இந்தியா-ஆஸ்திரேலியா மோதும் முதலாவது 20 ஓவர் கிரிக்கெட்: விசாகப்பட்டினத்தில் இன்று நடக்கிறது


இந்தியா-ஆஸ்திரேலியா மோதும் முதலாவது 20 ஓவர் கிரிக்கெட்: விசாகப்பட்டினத்தில் இன்று நடக்கிறது
x
தினத்தந்தி 23 Feb 2019 11:30 PM GMT (Updated: 23 Feb 2019 10:28 PM GMT)

இந்தியா-ஆஸ்திரேலியா மோதும் முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி விசாகப்பட்டினத்தில் இன்று நடக்கிறது.

விசாகப்பட்டினம்,

ஆரோன் பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்டு 20 ஓவர் மற்றும் 5 ஒரு நாள் போட்டிகளில் விளையாடுகிறது. இதன்படி இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான முதலாவது 20 ஓவர் போட்டி துறைமுக நகரான விசாகப்பட்டினத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது.

உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு முன்பாக இந்திய அணி விளையாடும் கடைசி சர்வதேச தொடர் இதுவாகும். உலக கோப்பைக்கான இந்திய அணியில் ஒரு சில இடங்களுக்கு மட்டும் தற்போது போட்டி நிலவுகிறது. அதற்கு தகுதியான வீரர்களை அடையாளம் காண இந்த தொடர் உதவும். தமிழகத்தை சேர்ந்த ஆல்-ரவுண்டர் விஜய் சங்கர், நியூசிலாந்து தொடரில் சிறப்பாக ஆடினார். இங்கும் கலக்கினால், உலக கோப்பையில் அவரது இடம் உறுதியாகி விடும். அதே சமயம் ஒரு நாள் தொடரில் கழற்றி விடப்பட்ட தமிழக மூத்த வீரர் தினேஷ் கார்த்திக், இந்த 20 ஓவர் தொடரில் தனது திறமையை வெளிப்படுத்தும் வேட்கையில் இருப்பார்.

நியூசிலாந்து தொடரின் போது பாதியில் ஓய்வு வழங்கப்பட்ட இந்திய கேப்டன் விராட் கோலி மீண்டும் அடியெடுத்து வைப்பதால் ரசிகர்களின் ஆர்வம் அதிகரித்துள்ளது. துணை கேப்டன் ரோகித் சர்மா சாதனை விளிம்பில் நிற்கிறார். இந்த ஆட்டத்தில் அவர் 2 சிக்சர் அடித்தால், 20 ஓவர் கிரிக்கெட்டில் அதிக சிக்சர் விளாசிய வெஸ்ட் இண்டீசின் கிறிஸ் கெய்ல், நியூசிலாந்தின் மார்ட்டின் கப்தில் (தலா 103 சிக்சர்) ஆகியோரை பின்னுக்கு தள்ளி விடுவார்.

ஆஸ்திரேலிய அணியை பொறுத்தவரை ஸ்டீவன் சுமித், டேவிட் வார்னர் இல்லாததால் சற்று பலம் குறைந்து தான் காணப்படுகிறது. ஆனாலும் பெரும்பாலான வீரர்கள் பிக்பாஷ் 20 ஓவர் கிரிக்கெட்டில் விளையாடி விட்டு வந்திருப்பதால், அந்த அனுபவம் அவர்களுக்கு அனுகூலமாக இருக்கும். அது மட்டுமின்றி கடந்த 4 நாட்களுக்கு முன்பே அவர்கள் இந்தியாவுக்கு வந்து இடைவிடாது பயிற்சி மேற்கொண்டு வருகிறார்கள். மேக்ஸ்வெல், ஆரோன் பிஞ்ச், டார்சி ஷார்ட், ஆல்-ரவுண்டர் மார்கஸ் ஸ்டோனிஸ் அதிரடியில் மிரட்டக்கூடியவர்கள். இவர்கள் நிலைத்து நின்று ஆடுவதை பொறுத்தே அந்த அணியின் ரன்வேகம் அமையும். குறிப்பாக மார்கஸ் ஸ்டோனிஸ் பிக்பாஷ் கிரிக்கெட்டில் 4 அரைசதம் உள்பட 533 ரன்கள் (சராசரி 53.30) குவித்து அசத்தினார். அவர் அந்த அணியின் துருப்பு சீட்டாக இருப்பார். தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய ஒரு வீரர் என்று அவருக்கு கோலி புகழாரம் சூட்டியிருப்பது குறிப்பிடத்தக்கது.

மொத்தத்தில் இரு அணிகளும் தொடரை வெற்றியுடன் தொடங்கும் முனைப்புடன் இருப்பதால் போட்டியில் விறுவிறுப்புக்கு குறைவிருக்காது. இந்தியா-ஆஸ்திரேலிய அணிகள் இதுவரை 18 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 11-ல் இந்தியாவும், 6-ல் ஆஸ்திரேலியாவும் வெற்றி பெற்றுள்ளது. ஒரு ஆட்டத்தில் முடிவு இல்லை.

போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

இந்தியா: ரோகித் சர்மா, ஷிகர் தவான், விராட் கோலி (கேப்டன்), தினேஷ் கார்த்திக் அல்லது லோகேஷ் ராகுல், ரிஷாப் பான்ட், டோனி, குருணல் பாண்ட்யா, விஜய் சங்கர், ஜஸ்பிரித் பும்ரா, உமேஷ் யாதவ், யுஸ்வேந்திர சாஹல்.

ஆஸ்திரேலியா: டார்சி ஷார்ட், ஆரோன் பிஞ்ச் (கேப்டன்), பீட்டர் ஹேன்ட்ஸ்கோம்ப், மேக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டோனிஸ், ஆஷ்டன் டர்னர், அலெக்ஸ் காரி, கம்மின்ஸ், நாதன் கவுல்டர்-நிலே, ஆடம் ஜம்பா, கேன் ரிச்சர்ட்சன் அல்லது ஜாசன் பெரேன்டோர்ப் அல்லது ஜெயே ரிச்சர்ட்சன்.

இரவு 7 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

சக வீரர்களுக்கு கோலி எச்சரிக்கை

ஆஸ்திரேலிய தொடர் நிறைவடைந்ததும் இந்திய அணி ஒன்றரை மாத காலம் (மார்ச் 23-ந்தேதி முதல்) ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் விளையாடும். அதன் பிறகு மே 30-ந்தேதி தொடங்கும் உலக கோப்பை போட்டியில் இந்திய அணி கலந்து கொள்ளும். ஐ.பி.எல். போட்டியில் தேவையில்லாமல் ‘ரிஸ்க்’ எடுத்து விளையாடினால் அது உலக கோப்பைக்கு சிக்கலை உருவாக்கி விடும் என்று சக வீரர்களை இந்திய கேப்டன் விராட் கோலி எச்சரித்துள்ளார்.

இது குறித்து விராட் கோலி நிருபர்களிடம் கூறுகையில், ‘உலக கோப்பை போட்டியில் விளையாட உள்ள வீரர்கள், தங்களது அணுகுமுறை ஒரு நாள் போட்டிக்கு ஏற்ற வகையில் தொடர்ந்து இருக்கும் வகையில் பார்த்துக் கொள்ள வேண்டும். ஐ.பி.எல். கிரிக்கெட்டின் போது வீரர்களின் நிலையான ஆட்டம் கவனத்தில் கொள்ளப்படும். அதே சமயம் ஐ.பி.எல். கிரிக்கெட்டின் போது வழக்கத்திற்கு மாறாக, வித்தியாசமான ஷாட்டுகளை அடிக்க முயற்சித்து உத்வேகத்தையும், பேட்டிங் பார்மையும் இழக்க நேரிடலாம். பார்மை இழந்து விட்டால், உலககோப்பை போன்ற போட்டிகளில் மீண்டும் பார்முக்கு திரும்புவது கடினம். அதனால் ஒவ்வொரு வீரர்களும் அணிக்கு என்ன தேவை என்பதை தெளிவாக உணர்ந்து செயல்படுங்கள்’ என்றார். உலக கோப்பைக்கு முன்பாக கொஞ்சம் அதிகமான ஒரு நாள் போட்டிகள் இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்றும் கோலி குறிப்பிட்டார்.


Next Story