உலக கோப்பை போட்டிக்கான இந்திய அணி போதிய பலத்துடன் உள்ளது - பயிற்சியாளர் ரவிசாஸ்திரி பேட்டி


உலக கோப்பை போட்டிக்கான இந்திய அணி போதிய பலத்துடன் உள்ளது - பயிற்சியாளர் ரவிசாஸ்திரி பேட்டி
x
தினத்தந்தி 14 May 2019 11:30 PM GMT (Updated: 14 May 2019 11:10 PM GMT)

உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணி போதிய பலத்துடன் உள்ளது என்று தலைமை பயிற்சியாளர் ரவிசாஸ்திரி தெரிவித்தார்.

புதுடெல்லி,

நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா உள்பட 10 அணிகள் பங்கேற்கும் 12-வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் வருகிற 30-ந் தேதி முதல் ஜூலை 14-ந் தேதி வரை நடக்கிறது. இதில் ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா ஒரு முறை லீக் ஆட்டத்தில் மோத வேண்டும். லீக் ஆட்டம் முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறும்.

உலக கோப்பை போட்டியில் இந்திய அணி தனது தொடக்க லீக் ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்காவை (ஜூன் 5-ந் தேதி) எதிர்கொள்கிறது. உலக கோப்பை போட்டி குறித்து இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ரவிசாஸ்திரி அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது:-

உலக கோப்பை போட்டிக்கான இந்திய அணி போதிய பலத்துடன் உள்ளது. எங்கள் அணியில் நல்ல நெகிழ்ச்சி தன்மை இருக்கிறது. 4-வது வரிசையில் பேட்டிங் செய்ய நிறைய வீரர்கள் இருக்கிறார்கள். எனவே 4-வது வரிசை வீரர் குறித்து கவலைப்பட தேவையில்லை. அணியின் அனைத்து அடிப்படை அம்சங்களும் நேர்த்தியாக பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக நான் நினைக்கிறேன். அணியில் உள்ள 15 வீரர்களும் எந்த சமயத்திலும், எந்த நிலையிலும் களம் இறங்க தயாராக இருக்கிறார்கள்.

ஒருவேளை ஒரு வேகப்பந்து வீச்சாளருக்கு காயம் ஏற்பட்டாலும் மாற்று வேகப்பந்து வீச்சாளர் தயாராக இருக்கிறார். ஐ.பி.எல். போட்டியில் காயம் அடைந்த கேதர் ஜாதவுக்கு எலும்பு முறிவு எதுவும் ஏற்படாதது நல்ல விஷயமாகும். எனவே அவரது காயம் குறித்து பொறுத்து இருந்து பார்க்கலாம். அவரது உடல் தகுதியை சோதிக்க இன்னும் நிறைய நேரம் உள்ளது. ஐ.பி.எல். போட்டி தொடரில் குல்தீப் யாதவ் சிறப்பாக செயல்படாததால் எந்த கவலையும் இல்லை. ஐ.பி.எல். போட்டியில் இருந்து நான் முற்றிலும் ஒதுங்கி இருந்தேன். உலக கோப்பை போட்டிக்காக வருகிற 22-ந் தேதி விமானம் ஏறுகிறோம்.

அப்போது தான் அணியில் உள்ள வீரர்கள் யார் -யார்? என்பது உறுதியாக தெரியும். அதனை அப்போது பார்த்து கொள்ளலாம்.

4 ஆண்டுக்கு ஒரு முறை நடைபெறும் உலக கோப்பை போட்டி மிகப்பெரியதாகும். அந்த போட்டியில் அங்குள்ள சூழ்நிலைக்கு தகுந்தபடி எடுக்கும் முடிவு தான் மிகவும் முக்கியமானதாகும். இந்தமுறை வெஸ்ட்இண்டீஸ், ஆஸ்திரேலிய அணிகள் மிகப்பெரிய சவாலாக இருக்கும்.

கடந்த முறை நடந்த வெஸ்ட்இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டி தொடரில் நாம் அந்த அணியை வீழ்த்தி இருந்தாலும் அந்த போட்டி தொடர் கடினமானதாகவே இருந்தது. அந்த தொடரில் கிறிஸ் கெய்ல், ரஸ்செல் ஆகியோர் இல்லாவிட்டாலும் வெஸ்ட்இண்டீஸ் அணி சிறப்பாகவே செயல்பட்டது. தற்போது அந்த அணியில் அதிரடியாக ஆடக்கூடிய பலம் வாய்ந்த நிறைய வீரர்கள் உள்ளனர்.

கடந்த 25 ஆண்டுகளில் மற்ற அணிகளை விட ஆஸ்திரேலிய அணி தான் அதிக முறை உலக கோப்பையை வென்றுள்ளது. அத்துடன் தற்போது அந்த அணிக்கு எல்லா வீரர்களும் திரும்பி விட்டார்கள். அவர்கள் நல்ல பார்மில் இருக்கிறார்கள். உலக கோப்பை போட்டியில் குறிப்பிட்ட நாளில் எப்படி செயல்படுகிறோம் என்பது முக்கியமானதாகும். இவ்வாறு ரவிசாஸ்திரி கூறினார்.


Next Story