கிரிக்கெட்

ஒரே உலக கோப்பை தொடரில் 4 சதம் அடித்து ரோகித் சர்மா சாதனை + "||" + Rohit Sharma's record of 4 centuries in a single World Cup

ஒரே உலக கோப்பை தொடரில் 4 சதம் அடித்து ரோகித் சர்மா சாதனை

ஒரே உலக கோப்பை தொடரில் 4 சதம் அடித்து ரோகித் சர்மா சாதனை
ஒரே உலக கோப்பை தொடரில், 4 சதம் அடித்து ரோகித் சர்மா சாதனை படைத்துள்ளார்.
பர்மிங்காம்,

உலக கோப்பை கிரிக்கெட்டில் வங்காளதேசத்துக்கு எதிரான நேற்றைய லீக் ஆட்டத்தில் இந்திய துணை கேப்டன் ரோகித் சர்மா 92 பந்தில் 104 ரன்கள் விளாசி அமர்க்களப்படுத்தினார். இந்த உலக கோப்பையில் ரோகித் சர்மாவின் 4-வது சதம் இதுவாகும். ஏற்கனவே தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக 122 ரன்களும் (144 பந்து), பாகிஸ்தானுக்கு எதிராக 140 ரன்களும் (113 பந்து), இங்கிலாந்துக்கு எதிராக 102 ரன்களும் (109 பந்து) எடுத்திருந்தார். இதன் மூலம் உலக கோப்பை தொடர் ஒன்றில் அதிக சதங்கள் நொறுக்கிய வீரரான இலங்கை முன்னாள் கேப்டன் சங்கக்கராவின் (2015-ம் ஆண்டு உலக கோப்பையில் தொடர்ச்சியாக 4 சதங்கள் அடித்திருந்தார்) சாதனையை சமன் செய்தார்.


* இந்திய அளவில் ஒரு உலக கோப்பையில் அதிக சதங்கள் அடித்தவராக இதுவரை முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி (2003-ம் ஆண்டு உலக கோப்பையில் 3 சதம்) இருந்தார். கங்குலியின் சாதனையை ரோகித் சர்மா முறியடித்தார்.

* 44 ஆண்டு கால உலக கோப்பை வரலாற்றில் மொத்தத்தில் அதிக சதங்கள் அடித்தவர்களின் பட்டியலில் இந்திய ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர் 6 சதங்களுடன் (44 இன்னிங்ஸ்) முதலிடம் வகிக்கிறார். இலங்கையின் சங்கக்கரா, ஆஸ்திரேலியாவின் ரிக்கிபாண்டிங், ரோகித் சர்மா (கடந்த உலக கோப்பையில் ஒரு சதம் அடித்திருந்தார்) ஆகியோர் தலா 5 சதங்களுடன் அடுத்த இடத்தில் உள்ளனர்.

* நடப்பு உலக கோப்பை தொடரில் ரோகித் சர்மா 7 ஆட்டத்தில் விளையாடி 544 ரன்கள் சேர்த்து, ரன் குவிப்பில் முதலிடத்துக்கு முன்னேறி இருக்கிறார். வங்காளதேசத்தின் ஷகிப் அல்-ஹசன் 2-வது இடத்திலும் (7 ஆட்டத்தில் 542 ரன்), ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னர் (8 ஆட்டத்தில் 516 ரன்) 3-வது இடத்திலும், ஆரோன் பிஞ்ச் (8 ஆட்டத்தில் 504 ரன்) 4-வது இடத்திலும் உள்ளனர்.

* ஒரு உலக கோப்பையில் 500 ரன்களை கடந்த 2-வது இந்தியர் என்ற சிறப்பை ரோகித் சர்மா பெற்றார். இதற்கு முன்பு சச்சின் தெண்டுல்கர் 2 முறை 500 ரன்களை (1996-ம் ஆண்டு உலக கோப்பையில் 523 ரன் மற்றும் 2003-ம் ஆண்டு உலக கோப்பையில் 673 ரன்) கடந்து இருக்கிறார்.

* ஒரு நாள் கிரிக்கெட்டில் ரோகித் சர்மாவின் 26-வது சதம் இதுவாகும். இதன் மூலம் ஒரு நாள் போட்டியில் அதிக சதங்கள் அடித்தவர்களின் பட்டியலில் தென்ஆப்பிரிக்காவின் டிவில்லியர்ஸ், இலங்கையின் சங்கக்கரா, வெஸ்ட் இண்டீசின் கிறிஸ் கெய்ல் ஆகியோருடன் (தலா 25 சதம்) 6-வது இடத்தை பகிர்ந்து இருந்த ரோகித் சர்மா இப்போது அவர்களை பின்னுக்கு தள்ளிவிட்டு தனியாக 6-வது இடத்தில் உள்ளார். முதல் 5 இடங்களில் தெண்டுல்கர் (49 சதம்), விராட் கோலி (41), ரிக்கிபாண்டிங் (30), ஜெயசூர்யா (28), அம்லா (27) ஆகியோர் உள்ளனர்.

* 32 வயதான ரோகித் சர்மா நேற்று அடித்த 5 சிக்சரையும் சேர்த்து அவரது ஒட்டுமொத்த சிக்சர் எண்ணிக்கை 230 ஆக (213 ஆட்டம்) உயர்ந்தது. ஒரு நாள் போட்டியில் அதிக சிக்சர் விளாசிய இந்தியர் என்ற சாதனையை டோனியிடம் (228 சிக்சர், 348 ஆட்டம்) இருந்து தட்டிப்பறித்தார்.