கிரிக்கெட்

“காலை பதம்பார்க்கும் இன்னொரு மலிங்கா கிடைக்கமாட்டார்’ - யுவராஜ்சிங் புகழாரம் + "||" + Yuvraj Singh Makes Huge 'there Will Never Be Another' Claim About Sri Lankan Pacer

“காலை பதம்பார்க்கும் இன்னொரு மலிங்கா கிடைக்கமாட்டார்’ - யுவராஜ்சிங் புகழாரம்

“காலை பதம்பார்க்கும் இன்னொரு மலிங்கா கிடைக்கமாட்டார்’ - யுவராஜ்சிங் புகழாரம்
‘எதிரணி பேட்ஸ்மேன்களின் கால் பாதத்தை குறி வைத்து யார்க்கராக பந்து வீசும் மலிங்கா போன்ற இன்னொரு பவுலர் கிடைக்க மாட்டார்’ என்று இந்திய முன்னாள் வீரர் யுவராஜ்சிங் புகழாரம் சூட்டியுள்ளார்.
கொழும்பு,

கொழும்பில் நேற்று முன்தினம் நடந்த வங்காளதேசத்துக்கு எதிரான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 91 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தில் 3 விக்கெட்டுகள் வீழ்த்திய இலங்கை வேகப்பந்து வீச்சாளர் மலிங்கா இத்துடன் சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். அவரை சக வீரர்கள் தோளில் சுமந்து மைதானத்தில் உற்சாகமாக வலம் வந்தனர்.


“இலங்கை அணிக்காக 15 ஆண்டுகள் ஒரு நாள் கிரிக்கெட்டில் விளையாடி இருக்கிறேன். ஒரு நாள் போட்டியில் இருந்து விலகுவதற்கு இதுவே சரியான தருணம். இன்றைய ஆட்டத்தில் விக்கெட் வீழ்த்தியதை விட அதிகமான ரசிகர்களின் வருகையே என்னை மகிழ்ச்சி அடைய வைக்கிறது. இலங்கை கிரிக்கெட்டிலோ அல்லது வேறு எந்த நாட்டு கிரிக்கெட் வீரர்களோ பவுலிங் தொடர்பாக என்னிடம் உதவி கேட்டால் செய்ய தயாராக இருக்கிறேன்’ என்று மலிங்கா நெகிழ்ச்சியுடன் கூறினார். இனி 20 ஓவர் போட்டிகளில் மட்டும் மலிங்காவை பார்க்கலாம்.

ஒரு நாள் கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக 4 பந்துகளில் 4 விக்கெட் வீழ்த்திய ஒரே வீரரான 35 வயதான மலிங்காவுக்கு இந்திய முன்னாள் அதிரடி வீரர் யுவராஜ்சிங் புகழாரம் சூட்டியுள்ளார்.

யுவராஜ்சிங் தனது டுவிட்டர் பக்கத்தில், ‘யார்க்கர் மன்னன் மலிங்காவின் வெற்றிகரமான கிரிக்கெட் பயணத்துக்கு வாழ்த்துகள். பந்து வீச்சின் மூலம் பேட்ஸ்மேனின் கால் பாதத்தை பதம் பார்க்கும் அவரை போன்ற இன்னொரு பவுலர் ஒரு போதும் கிடைக்கமாட்டார். வருங்கால முயற்சிகளும் சிறப்பாக அமைய வாழ்த்துகள்’ என்றார்.

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் அவருடன் இணைந்து விளையாடும் மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோகித் சர்மா டுவிட்டரில், ‘கடந்த 10 ஆண்டுகளில் மும்பை இந்தியன்ஸ் அணியில் சிறந்த மேட்ச் வின்னர்களை தேர்வு செய்ய வேண்டும் என்றால், அதில் நிச்சயம் முதன்மையானவராக மலிங்கா தான் இருப்பார். நெருக்கடியான கட்டத்தில் பந்து வீச அழைத்தால் சோடை போகாமல் கேப்டன் நிம்மதிபெருமூச்சு விடும் வகையில் செயல்படக்கூடியவர், மலிங்கா’ என்று குறிப்பிட்டுள்ளார்.

ஏறக்குறைய மலிங்கா ஸ்டைலில் பந்து வீசக்கூடிய இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா கூறுகையில், கடைசி ஆட்டத்திலும் மலிங்கா அற்புதமாக பந்து வீசினார்.

கிரிக்கெட்டில் அனைத்து விதமான பங்களிப்பையும் அளித்த அவருக்கு நன்றி. அவர் மீது எனக்கு உயரிய மரியாதை உண்டு. அது எப்போதும் தொடரும்’ என்றார்.