‘இந்திய அணியை எங்களால் வீழ்த்த முடியும்’: ஷகிப் அல்-ஹசன் சொல்கிறார்


‘இந்திய அணியை எங்களால் வீழ்த்த முடியும்’: ஷகிப் அல்-ஹசன் சொல்கிறார்
x
தினத்தந்தி 25 Jun 2019 11:30 PM GMT (Updated: 25 Jun 2019 11:30 PM GMT)

இந்திய அணியை எங்களால் வீழ்த்த முடியும் என வங்காளதேச அணி வீரர் ஷகிப் அல்-ஹசன் கூறியுள்ளார்.

சவுதம்டன்,

உலக கோப்பை கிரிக்கெட்டில் சவுதம்டனில் நேற்று முன்தினம் நடந்த ஆட்டத்தில் வங்காளதேச அணி 62 ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானை வீழ்த்தி 3-வது வெற்றியை பெற்றது. இதில் வங்காளதேசம் நிர்ணயித்த 263 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய ஆப்கானிஸ்தான் அணி 47 ஓவர்களில் 200 ரன்னில் ‘ஆல்-அவுட்’ ஆகி தோல்வியை தழுவியது. 51 ரன்கள் எடுத்ததுடன் 5 விக்கெட்டும் வீழ்த்திய வங்காளதேச அணியின் ஆல்-ரவுண்டர் ஷகிப் அல்-ஹசன் ஆட்டநாயகன் விருது பெற்றார். இதன் மூலம் உலக கோப்பை போட்டியில் ஒரு ஆட்டத்தில் அரைசதம் அடித்ததுடன் 5 விக்கெட்டும் வீழ்த்திய 2-வது வீரர் என்ற சிறப்பை ஷகிப் அல்-ஹசன் பெற்றார்.

வங்காளதேச அணி தனது அடுத்த லீக் ஆட்டத்தில் ஜூலை 2-ந் தேதி இந்தியாவை எதிர்கொள்ள உள்ள நிலையில் ஷகிப் அல்-ஹசன் அளித்த பேட்டியில் ‘இந்தியா முன்னணி அணியாகும். உலக கோப்பையை வெல்லக்கூடிய அணிகளில் ஒன்றாக அது கருதப்படுகிறது. எனவே இந்திய அணிக்கு எதிரான ஆட்டம் எளிதாக இருக்காது. இந்தியாவுக்கு எதிராக நாங்கள் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவோம். கடந்த கால அனுபவங்கள் எங்களுக்கு உதவிகரமாக இருக்கும். நாங்கள் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினால் இந்திய அணியை வெல்ல முடியும். இந்திய அணியில் உலக தரம் வாய்ந்த வீரர்கள் உள்ளனர். அவர்கள் ஆட்டத்தின் போக்கை மாற்றும் திறன் படைத்தவர்கள். இருப்பினும் இந்திய அணியை வீழ்த்தும் திறமை எங்களுக்கு இருப்பதாக நம்புகிறேன்’ என்றார்.


Next Story