டோனி ரன் அவுட் ஆனதுதான் ஆட்டத்தின் முக்கிய தருணம்: சச்சின் டெண்டுல்கர்


டோனி ரன் அவுட் ஆனதுதான் ஆட்டத்தின் முக்கிய தருணம்: சச்சின் டெண்டுல்கர்
x
தினத்தந்தி 13 May 2019 4:51 AM GMT (Updated: 2019-05-13T10:21:45+05:30)

டோனி ரன் அவுட் ஆனதுதான் ஆட்டத்தின் முக்கிய தருணமாக இருந்தது என்று சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.

ஐதராபாத்,

ஐதராபாத்தில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இறுதி ஆட்டத்தில், டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின. கடைசி ஓவர் வரை பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் 1 ரன் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி வென்று சாம்பியன் பட்டத்தை வென்றது. 150 ரன்களை இலக்காக கொண்டு விளையாடிய சென்னை  சூப்பர் கிங்ஸ் அணி, 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு  148 ரன்கள் சேர்த்து தோல்வியை தழுவியது. 

இந்த போட்டிக்கு பிறகு, வர்ணணையாளர்களிடம் பேசிய சச்சின் டெண்டுல்கர் கூறியதாவது, “ டோனி ரன் அவுட் ஆனதுதான் ஆட்டத்தின் முக்கிய தருணமாக இருந்தது. அதேபோல், மலிங்கா ஒரு ஓவரை மோசமாக வீசிய போதும், பும்ரா அற்புதமாக வீசியதும் வெற்றிக்கு முக்கிய பங்காக விளங்கியது.  கடைசி ஓவரில் ஆட்டத்தை வெற்றிகரமாக மலிங்கா முடித்து வைத்தார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, இறுதி போட்டியில் 129 ரன்கள் சேர்த்த போதும் நாங்கள் எதிரணியை கட்டுப்படுத்தி வெற்றி பெற்றிருந்தோம். எனவே எங்களுக்கு நம்பிக்கை இருந்தது” என்றார். 

ஆட்டத்தின் 13-வது ஓவரில் டோனி, 8 பந்துகளில் 2 ரன்கள் மட்டுமே சேர்த்து இருந்த நிலையில், இஷான் கிஷான் வீசிய நேரடி த்ரோவில் டோனி, ரன் அவுட் ஆனார். 

ரீப்ளேவின், ஒரு கோணத்தில் டோனி, கிரீசுக்குள் பேட்டை வைத்துது போலவும், இன்னொரு கோணத்தில் கீரிசை எட்டும் முன் பந்தை ஸ்டம்பை தாக்கியது போலவும் தெரிந்ததால், இந்த ரன் அவுட் ரசிகர்கள் மத்தியில் சலசலப்பை  ஏற்படுத்தியது. சமூக வலைத்தளங்களில் டோனியின் ரசிகர்கள் நடுவர்களை வசைபாடுவதையும் காண முடிந்தது.

Next Story