வங்காளதேசத்துக்கு எதிரான டெஸ்ட்: நியூசிலாந்து அணி 432 ரன்கள் குவித்து ‘டிக்ளேர்’ - ராஸ் டெய்லர் இரட்டை சதம் அடித்தார்


வங்காளதேசத்துக்கு எதிரான டெஸ்ட்: நியூசிலாந்து அணி 432 ரன்கள் குவித்து ‘டிக்ளேர்’ - ராஸ் டெய்லர் இரட்டை சதம் அடித்தார்
x
தினத்தந்தி 11 March 2019 10:45 PM GMT (Updated: 11 March 2019 10:08 PM GMT)

வங்காளதேசத்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 6 விக்கெட் இழப்புக்கு 432 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. ராஸ் டெய்லர் இரட்டை சதம் அடித்தார்.

வெலிங்டன்,

நியூசிலாந்து-வங்காளதேசம் அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி வெலிங்டனில் கடந்த 8-ந்தேதி தொடங்கியது. முதல் 2 நாட்கள் மழையால் ஒரு பந்து கூட வீசப்படாமல் ஆட்டம் ரத்து செய்யப்பட்டது. 3-வது நாளில் ‘டாஸ்’ ஜெயித்த நியூசிலாந்து அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. இதன்படி முதலில் பேட்டிங் செய்த வங்காளதேச அணி முதல் இன்னிங்சில் 211 ரன்களில் ‘ஆல்-அவுட்’ ஆனது.

பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய நியூசிலாந்து அணி 11.4 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 38 ரன்கள் எடுத்திருந்த போது மழை குறுக்கிட்டதால் 3-வது நாள் ஆட்டம் அத்துடன் முடிவுக்கு வந்தது. கேப்டன் கேன் வில்லியம்சன் 10 ரன்னுடனும், ராஸ் டெய்லர் 19 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

4-வது நாள் ஆட்டம் நேற்று நடந்தது. முந்தைய நாளில் பீல்டிங் செய்கையில் தோள்பட்டையில் காயம் அடைந்த கேப்டன் கேன் வில்லியம்சன் சிகிச்சை பெற்றபடி தொடர்ந்து ஆடினார். கேன் வில்லியம்சன் 74 ரன்கள் எடுத்த நிலையில் தைஜூல் இஸ்லாம் பந்து வீச்சில் அவரிடமே கேட்ச் கொடுத்து வெளியேறினார். ஆட்டம் முடிந்து நடையை கட்டிய கேன் வில்லியம்சன் உடனடியாக ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு காயம் அடைந்த தோள்பட்டையில் ‘ஸ்கேன்’ எடுத்து பரிசோதனை செய்யப்பட்டது. இதனால் அவர் நேற்று பீல்டிங் செய்யவில்லை. கேப்டன் பொறுப்பை டிம் சவுதி கவனித்தார். கேன் வில்லியம்சன் கடைசி நாள் ஆட்டத்தில் விளையாடுவது ஸ்கேன் பரிசோதனை முடிவை பொறுத்தே அமையும்.

அடுத்து ஹென்றி நிகோல்ஸ், ராஸ் டெய்லருடன் ஜோடி சேர்ந்தார். இருவரும் அடித்து ஆடி அணியின் ஸ்கோரை உயர்த்தினார்கள். ஸ்கோர் 396 ரன்னாக உயர்ந்த போது 5-வது சதம் கண்டு இருந்த ஹென்றி நிகோல்ஸ் (107 ரன்கள், 129 பந்துகளில் 9 பவுண்டரியுடன்) போல்டு ஆனார். 4-வது விக்கெட்டுக்கு ராஸ் டெய்லர்-ஹென்றி நிகோல்ஸ் இணை 216 ரன்கள் சேர்த்தது.

நிலைத்து நின்று ஆடிய ராஸ் டெய்லர் 212 பந்துகளில் 19 பவுண்டரி, 4 சிக்சருடன் 200 ரன்கள் எடுத்த நிலையில் முஸ்தாபிஜூர் ரகுமான் பந்து வீச்சில் விக்கெட் கீப்பர் லிட்டான் தாசிடம் கேட்ச் கொடுத்து பெவிலியன் திரும்பினார். டெஸ்ட் போட்டியில் ராஸ் டெய்லர் அடித்த 3-வது இரட்டை சதம் இதுவாகும். அடுத்து களம் கண்ட வாட்லிங் 8 ரன்னில் ஆட்டம் இழந்தார். நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 84.5 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 432 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. காலின் டி கிரான்ட்ஹோம் 23 ரன்னுடன் ஆட்டம் இழக்காமல் இருந்தார். வங்காளதேச அணி தரப்பில் அபு ஜெய்த் 3 விக்கெட்டும், தைஜூல் இஸ்லாம் 2 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

221 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை ஆடிய வங்காளதேச அணி நேற்றைய ஆட்ட நேரம் முடிவில் 23 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 80 ரன்கள் எடுத்தது. முகமது மிதுன் 25 ரன்னுடனும், சவும்யா சர்கார் 12 ரன்னுடனும் ஆட்டம் இழக்காமல் உள்ளனர். இன்று (செவ்வாய்க்கிழமை) 5-வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நடக்கிறது. மழை குறுக்கிடு இல்லாவிட்டால் இந்த ஆட்டத்தில் நியூசிலாந்து அணி வெற்றி பெற அதிக வாய்ப்பு உள்ளது.


Next Story