‘உலக கோப்பை அணியில் இடம் பெறுவது யார் என்பதில் தெளிவாக இருக்கிறோம்’ - இந்திய கேப்டன் விராட் கோலி


‘உலக கோப்பை அணியில் இடம் பெறுவது யார் என்பதில் தெளிவாக இருக்கிறோம்’ - இந்திய கேப்டன் விராட் கோலி
x
தினத்தந்தி 14 March 2019 11:43 PM GMT (Updated: 14 March 2019 11:43 PM GMT)

உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணியில் யார்-யார் இடம் பெறுவார்கள் என்பதில் தெளிவாக இருக்கிறோம் என்று இந்திய கேப்டன் விராட் கோலி கூறினார்.

புதுடெல்லி,

டெல்லியில் நேற்று முன்தினம் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 5-வது மற்றும் கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 35 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. முதல் 2 ஆட்டங்களில் வெற்றி பெற்ற இந்திய அணி, அடுத்த 3 ஆட்டங்களில் வரிசையாக தோற்று தொடரையும் கோட்டை விட்டது. உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு முன்பாக இந்தியாவுக்கு ஏற்பட்ட சறுக்கல் பல்வேறு விமர்சனங்களை கிளப்பியுள்ளது.

இந்திய அணி அடுத்து ஐ.பி.எல். போட்டியில் விளையாடி விட்டு நேரடியாக மே 30-ந்தேதி இங்கிலாந்தில் தொடங்கும் உலக கோப்பை போட்டியில் பங்கேற்க உள்ளது. 15 பேர் கொண்ட இந்திய அணியில் யார்-யார் இடம் பெறுவார்கள்? என்பது கிட்டத்தட்ட முடிவு செய்யப்பட்டு விட்டது. ஆனாலும் ஆஸ்திரேலிய தொடரில் சந்தித்த தோல்வி காரணமாக அணிக்குள் ஏதாவது மாற்றம் நிகழுமா? என்ற கேள்வியும் எழாமல் இல்லை.

இது தொடர்பாக இந்திய கேப்டன் விராட் கோலி அளித்த பேட்டியில் கூறியதாவது:-

ஆஸ்திரேலியாவுடன் ஏற்பட்ட தோல்வியால் ஓய்வறையில் இருக்கும் நாங்கள் (வீரர்கள்) பயப்படவில்லை. இதே போல் பயிற்சியாளர் குழுவினர், உணர்வு ரீதியாக தளர்ந்து போய் விடவில்லை. ஏனெனில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி 3 ஒரு நாள் போட்டிகளில் எங்களுக்கு என்ன வேண்டுமோ அதைத்தான் செய்து பார்த்தோம். இந்த ஒரு நாள் தொடருக்கு பிறகு அடுத்த சர்வதேச போட்டி உலக கோப்பை தொடர் தான் என்பதை தெரிந்து தான் ஆடினோம். ஒரு அணியாக நாங்கள் சரியான கலவையில் இருப்பதாகவே உணர்கிறோம். மற்றபடி நெருக்கடியான தருணங்களில் எங்களை விட ஆஸ்திரேலிய அணியினர் பதற்றமின்றி சிறப்பாக செயல்பட்டனர் அவ்வளவு தான்.

கடைசி மூன்று ஆட்டங்களில் அணியில் வெளியே இருக்கும் வீரர்களின் பலத்தையும் சோதித்து பார்க்கவே அவர்களுக்கு வாய்ப்பு வழங்கினோம். குறிப்பிட்ட நிலையில் எப்படி ஆடுகிறார்கள் என்பதை பார்த்தோம். இதைவிட்டால் சோதனை முயற்சிக்கு வேறு ஆட்டங்களும் இல்லை. இதை நான் தோல்விக்கான காரணமாக சொல்லவில்லை. எந்த அணியாக இருந்தாலும் கிரிக்கெட்டில் தரத்தை உயர்த்த வேண்டும். ஆடும் லெவனில் செய்த மாற்றத்தால் தோல்வி என்று சாக்குபோக்கு சொல்ல விரும்பவில்லை.

உலக கோப்பை போட்டி தொடரில் களம் காணும் இந்திய லெவன் அணியில் யார்-யார் இடம் பிடிப்பார்கள் என்பது ஏற்கனவே முடிவு செய்யப்பட்ட ஒன்று. அதில் நாங்கள் தெளிவாக இருக்கிறோம். வேண்டும் என்றால், சீதோஷ்ண நிலையை பொறுத்து ஒரு இடத்தில் மட்டும் மாற்றம் இருக்கும் என்று எதிர்பார்க்கிறோம். இதே போல் ஒட்டுமொத்த அணியில் ஒரு இடம் குறித்து மட்டும் ஆலோசிக்க வேண்டி உள்ளது. ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்டயா திரும்பும் போது, மேலும் பல்வேறு வாய்ப்புகள் நமக்கு உருவாகும்.

உலக கோப்பை கிரிக்கெட்டில் ஆடும் வாய்ப்புள்ள இந்திய வீரர்கள், ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் மிகுந்த கவனமுடன் இருக்க வேண்டும். தங்களது பணிச்சுமை குறித்து ஐ.பி.எல். அணி நிர்வாகத்துடன் கலந்து ஆலோசிக்க வேண்டும். தேவைப்பட்டால் அணி நிர்வாகத்திடம் கூறி ஓய்வு எடுக்க வேண்டும். இதற்கு வீரர்கள் தான் பொறுப்பு. இந்த விஷயத்தில் நாம் யாரையும் கட்டாயப்படுத்த முடியாது. அத்துடன் அணியின் உடல்தகுதி நிபுணர் பாட்ரிக் பர்ஹட்டுடன் தொடர்ந்து தொடர்பில் இருக்க வேண்டும்.

உலக கோப்பை கிரிக்கெட் போட்டி 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படுகிறது. ஆனால் ஐ.பி.எல். போட்டி ஆண்டுதோறும் வருகிறது. அதற்காக ஐ.பி.எல் போட்டியில் முழு அர்ப்பணிப்புடன் ஆடமாட்டோம் என்று சொல்லவில்லை. ஆனால் காயம் ஏதும் அடையாத வகையில் சாதுர்யமாக செயல்பட வேண்டும். யாரும் உலக கோப்பை போட்டியை தவறவிட விரும்பமாட்டார்கள் என்பதை அனைவரும் அறிவர். முக்கியமான வீரர் விளையாட முடியாமல் போனால், அணியின் சரியான கலவையில் பாதிப்பு ஏற்படும்.

உண்மையை சொல்ல வேண்டும் என்றால், உலக கோப்பையை வெல்ல குறிப்பிட்ட அணிக்கு தான் வாய்ப்பு என்று உறுதியாக சொல்ல முடியாது. உலக கோப்பையில் ஒவ்வொரு அணியும் அபாயகரமானவை தான். எந்த அணியும், எந்த ஒரு அணியாலும் தோற்கடிக்கப்படலாம். ஒரு அணி முழு உத்வேகத்துடன் வீறுநடை போட ஆரம்பித்து விட்டால் அவர்களை தடுத்து நிறுத்துவது கடினம்.

இங்கிலாந்து வலுவான அணியாக விளங்குகிறது. ஆஸ்திரேலியாவும் இப்போது பார்க்க நன்றாகவே இருக்கிறது. நாங்களும் பலமிக்க அணி தான். நியூசிலாந்து சிறந்த அணி, பாகிஸ்தானும் தங்களுக்குரிய நாளாக அமைந்தால் எந்த அணியையும் வீழ்த்தி விடும். நியூசிலாந்து, தென்ஆப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீசையும் குறைத்து மதிப்பிட முடியாது. இந்த உலக கோப்பையில் ஒவ்வொரு ஆட்டங்களும் பரபரப்பு நிறைந்ததாக இருக்கும். இவ்வாறு கோலி கூறினார்.


Next Story