ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இன்று 2 ஆட்டங்கள் கொல்கத்தா-ஐதராபாத், மும்பை-டெல்லி அணிகள் மோதல்


ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இன்று 2 ஆட்டங்கள் கொல்கத்தா-ஐதராபாத், மும்பை-டெல்லி அணிகள் மோதல்
x
தினத்தந்தி 23 March 2019 10:30 PM GMT (Updated: 23 March 2019 8:55 PM GMT)

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இன்று நடக்கும் ஆட்டங்களில் கொல்கத்தா-ஐதராபாத் (மாலை 4 மணி), மும்பை-டெல்லி (இரவு 8 மணி) அணிகள் மோதுகின்றன.

கொல்கத்தா,

12-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி நேற்று தொடங்கியது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், ஐதராபாத் சன்ரைசர்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், மும்பை இந்தியன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப், டெல்லி கேப்பிட்டல்ஸ் ஆகிய 8 அணிகள் பங்கேற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் உள்ளூர் -வெளியூர் அடிப்படையில் தலா 2 முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் டாப்-4 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முந்தைய ‘பிளே-ஆப்’ சுற்றுக்கு முன்னேறும்.

போட்டியின் 2-வது நாளான இன்று (ஞாயிற்றுக்கிழமை) இரண்டு லீக் ஆட்டங்கள் நடக்கின்றன. மாலை 4 மணிக்கு கொல்கத்தா ஈடன்கார்டனில் அரங்கேறும் ஒரு ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்கள் கொல்கத்தா நைட் ரைடர்சும், ஐதராபாத் சன்ரைசர்சும் மோதுகின்றன.

பந்தை சேதப்படுத்திய சர்ச்சையில் சிக்கிய ஐதராபாத் அணியின் முன்னாள் கேப்டன் டேவிட் வார்னருக்கு கடந்த ஆண்டு ஐ.பி.எல்.-ல் விளையாட தடை விதிக்கப்பட்டது. சர்வதேச போட்டியில் பங்கேற்பதற்கு மார்ச் 28-ந்தேதி வரை தடை காலம் நீடித்தாலும் கிளப் போட்டிகளில் அவர் விளையாட தகுதியானவராகவே இருக்கிறார். இதனால் இன்றைய ஆட்டத்தில் அவர் களம் காணுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2016-ம் ஆண்டு ஐதராபாத் அணி அவரது தலைமையில் தான் வாகை சூடியது. இப்போது அவர் எல்லா ஆட்டங்களிலும் விளையாட ஆர்வமாக இருந்தாலும் அவருக்கு கேப்டன் பதவியை வழங்க அணி நிர்வாகம் தயாராக இல்லை. கேன் வில்லியம்சன் கேப்டனாகவும், புவனேஷ்வர்குமார் துணை கேப்டனாகவும் செயல்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தோள்பட்டை காயத்தில் சிக்கிய வில்லியம்சன் அனேகமாக இந்த ஆட்டத்தில் ஆடமாட்டார் என்று தெரிகிறது. அவருக்கு பதிலாக புவனேஷ்வர்குமார் அணியை வழிநடத்துவார். இவர்களை தவிர, மார்ட்டின் கப்தில், யூசுப் பதான், விருத்திமான் சஹா, மனிஷ் பாண்டே, விஜய் சங்கர் ஆகியோரும் பேட்டிங்கில் நம்பிக்கை அளிக்கிறார்கள். உலகத்தரம் வாய்ந்த சுழற்பந்து வீச்சாளர் ரஷித்கான் ஐதராபாத் அணியின் துருப்பு சீட்டாக இருப்பார்.

தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா அணிக்கு உள்ளூரில் ஆடுவது சாதகமான அம்சமாகும். ஆந்த்ரே ரஸ்செல், சுப்மான் கில், நிதிஷ் ராணா, கிறிஸ் லின், உத்தப்பா, பிராத்வெய்ட் ஆகியோர் பேட்டிங்கிலும், சுனில் நரின், குல்தீப் யாதவ் ஆகியோர் சுழற்பந்து வீச்சிலும் மிரட்ட காத்திருக்கிறார்கள். இரு அணிகளுமே பலம் வாய்ந்தவை என்பதால் போட்டியில் சுவாரஸ்யத்துக்கு குறைவிருக்காது. இவ்விரு அணிகளும் இதுவரை 15 ஆட்டங்களில் நேருக்கு நேர் சந்தித்துள்ளன. இதில் 6-ல் ஐதராபாத்தும், 9-ல் கொல்கத்தாவும் வெற்றி பெற்றுள்ளன.

இரவு 8 மணிக்கு மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நடக்கும் மற்றொரு ஆட்டத்தில் 3 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி, டெல்லி கேப்பிட்டல்சை எதிர்கொள்கிறது.

டெல்லி டேர்டெவில்ஸ் அணி இந்த சீசனில் டெல்லி கேப்பிட்டல்ஸ் என்ற பெயர் மாற்றத்துடன் அடியெடுத்து வைக்கிறது. பெயர் மாற்றத்துக்கு பலன் கிடைக்குமா? என்பது போக போகத் தான் தெரிய வரும். கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர், ஷிகர் தவான், ரிஷாப் பான்ட், ஹனுமா விஹாரி, பிரித்வி ஷா, கிறிஸ் மோரிஸ் ஆகியோர் பேட்டிங்கில் ஒருங்கிணைந்து விளையாடினால் இந்த சீசனில் அபாயகரமான அணிகளில் ஒன்றாக டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி ஜொலிக்கும் என்பதில் சந்தேகமில்லை.

கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள அணிகளில் ஒன்றான ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ், இந்த சீசனை வெற்றியுடன் தொடங்கும் முனைப்புடன் உள்ளது. நியூசிலாந்தை சேர்ந்த ஆடம் மில்னே காலில் ஏற்பட்ட காயத்தால் தொடரில் இருந்து விலகியிருக்கிறார். ‘யார்க்கர் மன்னன்’ மலிங்கா உள்ளூர் போட்டிகளில் ஆட வேண்டி இருப்பதால் குறைந்தது மும்பை அணிக்குரிய முதல் 6 ஆட்டங்களில் ஆட இயலாது என்று தெரிவித்துள்ளார். இது மும்பை அணிக்கு சற்று பின்னடைவு தான் என்றாலும் பாண்ட்யா சகோதரர்கள், பொல்லார்ட், பும்ரா, குயின்டான் டி காக், இவின் லீவிஸ், மயங்க் மார்கண்டே, இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ் என்று ஒரு நட்சத்திர பட்டாளமே அந்த அணியில் அங்கம் வகிக்கிறது. சொந்த ஊரில் ஆடுவது அந்த அணியை இன்னும் அதிகமாக உசுப்பேற்றும். 6-வது ஐ.பி.எல். அணியாக மும்பை இந்தியன்சுடன் புதிதாக இணைந்துள்ள யுவராஜ்சிங் பழைய பாணியில் ஆடுவாரா? என்ற ஆவலும் ரசிகர்கள் மத்தியில் நிலவுகிறது. இவ்விரு அணிகளும் இதுவரை 22 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதி அவற்றில் தலா 11-ல் வெற்றி கண்டுள்ளன.

போட்டிகளை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1, 2, தமிழ் மற்றும் விஜய் சூப்பர் ஆகிய சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.

Next Story