ஊழல் தடுப்பு பிரிவு விசாரணைக்கு ஒத்துழைக்க மறுத்த இலங்கை முன்னாள் கேப்டன் ஜெயசூர்யாவுக்கு 2 ஆண்டு தடை


ஊழல் தடுப்பு பிரிவு விசாரணைக்கு ஒத்துழைக்க மறுத்த இலங்கை முன்னாள் கேப்டன் ஜெயசூர்யாவுக்கு 2 ஆண்டு தடை
x
தினத்தந்தி 26 Feb 2019 11:15 PM GMT (Updated: 26 Feb 2019 8:03 PM GMT)

ஊழல் தடுப்பு பிரிவு விசாரணைக்கு ஒத்துழைக்க மறுத்த, இலங்கை முன்னாள் கேப்டன் ஜெயசூர்யாவுக்கு 2 ஆண்டு தடை விதிக்கப்பட்டுள்ளது.

துபாய்,

ஐ.சி.சி. ஊழல் தடுப்பு பிரிவின் விசாரணைக்கு ஒத்துழைக்க மறுத்த இலங்கை முன்னாள் கேப்டன் ஜெயசூர்யாவுக்கு கிரிக்கெட் தொடர்பான நடவடிக்கைகளில் பங்கேற்க 2 ஆண்டு தடை விதிக்கப்பட்டு இருக்கிறது.

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சனத் ஜெயசூர்யா. அதிரடி ஜாலத்துக்கு பெயர் போன ஜெயசூர்யா, 1996-ம் ஆண்டு இலங்கை அணி உலக கோப்பையை வென்றதில் முக்கிய பங்காற்றினார். ஒரு நாள் கிரிக்கெட்டில் 13 ஆயிரம் ரன்களுடன், 300-க்கும் மேல் விக்கெட் எடுத்த ஒரே வீரர் ஜெயசூர்யா ஆவார். 2011-ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து விடைபெற்ற அவர், அதன் பிறகு இலங்கை கிரிக்கெட் அணியின் தேர்வு குழு தலைவராக பணியாற்றினார். 2015-ம் ஆண்டு அந்த பொறுப்பில் இருந்து விலகிய அவர் 2016, 2017-ம் ஆண்டுகளில் மறுபடியும் தேர்வு கமிட்டியில் இடம் பெற்றார். இலங்கை அணியின் தொடர்ச்சியான தோல்வி எதிரொலியாக தேர்வு கமிட்டி பொறுப்பில் இருந்து விலகினார். அரசிலியல் குதித்து மந்திரி பதவியும் வகித்து இருக்கிறார்.

2017-ம் ஆண்டு ஜூன்-ஜூலை மாதங்களில் உள்ளூரில் நடந்த ஜிம்பாப்வேக்கு எதிரான ஒரு நாள் தொடரை இலங்கை அணி 2-3 என்ற கணக்கில் தோற்றது. இலங்கை மண்ணில் ஜிம்பாப்வே வென்ற முதல் தொடர் இது தான்.

ஜிம்பாப்வேக்கு எதிராக இலங்கை அணியின் மோசமான தோல்வியின் பின்னணியில் சூதாட்டம் நடந்திருக்கலாம் என்று இலங்கை முன்னாள் வீரர் பிரமோத்யா விக்ரமசிங்கே திடுக்கிடும் குற்றச்சாட்டை கூறினார். இது குறித்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி.) ஊழல் தடுப்பு பிரிவு விசாரணை மேற்கொண்டது. அந்த சமயத்தில் இலங்கை தேர்வு குழு தலைவராக இருந்த ஜெயசூர்யாவிடம் ஐ.சி.சி.யின் ஊழல் தடுப்பு பிரிவினர் நேரில் வந்து விசாரணை நடத்தினர். ஆனால் அவர் அதிகாரிகளின் கேள்விக்கு சரியாக பதில் சொல்லவில்லை. மேலும் விசாரணையின் போது, அவர் பயன்படுத்திய செல்போன்களை கேட்ட போது அதை வழங்க மறுத்தார்.

செல்போன் தொடர்பாக அவர் முன்னுக்கு பின் முரணான தகவல்களை தெரிவித்தார். ஐ.சி.சி. குழுவினர் கேட்ட, குறிப்பிட்ட நம்பர் கொண்ட இரண்டு செல்போன்கள் முன்னரே தொலைந்து போய் விட்டதாக கூறினார். இன்னொரு முறை ஆஜரான போது, செல்போனில் தனிப்பட்ட வீடியோ ஆதாரங்கள் இருந்ததால் அதை அழித்து விட்டதாக விளக்கம் அளித்தார். பிறகு குறிப்பிட்ட எண் கொண்ட நம்பரை தான் உபயோகிக்கவில்லை என்று கூறினார். ஆனால் அந்த எண்ணில் இருந்து ஜெயசூர்யா பல தகவல்கள் பரிமாறிக்கொண்டது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த விஷயத்தில் அவர் பொய் சொன்னது அம்பலமானது.

இதையடுத்து ஐ.சி.சி.யின் ஊழல் தடுப்பு பிரிவு குழுவினரின் விசாரணைக்கு ஒத்துழைக்க மறுத்தது மற்றும் முக்கிய ஆவணங்களை அழித்தோ அல்லது ஆதாரங்கள் மற்றும் தகவல்களை மறைத்தோ அதன் மூலம் விசாரணைக்கு இடையூறு அல்லது தாமதம் செய்யும் வகையில் நடந்து கொண்டது ஆகிய இரண்டு பிரிவின் கீழ் ஜெயசூர்யா மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது.

அதே சமயம் தான் கிரிக்கெட் முறைகேட்டில் ஒரு போதும் ஈடுபட்டதில்லை, எதிலும் வெளிப்படையாக நடந்து கொள்ளக்கூடியவன் நான் என்று அறிக்கை வெளியிட்டார்.

ஆனால், ஐ.சி.சி. ஊழல் தடுப்பு பிரிவின் நடத்தை விதிமுறையை மீறி விட்டதை ஜெயசூர்யா ஒப்புக் கொண்டார். இந்த நிலையில் இது தொடர்பான விசாரணை முடிவில் 49 வயதான ஜெயசூர்யாவுக்கு 2 ஆண்டு தடை விதிப்பதாக ஐ.சி.சி.யின் ஊழல் தடுப்பு பிரிவு நேற்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி கிரிக்கெட் தொடர்பான எந்தவிதமான நடவடிக்கைகளிலும் ஜெயசூர்யா 2 ஆண்டுகள் கலந்து கொள்ள முடியாது. இந்த தடை நடவடிக்கை கடந்த ஆண்டு அக்டோபர் 16-ந்தேதியில் இருந்து கணக்கிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.


Next Story