாளான நேற்று ஆடிய திரிபுரா அணி மதிய உணவு இடைவேளைக்கு முன்பு 2-வது இன்னிங்சில் 25.3 ஓவர்களில் 106 ரன்னில் முடங்கியது. இதனால் ராஜஸ்தான் அணி இன்னிங்ஸ் மற்றும் 77 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ராஜஸ்தான் அணி 7-வது வெற்றியுடன் தனது பிரிவில் (சி) முதலிடம் பிடித்து கால்இறுதியை உறுதி செய்தது.


Next Story