கிரிக்கெட்

பாகிஸ்தான் ரசிகருக்கு இலவசமாக டிக்கெட் வழங்கும் டோனி + "||" + Dhoni is offering free tickets to Pakistani fan

பாகிஸ்தான் ரசிகருக்கு இலவசமாக டிக்கெட் வழங்கும் டோனி

பாகிஸ்தான் ரசிகருக்கு இலவசமாக டிக்கெட் வழங்கும் டோனி
பாகிஸ்தான் ரசிகர் ஒருவருக்கு இலவசமாக டிக்கெட் ஒன்றை, இந்திய அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் டோனி வழங்க உள்ளார்.
புதுடெல்லி,

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை நேரில் பார்க்க டிக்கெட் கிடைப்பது என்பது குதிரை கொம்பாகவே இருக்கும். ஆனால் பாகிஸ்தானில் பிறந்து அமெரிக்காவில் உணவகம் நடத்தி வரும் 63 வயதான தீவிர கிரிக்கெட் ரசிகர் முகமது பஷிருக்கு 2011-ம் ஆண்டு உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இருந்து இந்தியா-பாகிஸ்தான் மோதலை பார்க்க இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரரான டோனி இலவசமாக டிக்கெட் வழங்கி வருகிறார் என்ற ருசிகர தகவல் வெளியாகி இருக்கிறது.


இது குறித்து முகமது பஷிர் மான்செஸ்டரில் நேற்று அளித்த ஒரு பேட்டியில், ‘உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா-பாகிஸ்தான் ஆட்டத்தை பார்ப்பதற்காக நேற்று இங்கிலாந்து வந்தேன். இந்த போட்டிக்கான ஒரு டிக்கெட்டுக்கு ரூ.80 ஆயிரம் வரை கொடுக்க மக்கள் தயாராக இருக்கிறார்கள். இது நான் சிகாகோவுக்கு திரும்பும் விமான டிக்கெட் தொகைக்கு சமமானதாகும். இந்த போட்டிக்காக டிக்கெட் வாங்க நான் கஷ்டப்படவில்லை. அதற்கு காரணமான டோனிக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். டோனி மிகவும் பிசியாக இருப்பார் என்பதால் அவரை நான் செல்போனில் அழைப்பது கிடையாது. குறுந்தகவல்கள் அனுப்பி அவருடனான எனது பழக்கத்தை தொடர்ந்து வருகிறேன். டிக்கெட் தருவதாக டோனி உறுதி அளித்ததாலேயே முன்கூட்டியே இங்கு வந்தேன். டோனி மிகுந்த மனிதநேயம் மிக்கவர். 2011-ம் ஆண்டு உலக கோப்பை போட்டியில் இருந்து எனக்கு அவர் டிக்கெட் வழங்கி வருகிறார். எனக்கு டோனி செய்வது போல் வேறு யாரும் செய்வார்கள் என்று நினைத்து கூட பார்க்க முடியாது. எனக்கு இலவசமாக ஒரு டிக்கெட் கிடைப்பதை அதிர்ஷ்டமாக கருதுகிறேன்.

டோனிக்கு எதிர்பாராத நினைவுப்பரிசை வழங்க கொண்டு வந்து இருக்கிறேன். அவரை சந்தித்து இந்த பரிசை வழங்க முடியும் என்று நம்புகிறேன். இந்திய அணியின் ரசிகர் சுதிரும் (இந்திய தேசிய கொடியின் வண்ணத்தை வரைந்தபடி எல்லா ஆட்டங்களை நேரில் பார்க்க செல்லும் ரசிகர்) நானும் ஒரே அறையில் தங்க ஓட்டலில் முன்பதிவு செய்து இருக்கிறேன். சுதிருக்கு நான் ஒரு செல்போனை பரிசாக வழங்கினேன். அவர் மிக்க மகிழ்ச்சி அடைந்தார். இதுபோன்ற சிறிய விஷயங்கள் தான் வாழ்க்கையில் மகிழ்ச்சியை அளிக்கிறது. எனது உடல் நிலை சீராக இல்லாவிட்டாலும் கிரிகெட்டுக்காக மட்டுமே நான் வாழ்ந்து கொண்டு இருக்கிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.

முகமது பஷிர் போட்டியை பார்க்கையில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் தேசிய கொடிகளை ஒரு சேர வைத்து இருக்கும் பழக்கம் கொண்டவர். முகமது பஷிர் நேற்று பாகிஸ்தான் அணி வீரர்களை சந்தித்து பேசினார். அவர் இந்திய வீரர்களையும் சந்தித்து வாழ்த்து சொல்ல திட்டமிட்டுள்ளார்.