இங்கிலாந்தை வீழ்த்தியது ஆஸ்திரேலியா ஸ்டீவன் சுமித் சதம் அடித்தார்


இங்கிலாந்தை வீழ்த்தியது ஆஸ்திரேலியா ஸ்டீவன் சுமித் சதம் அடித்தார்
x
தினத்தந்தி 25 May 2019 10:00 PM GMT (Updated: 25 May 2019 9:13 PM GMT)

பயிற்சி கிரிக்கெட்டில் உலக சாம்பியன் ஆஸ்திரேலிய அணி, இங்கிலாந்துடன் மோதியது. ஸ்டீவன் சுமித் சதம் அடித்தார்.

சவுதம்டனில் நடந்த மற்றொரு பயிற்சி கிரிக்கெட்டில் உலக சாம்பியன் ஆஸ்திரேலிய அணி, இங்கிலாந்துடன் மோதியது. விரலில் ஏற்பட்ட காயம் காரணமாக இங்கிலாந்து கேப்டன் மோர்கன் ஆடவில்லை. அவருக்கு பதிலாக விக்கெட் கீப்பர் ஜோஸ் பட்லர் இங்கிலாந்து அணியை வழிநடத்தினார்.

இதில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா 9 விக்கெட் இழப்புக்கு 297 ரன்கள் குவித்தது. பந்தை சேதப்படுத்திய சர்ச்சையில் ஓராண்டு தடையை அனுபவித்து அணிக்கு திரும்பியுள்ள ஸ்டீவன் சுமித் சதம் (116 ரன், 102 பந்து, 8 பவுண்டரி, 3 சிக்சர்) அடித்து அசத்தினார். டேவிட் வார்னர் 43 ரன்களும், கேப்டன் ஆரோன் பிஞ்ச் 14 ரன்களும் எடுத்தனர். அடுத்து களம் புகுந்த இங்கிலாந்து அணிக்கு சீரான இடைவெளியில் விக்கெட் விழுந்தன. அதிகபட்சமாக ஜேம்ஸ் வின்ஸ் 64 ரன்களும், பொறுப்பு கேப்டன் ஜோஸ் பட்லர் 52 ரன்களும் (31 பந்து, 5 பவுண்டரி, 3 சிக்சர்) விளாசினர். கடைசி ஓவரில் இங்கிலாந்தின் வெற்றிக்கு 15 ரன்கள் தேவைப்பட்டது. ஆனால் இறுதி ஓவரில் எஞ்சிய இரு விக்கெட்டையும் இழந்து 2 ரன் மட்டுமே எடுத்தது. அந்த அணி 49.3 ஓவர்களில் 285 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இதன் மூலம் ஆஸ்திரேலியா 12 ரன்கள் வித்தியாசத்தில் ‘திரில்’ வெற்றியை பெற்றது.

முன்னதாக இங்கிலாந்து வீரர்கள் பீல்டிங் செய்து கொண்டிருந்த போது மார்க் வுட், ஜோப்ரா ஆர்ச்சர் ஆகியோர் காயத்தால் வெளியேற நேரிட்டது. இதனால் வேறு வழியின்றி இங்கிலாந்து அணியின் உதவி பயிற்சியாளரும், முன்னாள் வீரருமான காலிங்வுட் சற்று நேரம் பீல்டிங் செய்ய வேண்டிய நிலைமை ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து ஓய்வு அளிக்கப்பட்டிருந்த ஜோ ரூட் களத்திற்கு அழைக்கப்பட்டார்.

Next Story