தென்ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட்: இந்தியா 326 ரன்கள் முன்னிலை


தென்ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட்: இந்தியா 326 ரன்கள் முன்னிலை
x
தினத்தந்தி 12 Oct 2019 11:30 PM GMT (Updated: 12 Oct 2019 11:59 PM GMT)

இந்தியாவுக்கு எதிரான 2-வது டெஸ்டில் தென்ஆப்பிரிக்கா 275 ரன்களில் ஆல்-அவுட் ஆகி ‘பாலோ-ஆன்’ ஆனது.

புனே,

இந்தியா - தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி புனேயில் நடந்து வருகிறது. இதில் முதலில் பேட் செய்த இந்தியா 5 விக்கெட்டுக்கு 601 ரன்கள் குவித்து ‘டிக்ளேர்’ செய்தது. கேப்டன் விராட் கோலி இரட்டை சதம் (254 ரன்) விளாசி சாதனை படைத்தார். பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய தென்ஆப்பிரிக்கா 2-வது நாள் முடிவில் 3 விக்கெட்டுக்கு 36 ரன்களுடன் பரிதவித்தது. தேனிஷ் டி புருன் (20 ரன்), விக்கெட் தடுப்பாளராக இறக்கப்பட்ட அன்ரிச் நார்ஜே (2 ரன்) களத்தில் இருந்தனர்.

இந்த நிலையில் 3-வது நாள் ஆட்டம் நேற்று நடந்தது. ‘பாலோ-ஆன்’ ஆபத்தை தவிர்க்க 402 ரன்கள் எடுத்தாக வேண்டிய நெருக்கடியுடன் தொடர்ந்து விளையாடிய தென்ஆப்பிரிக்க வீரர்கள் இந்திய பந்து வீச்சில் தடுமாறினர். நார்ஜே (3 ரன்), டி புருன் (30 ரன்) வேகப்பந்து வீச்சில் சரிந்தனர்.

இதன் பின்னர் அனுபவம் வாய்ந்த கேப்டன் பாப் டு பிளிஸ்சிஸ்சும், விக்கெட் கீப்பர் குயின்டான் டி காக்கும் அணியை சரிவில் இருந்து காப்பாற்ற போராடினர். ஜடேஜாவின் ஓவரில் சிக்சர் பறக்க விட்ட பிளிஸ்சிஸ், அவரது இன்னொரு ஓவரில் 3 பவுண்டரிகள் ஓடவிட்டதோடு அரைசதத்தையும் கடந்தார். அணியின் ஸ்கோர் 128 ரன்களை எட்டிய போது, டி காக் (31 ரன்) அஸ்வின் சுழலில் போல்டு ஆனார். அடுத்து வந்த செனுரன் முத்துசாமி (7 ரன்) நிலைக்கவில்லை.

தொடர்ந்து பிளிஸ்சிஸ்சின் சவாலுக்கு அஸ்வின் முற்றுப்புள்ளி வைத்தார். அவர் வீசிய பந்தை பிளிஸ்சிஸ் (64 ரன், 117 பந்து, 9 பவுண்டரி, ஒரு சிக்சர்) தடுத்து ஆட முற்பட்ட போது, பந்து பேட்டின் விளிம்பில் உரசிக்கொண்டு ஸ்லிப்பில் நின்ற ரஹானேவிடம் கேட்ச்சாக தஞ்சமடைந்தது.

அப்போது தென்ஆப்பிரிக்கா 8 விக்கெட்டுக்கு 162 ரன்களுடன் (58.3 ஓவர்) ஊசலாடியது. இதனால் சிறிது நேரத்தில் இன்னிங்ஸ் முடிவுக்கு வரலாம் என்று இந்திய வீரர்களும், ரசிகர்களும் ஆவல் கொண்டனர்.

இந்த சூழலில் 9-வது விக்கெட்டுக்கு கைகோர்த்த வெரோன் பிலாண்டரும், கேஷவ் மகராஜியும் இந்திய பவுலர்களை வாட்டி வதைத்தனர். கைதேர்ந்த பேட்ஸ்மேன் போல் கச்சிதமாக மட்டையை சுழட்டிய கேஷவ் மகராஜ் தோதாக வந்த பந்துகளை எல்லைக்கோட்டுக்கு அதிரடியாக விரட்டியடித்து ஆச்சரியப்படுத்தினார். இத்தனைக்கும் அவர் வலது தோள்பட்டை வலியால் அவதிப்பட்டு வந்தார்.



 


மறுமுனையில் 22-வது பந்தில் தனது முதல் ரன்னை எடுத்த பிலாண்டரும், இந்திய பந்து வீச்சை திறம்பட சமாளித்தார். தங்கள் அணியின் முன்னணி பேட்ஸ்மேன்களுக்கு பாடம் கற்பிப்பது போல் நிலைத்து நின்று மிரட்டிய கேஷவ் மகராஜ் தனது முதலாவது அரைசதத்தை பதிவு செய்தார்.

3 மணி நேரம் குடைச்சல் கொடுத்த இந்த கூட்டணியை ஒரு வழியாக சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் உடைத்தார். மகராஜ் அவரது பந்து வீச்சில் லெக் ஸ்லிப்பில் நின்ற ரோகித் சர்மாவிடம் பிடிபட்டார். மகராஜ் 72 ரன்களில் (132 பந்து, 12 பவுண்டரி) வெளியேறினார். மகராஜ்- பிலாண்டர் ஜோடி 9-வது விக்கெட்டுக்கு 109 ரன்கள் (43.1 ஓவர்) திரட்டியது குறிப்பிடத்தக்க அம்சமாகும். கடைசி விக்கெட்டுக்கு வந்த ரபடா (2 ரன்) எல்.பி.டபிள்யூ. ஆக, தென்ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 275 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆகி ‘பாலோ-ஆன்’ ஆனது. அத்துடன் 3-வது நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. பிலாண்டர் 44 ரன்களுடன் (192 பந்து, 6 பவுண்டரி) அவுட் ஆகாமல் இருந்தார். இந்திய தரப்பில் அஸ்வின் 4 விக்கெட்டுகளும், உமேஷ் யாதவ் 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.



 

புனே டெஸ்டின் 3-வது நாள் ஆட்டத்தின் போது திடீரென ஒரு ரசிகர் அத்துமீறி மைதானத்திற்குள் ஓடி வந்து விட்டார். அவர் இந்திய வீரர் ரோகித் சர்மாவின் கால்களை தொட்டு வணங்க முயற்சித்தார். அதை தவிர்க்க ரோகித் சர்மா முயற்சித்த போது எதிர்பாராத விதமாக அந்த ரசிகர் மீது விழுந்து விட்டார். அந்த வேடிக்கையான காட்சிகளை படத்தில் காணலாம்.




இந்திய அணி தற்போது 326 ரன்கள் முன்னிலையுடன் வலுவான நிலையில் உள்ளது. இருப்பினும் ‘மெகா’ முன்னிலையுடன் இந்திய அணி தொடர்ந்து 2-வது இன்னிங்சை விளையாடுமா? அல்லது தென்ஆப்பிக்காவுக்கு பாலோ-ஆன் வழங்கி 2-வது இன்னிங்சை விளையாட பணிக்குமா? என்பது 4-வது நாளான இன்று காலை தான் தெரிய வரும்.

‘அஸ்வின் 50’

* இந்திய சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக இதுவரை 50 விக்கெட்டுகள் (9 டெஸ்ட்) வீழ்த்தியிருக்கிறார். அந்த அணிக்கு எதிராக இந்த மைல்கல்லை எட்டிய 4-வது இந்தியர் அஸ்வின் ஆவார். இந்த வகையில் முதல் 3 இடங்களில் கும்பிளே (84 விக்கெட்), ஸ்ரீநாத் (64), ஹர்பஜன்சிங் (60) ஆகியோர் உள்ளனர்.

* முதல் இன்னிங்சில் இந்தியா 326 ரன்கள் முன்னிலை பெற்றிருக்கிறது. தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக முதல் இன்னிங்சில் இந்தியாவின் 2-வது அதிகபட்ச முன்னிலை இதுவாகும்.

* கேஷவ் மகராஜ்-பிலாண்டர் ஜோடி 9-வது விக்கெட்டுக்கு 109 ரன்கள் சேர்த்தது. இந்தியாவுக்கு எதிராக 9-வது விக்கெட்டுக்கு 100 ரன்களுக்கு மேல் எடுத்த முதல் தென்ஆப்பிரிக்க இணை இவர்கள் தான்.

* முதல் இரு நாட்கள் மைதானம் வெறிச்சோடி கிடந்த நிலையில் நேற்று ஏறக்குறைய 14 ஆயிரம் ரசிகர்கள் போட்டியை நேரில் கண்டுகளித்தனர்.

* 3-வது நாள் ஆட்டம் முடிந்த பிறகு இந்திய வீரர் அஸ்வின் கூறுகையில், ‘இப்போதெல்லாம் பவுலர்களும் பேட்டிங் திறமையை மேம்படுத்திக் கொள்கிறார்கள். தென்ஆப்பிரிக்க அணியை எடுத்துக் கொண்டால் 11-வது வரிசை வீரர் வரை பேட்டிங் செய்யக்கூடியவர்கள். எனவே தொடக்க வரிசை வீரர்களுக்கு போன்றே கடைசி நிலை வீரர்களுக்கும் பந்து வீச வேண்டும். பிலாண்டரின் பேட்டிங் யுக்தி உண்மையிலேயே அற்புதமாக இருந்தது. பாலோ-ஆன் விஷயத்தில் கேப்டன் கோலி முடிவு செய்வார். அதே சமயம் தொடர்ச்சியாக பவுலிங் செய்துள்ள இந்திய பந்து வீச்சாளர்கள் நாளை (இன்று) காலைக்குள் எந்த அளவுக்கு புத்துணர்ச்சியுடன் இருக்கிறார்கள் என்பதை பார்க்க வேண்டியது முக்கியம்’ என்றார்.

* இந்த டெஸ்ட் குறித்து இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் தனது டுவிட்டர் பக்கத்தில், ‘இந்தியாவில் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகள் சலிப்பை ஏற்படுத்துகின்றன. முதல் 3-4 நாட்களுக்கு ஆடுகளம் பேட்டிங்குக்கு சாதகமாக இருக்கிறது. பந்து வீச்சாளர்களும் தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் ஆடுகளம் இருக்க வேண்டியது அவசியம்’ என்று விமர்சித்துள்ளார்.


Next Story