கிரிக்கெட்

வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான 2-வது ஒருநாள் கிரிக்கெட்: இந்திய அணி அபார வெற்றி + "||" + 2nd ODI Cricket: India won by 59 runs

வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான 2-வது ஒருநாள் கிரிக்கெட்: இந்திய அணி அபார வெற்றி

வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான 2-வது ஒருநாள் கிரிக்கெட்: இந்திய அணி அபார வெற்றி
வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 59 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
போர்ட் ஆப் ஸ்பெயின்,

வெஸ்ட்இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதலாவது ஒருநாள் போட்டி மழையால் பாதியில் கைவிடப்பட்டது.


இந்த நிலையில் இந்தியா- வெஸ்ட்இண்டீஸ் அணிகள் இடையிலான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி போர்ட் ஆப் ஸ்பெயினில் நேற்று முன்தினம் நடந்தது. ‘டாஸ்’ ஜெயித்த இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான் 2 ரன்னிலும், தடுமாறிய ரோகித் சர்மா 18 ரன்னிலும் (34 பந்துகளில்) ஆட்டம் இழந்து ஏமாற்றம் அளித்தனர்.

இதனை அடுத்து விக்கெட் கீப்பர் ரிஷாப் பண்ட், கேப்டன் விராட்கோலியுடன் ஜோடி சேர்ந்தார். ரிஷாப் பண்ட் 20 ரன்னில் அவுட் ஆனார். 4-வது விக்கெட்டுக்கு ஸ்ரேயாஸ் அய்யர், கேப்டன் விராட்கோலியுடன் இணைந்தார். இருவரும் நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினார்கள். நிலைத்து நின்று ஆடிய விராட்கோலி 112 பந்துகளில் சதத்தை எட்டினார். அவர் அடித்த 42-வது சதம் இதுவாகும். வெஸ்ட்இண்டீசுக்கு எதிராக அவரது 8-வது சதம் இதுவாகும். அடித்து ஆடிய ஸ்ரேயாஸ் அய்யர் அரைசதம் அடித்தார்.

அணியின் ஸ்கோர் 41.3 ஓவர்களில் 226 ரன்னாக இருந்த போது கேப்டன் விராட்கோலி (120 ரன்கள், 125 பந்து, 14 பவுண்டரி, ஒரு சிக்சர்) பிராத்வெய்ட் பந்து வீச்சில் கெமார் ரோச்சிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். இந்த ஆட்டத்தில் விராட்கோலி 78 ரன்னை தொட்ட போது ஒருநாள் போட்டியில் அதிக ரன் குவித்த இந்திய வீரர்கள் பட்டியலில் 2-வது இடத்தில் இருந்த கங்குலியை பின்னுக்கு தள்ளி அந்த இடத்தை தனதாக்கினார். ஸ்ரேயாஸ் அய்யர் 71 ரன் எடுத்த நிலையில் ஜாசன் ஹோல்டர் பந்து வீச்சில் போல்டு ஆனார். அடுத்து கேதர் ஜாதவ் 16 ரன்னிலும், புவனேஷ்வர்குமார் 1 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர். நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் இந்திய அணி 7 விக்கெட் இழப்புக்கு 279 ரன்கள் எடுத்தது.

பின்னர் இலக்கை நோக்கி ஆடிய வெஸ்ட்இண்டீஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர் கிறிஸ் கெய்ல் 11 ரன்னிலும், அடுத்து வந்த ஷாய் ஹோப் 5 ரன்னிலும் ஆட்டம் இழந்து உள்ளூர் ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தனர். கிறிஸ் கெய்ல் இந்த ஆட்டத்தில் 9 ரன்னை எட்டிய போது ஒருநாள் போட்டியில் அதிக ரன்கள் குவித்த வெஸ்ட்இண்டீஸ் வீரர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருந்த லாராவை (10,405 ரன்கள்) பின்னுக்கு தள்ளி முதலிடத்தை தன்வசப்படுத்தினார். கெய்ல் 300 ஒருநாள் போட்டியில் விளையாடி மொத்தம் 10,408 ரன்கள் குவித்துள்ளார். வெஸ்ட்இண்டீஸ் அணி 12.5 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 55 ரன்கள் எடுத்து இருந்த போது மழை குறுக்கிட்டதால் ஆட்டம் 45 நிமிடம் பாதிக்கப்பட்டது. இதனை அடுத்து டக்வொர்த் லீவிஸ் முறைப்படி வெஸ்ட்இண்டீஸ் அணிக்கு 46 ஓவர்களில் 270 ரன்கள் வெற்றி இலக்காக மாற்றி அமைக்கப்பட்டது.

தொடர்ந்து ஆடிய வெஸ்ட்இண்டீஸ் அணியின் விக்கெட்டுகள் சீரான இடைவெளியில் வீழ்ந்தன. ஹெட்மயர் 18 ரன்னிலும், இவின் லீவிஸ் 65 ரன்னிலும், நிகோலஸ் பூரன் 42 ரன்னிலும், ரோஸ்டன் சேஸ் 18 ரன்னிலும், பிராத்வெய்ட், கெமார் ரோச் ஆகியோர் ரன் எதுவும் எடுக்காமலும் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர்.

வெஸ்ட்இண்டீஸ் அணி 42 ஓவர்களில் 210 ரன்னில் ‘ஆல்-அவுட்’ ஆனது. இதனால் இந்திய அணி 59 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. கேப்டன் ஜாசன் ஹோல்டர் 13 ரன்னுடன் ஆட்டம் இழக்காமல் இருந்தார். இந்திய அணி தரப்பில் புவனேஷ்வர்குமார் 4 விக்கெட்டும், முகமது ஷமி, குல்தீப் யாதவ் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினார்கள். இந்திய அணி கேப்டன் விராட்கோலி ஆட்டநாயகன் விருது பெற்றார்.

இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. இவ்விரு அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி போர்ட் ஆப் ஸ்பெயினில் நாளை (புதன்கிழமை) நடக்கிறது.