‘ஹாட்ரிக்’ சாதனை படைத்த 3-வது இந்தியர் பும்ரா கேப்டன் கோலியால் நிகழ்ந்ததாக பாராட்டு


‘ஹாட்ரிக்’ சாதனை படைத்த 3-வது இந்தியர் பும்ரா கேப்டன் கோலியால் நிகழ்ந்ததாக பாராட்டு
x
தினத்தந்தி 1 Sep 2019 11:15 PM GMT (Updated: 1 Sep 2019 7:52 PM GMT)

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் அரங்கில் ‘ஹாட்ரிக்’ விக்கெட் வீழ்த்தி சாதனை படைத்த 3-வது இந்தியர் என்ற மகிமையை வேகப்பந்து வீச்சாளர் பும்ரா பெற்றார்.

கிங்ஸ்டன்,

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 2-வது டெஸ்டின் முதலாவது இன்னிங்சில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா தொடர்ச்சியாக 3 விக்கெட்டுகளை கபளகரம் செய்து ‘ஹாட்ரிக்’ சாதனை படைத்தார். ஆட்டத்தின் 9-வது ஓவரில் அவரது பந்து வீச்சின் 2-வது பந்தில் டேரன் பிராவோ (4 ரன்), ஸ்லிப்பில் நின்ற லோகேஷ் ராகுலிடம் கேட்ச் ஆனார். அடுத்த பந்தில் ஷமார் புரூக்ஸ் (0) எல்.பி.டபிள்யூ. ஆனார். புரூக்ஸ் டி.ஆர்.எஸ். படி அப்பீல் செய்தும் பலன் இல்லை. இதற்கு அடுத்த பந்தை எதிர்கொண்ட ரோஸ்டன் சேசும் (0) அவரது இன்ஸ்விங்கரில் எல்.பி.டபிள்யூ. ஆனார். முதலில் நடுவர் விரலை உயர்த்தவில்லை. பும்ராவுக்கும் இது துல்லியமான எல்.பி.டபிள்யூ. ஆக இருக்குமா? என்ற சந்தேகம் இருந்தது. ஆனால் கேப்டன் விராட் கோலி தான் தைரியமாக டி.ஆர்.எஸ். தொழில்நுட்பத்தை கையில் எடுத்தார். டி.வி. ரீப்ளேயில் பந்து பேட்ஸ்மேனின் லெக்-ஸ்டம்பை தாக்குவது தெரிந்ததால் நடுவர் தனது தீர்ப்பை மாற்றிக்கொண்டு அவுட் என்று அறிவித்தார்.

142 ஆண்டு கால டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் நிகழ்த்தப்பட்ட 44-வது ‘ஹாட்ரிக்’ இதுவாகும். இந்திய அளவில் ‘ஹாட்ரிக்’ சாதனை படைத்த 3-வது வீரர் பும்ரா ஆவார். இதற்கு முன்பு சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன்சிங் (ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 2001-ம் ஆண்டு, கொல்கத்தா), வேகப்பந்து வீச்சாளர் இர்பான் பதான் (பாகிஸ்தானுக்கு எதிராக 2006-ம் ஆண்டு, கராச்சி) ஆகிய இந்தியர்களும் ‘ஹாட்ரிக்’ சாதை-னை படைத்திருக்கிறார்கள். தனது 12-வது டெஸ்டில் விளையாடும் 25 வயதான பும்ரா, சொந்த மண்ணில் இன்னும் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆடவில்லை என்பது கவனிக்கத்தக்கது.

பும்ரா கூறுகையில், ‘உண்மையை சொல்ல வேண்டும் என்றால் பந்து முதலில் ரோஸ்டன் சேசின் பேட்டில் பட்டதாகத் தான் நினைத்தேன். அதனால் தான் பெரிய அளவில் நான் எல்.பி.டபிள்யூ. கேட்டு அப்பீல் செய்யவில்லை. ஆனால் இறுதியில் இது அருமையான டி.ஆர்.எஸ். அப்பீலாக இருந்தது. இந்த ‘ஹாட்ரிக்’ சாதனைக்காக நான் கேப்டன் விராட் கோலிக்கு நன்றி கடன் பட்டிருக்கிறேன்’ என்றார்.

கோலி கூறுகையில், ‘அந்த பந்து முதலில் பேட்டில் பட்டதாக பும்ரா நினைத்தார். ஆனால் அவரிடம் நான் ‘பந்து ஸ்டம்பை நோக்கி தானே சென்றது’ என்று கேட்டேன். அவரும் ஆமாம் என்றார். பிறகு நானும், துணை கேப்டன் ரஹானேவும் விவாதித்தோம். ரோஸ்டன் சேஸ் பந்தை காலுறையில் வாங்கிய பிறகு தான் பேட்டை கொண்டு வந்திருப்பார் என்று தோன்றியதால் அப்பீல் செய்தோம். எங்களது கணிப்பு சரியாக அமைந்து விட்டது’ என்றார்.

இந்தியாவின் முதல் ‘ஹாட்ரிக்’ சாதனையாளரான ஹர்பஜன்சிங் தனது டுவிட்டர் பக்கத்தில், ‘பும்ரா அற்புதமாக பந்து வீசினீர்கள். ஹாட்ரிக் பட்டியலுக்கு வரவேற்கிறோம். உங்களால் மிகவும் பெருமைப்படுகிறோம். தொடர்ந்து இதே போல் சாதிக்க வேண்டும் சகோதரா’ என்று பதிவிட்டு இருக்கிறார்.

இர்பான் பதான் தனது டுவிட்டர் பக்கத்தில், ‘ஹாட்ரிக்’ வரிசையில் இணையும் பும்ராவுக்கு வாழ்த்துகள்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

Next Story