‘7 மாதங்கள் எனக்கு கடினமான காலகட்டமாக இருந்தது’ சென்னைக்கு எதிரான ஆட்டத்தில் அசத்திய ஹர்திக் பாண்ட்யா உருக்கம்


‘7 மாதங்கள் எனக்கு கடினமான காலகட்டமாக இருந்தது’ சென்னைக்கு எதிரான ஆட்டத்தில் அசத்திய ஹர்திக் பாண்ட்யா உருக்கம்
x
தினத்தந்தி 4 April 2019 10:15 PM GMT (Updated: 4 April 2019 10:15 PM GMT)

‘காயம் மற்றும் சர்ச்சை காரணமாக கடந்த 7 மாதங்கள் தனக்கு கடினமான காலகட்டமாக இருந்தது’ என்று மும்பை இந்தியன்ஸ் வீரர் ஹர்திக் பாண்ட்யா உருக்கமுடன் கூறினார்.

மும்பை,

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் நேற்று முன்தினம் இரவு மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நடந்த 15-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி 37 ரன்கள் வித்தியாசத்தில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்சை வீழ்த்தியது. இதில் மும்பை இந்தியன்ஸ் நிர்ணயித்த 171 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய சென்னை அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுக்கு 133 ரன்கள் மட்டுமே எடுத்து இந்த சீசனில் முதல் தோல்வியை தழுவியது. அதிகபட்சமாக கேதர் ஜாதவ் 58 ரன்கள் எடுத்தார். கேப்டன் டோனி (12 ரன்), சுரேஷ் ரெய்னா (16 ரன்) ஏமாற்றம் அளித்தனர்.

ஐ.பி.எல். வரலாற்றில் மும்பை அணியின் 100-வது வெற்றி (சூப்பர் ஓவரில் கிடைத்த ஒரு வெற்றியும் அடங்கும்) இதுவாகும். இந்த மைல்கல்லை எட்டிய முதல் அணி மும்பை தான். இந்த ஆட்டத்தில் ஆல்-ரவுண்டராக ஜொலித்த மும்பை வீரர் ஹர்திக் பாண்ட்யா (8 பந்தில் 3 சிக்சருடன் 25 ரன் மற்றும் 3 விக்கெட்) ஆட்டநாயகன் விருது பெற்றார்.

பின்னர் ஹர்திக் பாண்ட்யா கூறுகையில், ‘அணியின் வெற்றிக்கு எனது பங்களிப்பை அளித்தது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. ஐ.பி.எல்.-ல் முழு உத்வேகத்துடன் விளையாட வேண்டும். அதன் பிறகு இந்திய அணி உலக கோப்பையை வெல்வதற்கு உதவிட வேண்டும் என்பதில் கவனம் செலுத்தி வருகிறேன். அது தான் இப்போது எனது ஒரே நோக்கம்.

7 மாதங்கள் எனக்கு மிகவும் கடினமான காலகட்டமாக இருந்தது. காயத்தால் அவதிப்பட்டேன். அதன் பிறகு சர்ச்சையில் (பெண்கள் குறித்து இழிவாக பேசிய விவகாரம்) சிக்கினேன். அப்போது என்ன செய்வது என்றே தெரியாமல் தவித்தேன். ஆனாலும் இடைவிடாது தொடர்ந்து பேட்டிங் பயிற்சி மேற்கொண்டேன். அந்த கடினமான தருணங்களில் எனக்கு பக்கபலமாக இருந்த எனது குடும்பத்தினர், நண்பர்களுக்கு இந்த ஆட்டநாயகன் விருதை அர்ப்பணிக்கிறேன். டோனி போன்று ஹெலிகாப்டர் ஷாட்டுடன் சிக்சரை அவரது முன்னிலையில் அடித்ததை சிறப்பு வாய்ந்ததாக கருதுகிறேன். இந்த வகை ஷாட் அடிக்க கடினமாக உழைத்து வருகிறேன். பந்தை சிக்சருக்கு தூக்கியதும் டோனி என்னிடம் வந்து நல்ல ஷாட் என்று பாராட்டுவார் என்று எதிர்பார்த்தேன்’ என்றார்.

தோல்விக்கு பிறகு சென்னை கேப்டன் டோனி கூறுகையில், ‘எங்களுக்கு சில விஷயங்கள் தவறாக போய் விட்டன. பந்து வீச்சில் தொடக்கம் நன்றாகத் தான் இருந்தது. 12-13 ஓவர்கள் வரை ஆட்டம் எங்களது கட்டுப்பாட்டில் தான் இருந்தது. அதன் பிறகு சில கேட்ச்கள் நழுவி போயின. பீல்டிங்கும் சரியில்லை. இறுதிகட்ட பந்து வீச்சும் மெச்சும்படி இல்லை. இவை எல்லாம் பின்னடைவாக அமைந்தன. இன்னும் சில பகுதிகளில் நாங்கள் முன்னேற்றம் காண வேண்டி உள்ளது. தனிப்பட்ட வீரர்கள் பொறுப்பை எடுத்துக் கொண்டு விளையாட வேண்டும். ஏற்கனவே காயத்தால் சில வீரர்கள் விலகிய நிலையில், இப்போது வெய்ன் பிராவோ தசைப்பிடிப்பால் அவதிப்பட்டு வருகிறார். இதனால் அடுத்த போட்டிக்கு சரியான கூட்டணியுடன் இறங்குவது குறித்து ஆலோசிக்க வேண்டி உள்ளது’ என்று குறிப்பிட்டார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது அடுத்த ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப்பை நாளை (மாலை 4 மணி) சென்னை சேப்பாக்கத்தில் சந்திக்கிறது.

Next Story