சொந்த மண்ணில் நியூசிலாந்தை வீழ்த்தியது மிகப்பெரிய சாதனை - ரோகித் சர்மா பேட்டி


சொந்த மண்ணில் நியூசிலாந்தை வீழ்த்தியது மிகப்பெரிய சாதனை - ரோகித் சர்மா பேட்டி
x
தினத்தந்தி 3 Feb 2019 11:32 PM GMT (Updated: 2019-02-04T05:02:06+05:30)

சொந்த மண்ணில் நியூசிலாந்தை வீழ்த்தியது மிகப்பெரிய சாதனை என ரோகித் சர்மா தெரிவித்தார்.

வெலிங்டன்,

கடைசி ஒரு நாள் போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்திய பின்னர் இந்திய பொறுப்பு கேப்டன் ரோகித் சர்மா கூறியதாவது:-

‘டாஸ்’ போடுவதற்கு முன்பு ஆடுகளத்தை (பிட்ச்) பார்த்த போது ஈரப்பதம் காணப்பட்டது. இதனால் ஆடுகளம் தொடக்கத்தில் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும் என்பது தெரியும். ஆனால் உலக கோப்பை போட்டிக்கு தயாராகி வரும் நிலையில், ஒரு அணியாக இது போன்ற கடினமான சீதோஷ்ண நிலையை எப்படி சமாளிப்பது என்பதை சோதித்து பார்க்க விரும்பினோம். அதனால் தான் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தேன். ஒரு வேளை இது தொடரை நிர்ணயிக்கும் ஆட்டமாக இருந்திருந்தால், முதலில் பந்து வீச்சை தேர்வு செய்திருப்பேன். பந்து ‘ஸ்விங்’ ஆகும் போது எந்த மாதிரி பேட் செய்ய வேண்டும் என்பதை கற்றுக்கொள்ள வேண்டும். 4 விக்கெட்டுகளை வேகமாக இழந்த நிலையில் அடுத்து வந்த வீரர்கள் சிறப்பாக ஆடினர். அவர்களுக்கு இது போன்ற சூழலில் என்ன செய்ய வேண்டும் என்பது இப்போது தெரிந்து இருக்கும். முதல் 30 ஓவருக்குள் ரன்ரேட் மோசமாக இருந்தது. அதன் பிறகு 250 ரன்களை தாண்டியது நல்ல அறிகுறியாகும்.

நியூசிலாந்தை அதன் சொந்த மண்ணில் வீழ்த்துவது எளிதான காரியம் அல்ல. அவர்களை 4-1 என்ற கணக்கில் வென்றது மிகப்பெரிய சாதனையாகும். கடந்த முறை இங்கு 0-4 என்ற கணக்கில் தோற்றோம். இப்போது சிறப்பாக விளையாடி சாதித்து காட்டியிருக்கிறோம்.

விஜய் சங்கரின் பேட்டிங் அருமையாக இருந்தது. துரதிர்ஷ்டவசமாக ரன்-அவுட் ஆகி விட்டார். அவர் ஆடிய விதத்தை பார்க்கும் போது, 50 ரன்களோ ஏன் 100 ரன்கள் கூட எடுத்திருக்கலாம். கேதர் ஜாதவ் 2-வது சுழற்பந்து வீச்சாளராக இருக்கும் போது, அணிக்கு சமச்சீர் தன்மை வந்து விடுகிறது. என்னை பொறுத்தவரை அவரை முறையான ஒரு சுழற்பந்து வீச்சாளராகவே பார்க்கிறேன். ஒவ்வொரு ஆட்டத்திலும் அவர் 6 அல்லது 7 ஓவர்கள் பந்து வீசுவதோடு விக்கெட்டும் வீழ்த்துகிறார். இவ்வாறு ரோகித் சர்மா கூறினார்.


Next Story