மும்பை அணியிடம் வீழ்ந்தது சென்னை: ‘மோசமான பேட்டிங் தோல்விக்கு காரணம்’ கேப்டன் டோனி பேட்டி


மும்பை அணியிடம் வீழ்ந்தது சென்னை: ‘மோசமான பேட்டிங் தோல்விக்கு காரணம்’ கேப்டன் டோனி பேட்டி
x
தினத்தந்தி 8 May 2019 11:15 PM GMT (Updated: 8 May 2019 8:35 PM GMT)

ஐ.பி.எல். கிரிக்கெட்டின் முதலாவது தகுதி சுற்றில் மோசமான பேட்டிங்கால் மும்பை அணியிடம் தோல்வி கண்டோம் என்று சென்னை அணியின் கேப்டன் டோனி தெரிவித்தார்.

சென்னை,

ஐ.பி.எல். கிரிக்கெட்டின் முதலாவது தகுதி சுற்றில் மோசமான பேட்டிங்கால் மும்பை அணியிடம் தோல்வி கண்டோம் என்று சென்னை அணியின் கேப்டன் டோனி தெரிவித்தார்.

சென்னை அணி தோல்வி

12–வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி தொடரில் சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நேற்று முன்தினம் இரவு நடந்த முதலாவது தகுதி சுற்று ஆட்டத்தில் 3 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தி 5–வது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. மும்பை அணி 2010, 2013, 2015, 2017–ம் ஆண்டுகளிலும் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்று இருந்தது. மும்பை அணி இந்த சீசனில் தொடர்ச்சியாக 3 ஆட்டங்களில் சென்னை அணியை வீழ்த்தி இருக்கிறது.

சென்னை அணி நிர்ணயித்த 132 ரன் இலக்கை நோக்கி ஆடிய மும்பை அணி 18.3 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு வெற்றி இலக்கை எட்டிப்பிடித்தது. தோல்வி அடைந்தாலும் சென்னை அணிக்கு இறுதிப்போட்டிக்கு தகுதி பெற இன்னொரு வாய்ப்பு உள்ளது. 54 பந்துகளில் 10 பவுண்டரியுடன் 71 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்த மும்பை அணி வீரர் சூர்யகுமார் யாதவ் ஆட்டநாயகன் விருது பெற்றார்.

டோனி பேட்டி

தோல்வி குறித்து சென்னை அணியின் கேப்டன் டோனி கூறியதாவது:–

போட்டி என்றால் ஒருவர் தோற்கத்தான் செய்வார். இந்த ஆட்டம் நாங்கள் எதிர்பார்த்தபடி அமையவில்லை. குறிப்பாக பேட்டிங்கை சொல்லலாம். ஆடுகளத்தின் தன்மையை விரைவாக கணிக்க வேண்டியது முக்கியமானதாகும். சேப்பாக்கம் மைதானத்தில் நாங்கள் 7 ஆட்டங்களில் விளையாடி விட்டோம். மற்ற அணிகளை விட சொந்த ஆடுகளத்தின் தன்மையை நாங்கள் நன்றாக தெரிந்து இருக்க வேண்டும். சொந்த மண்ணில் ஆடுவது சாதகம் என்றாலும், ஆடுகளத்தின் தன்மை எப்படி இருக்கும் என்பதை அறிந்து இருக்க வேண்டியது முக்கியமானதாகும். எங்களது மோசமான பேட்டிங் தோல்விக்கு காரணமாகும். நாங்கள் பேட்டிங்கில் இன்னும் முன்னேற்றம் காண வேண்டும்.

திறமையான பேட்ஸ்மேன்கள் எங்கள் அணியில் இருக்கிறார்கள். ஆனால் சில நேரங்களில் அவர்கள் மோசமான ஷாட் ஆடி ஆட்டம் இழக்கிறார்கள். ஆனால் அவர்களிடம் நல்ல அனுபவம் இருக்கிறது. சூழ்நிலையை உணர்ந்து அடுத்த ஆட்டத்தில் அவர்கள் நன்றாக விளையாடுவார்கள் என்று நம்புகிறேன்.

அதிஷ்டம் இல்லை

பந்து வீச்சை பொறுத்தமட்டில் எங்களுக்கு அதிர்ஷ்டம் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். சில கேட்ச்களை தவற விட்டோம். பந்து வீச்சில் நாங்கள் இன்னும் நேர்த்தியாக செயல்பட்டு இருக்கலாம். 131 ரன்கள் என்பது போதுமான ஸ்கோர் கிடையாது. இந்த மாதிரியான இலக்குடன் ஆடுகையில் ஒரு பவுண்டரி விட்டால் கூட சிக்கலை ஏற்படுத்தும். நேரடியாக இறுதிப்போட்டிக்கு செல்ல முடியவில்லை. 2–வது தகுதி சுற்றில் விளையாட வேண்டியது இருக்கிறது. அதாவது எங்களது பயணம் சற்று நீண்டு இருக்கிறது. அதிர்ஷ்டவசமாக புள்ளிபட்டியலில் டாப்–2 இடங்களுக்குள் வந்ததால் இறுதிப்போட்டிக்கான 2–வது வாய்ப்பு கிடைத்து இருக்கிறது.

இவ்வாறு டோனி கூறினார்.

பவுலர்களுக்கு பாராட்டு

வெற்றிக்கு பிறகு மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மா அளித்த பேட்டியில், ‘சிறந்த முயற்சியில் இறுதிப்போட்டிக்கு முன்னேறி இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இறுதிப்போட்டிக்கு முன்பாக 3 நாட்கள் இடைவெளி கிடைத்து இருப்பது நல்ல வி‌ஷயமாகும். எங்கள் அணியின் பந்து வீச்சாளர்கள் சென்னை அணியை கட்டுப்படுத்துவார்கள் என்பது எனக்கு தெரியும். அதேபோல் பேட்ஸ்மேன்கள் மீதும் நல்ல நம்பிக்கை இருந்தது. ஜெயந்த் யாதவ் தரமான பந்து வீச்சாளர். டோனியை கட்டுப்படுத்த திட்டம் வைத்து இருந்தோம். சென்னை அணியை 131 ரன்களுக்குள் கட்டுப்படுத்தியது பெரிய வி‌ஷயமாகும். எங்களது பவுலர்கள் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தினார்கள். சூர்யகுமார் யாதவ் சுழற்பந்து வீச்சை சிறப்பாக எதிர்கொள்ளக்கூடிய பேட்ஸ்மேன். அவரது பேட்டிங் அருமையாக இருந்தது. எங்கள் அணியில் வீரர்கள் சரியான கலவையில் இடம் பெற்றுள்ளனர். எல்லா வகையிலான சூழ்நிலையிலும் சிறப்பாக செயல்படக்கூடிய வீரர்கள் எங்கள் அணியில் உள்ளனர். சென்னை ஆடுகளத்தில் நாங்கள் சிறப்பாக செயல்பட அதுவும் ஒரு காரணமாகும். சென்னை ஆடுகளத்தின் தன்மையை நாங்கள் நன்றாக உணர்ந்து இருந்தோம்’ என்று தெரிவித்தார்.

ஆட்டநாயகன் விருது பெற்ற மும்பை அணி வீரர் சூர்யகுமார் யாதவ் கருத்து தெரிவிக்கையில், ‘டாப்–4 பேட்ஸ்மேன்களில் யாராவது ஒருவர் கடைசி வரை நிலைத்து நின்று விளையாட வேண்டும் என்று முடிவு செய்து செயல்பட்டோம். ஏனெனில் பிட்ச் மெதுவாக இருந்ததுடன், பந்து நன்கு சுழன்றது. அதனால் அதிரடியாக அடித்து ஆடுவது கடினம் என்பதை உணர்ந்து தூக்கி அடித்து ஆடாமல் தரையோடு பந்தை அடித்து விளையாடினேன். பின்வரிசையில் வரும் வீரர்கள் பேட்டிங் செய்வது கடினமானதாக இருந்தது’ என்றார்.


Next Story