தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் - ராஞ்சியில் இன்று தொடக்கம்


தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் - ராஞ்சியில் இன்று தொடக்கம்
x
தினத்தந்தி 18 Oct 2019 11:57 PM GMT (Updated: 18 Oct 2019 11:57 PM GMT)

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை முழுமையாக கைப்பற்றும் உத்வேகத்துடன் இந்திய அணி இன்று ராஞ்சியில் தொடங்கும் கடைசி டெஸ்டில் களம் இறங்குகிறது.

ராஞ்சி,

இந்தியாவுக்கு வந்துள்ள தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் விசாகப்பட்டினத்தில் நடந்த முதலாவது டெஸ்டில் 203 ரன்கள் வித்தியாசத்திலும், புனேயில் நடந்த 2-வது டெஸ்டில் இன்னிங்ஸ் மற்றும் 137 ரன்கள் வித்தியாசத்திலும் இந்திய அணி வெற்றி பெற்று தொடரையும் 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி விட்டது.

இந்த நிலையில் இந்தியா-தென்ஆப்பிரிக்கா இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் இன்று (சனிக்கிழமை) தொடங்குகிறது.

சாதகமான உள்ளூர் சூழலில் இந்திய அணி பேட்டிங் மற்றும் பந்து வீச்சு இரண்டிலும் வெகுவாக ஆதிக்கம் செலுத்தியதன் விளைவு இரண்டு டெஸ்டிலும் எளிதில் வாகை சூடியது. முதலாவது டெஸ்டை எடுத்துக் கொண்டால் மயங்க் அகர்வாலின் இரட்டை சதமும், இரண்டு இன்னிங்சிலும் சதம் அடித்த ரோகித் சர்மாவின் வியப்பூட்டும் பேட்டிங்கும் வெற்றிக்கு பக்கபலமாக இருந்தன.

புனே டெஸ்டில் கேப்டன் விராட் கோலி 254 ரன்கள் குவித்து சாதனை படைத்தார். அதன் மூலம் முதல் இன்னிங்சில் 601 ரன்கள் குவித்து மலைக்க வைத்த இந்தியா, தென்ஆப்பிரிக்காவை துவம்சம் செய்தது. பந்து வீச்சில் சுழற்பந்து வீச்சாளர்கள் அஸ்வின் (14 விக்கெட்) ஜடேஜா (10 விக்கெட்), வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி (8 விக்கெட்) ஆகியோர் மிரட்டுகிறார்கள்.

தொடரை 3-0 என்ற கணக்கில் முழுமையாக வசப்படுத்தும் வேட்கையுடன் இந்திய வீரர்கள் தயாராக உள்ளனர். கடைசி டெஸ்டின் முடிவு தொடரில் தாக்கத்தை ஏற்படுத்தாது என்ற போதிலும் இது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கு உட்பட்டது என்ற வகையில் முக்கியத்துவம் பெறுகிறது. இதில் வெற்றி பெறும் அணிக்கு 40 புள்ளிகள் கிடைக்கும்.

அதனால் இந்திய வீரர்கள் எந்த வகையிலும் மெத்தனமாக இருக்கமாட்டார்கள் என்று நம்பலாம். விராட் கோலி இன்னும் 44 ரன்கள் எடுத்தால் கேப்டனாக 5 ஆயிரம் ரன்களை வேகமாக கடந்த வீரர் என்ற சாதனையை எட்டுவார்.

தென்ஆப்பிரிக்க அணியை பொறுத்தவரை தொடரை இழந்து விட்ட நிலையில் ஆறுதல் வெற்றிக்காக போராடுவார்கள். முதலாவது டெஸ்டில் முதல் இன்னிங்சில் (431 ரன்) ஓரளவு தாக்குப்பிடித்த தென்ஆப்பிரிக்க வீரர்கள் 2-வது டெஸ்டில் ஒட்டுமொத்தமாக சரண் அடைந்து விட்டனர்.

சொல்லப்போனால் அந்த அணியில் பின்வரிசையில் ஆடிய பிலாண்டர், முத்துசாமி, டேன் பீட், கேஷவ் மகராஜ் (காயத்தால் கடைசி டெஸ்டில் இவர் ஆடவில்லை) ஆகியோர் தான் இந்திய பவுலர்களுக்கு சற்று குடைச்சல் கொடுத்தனர். அவர்கள் போல் முன்வரிசை ஆட்டக்காரர்கள் நிலைத்து நின்று ஆடினால், அது இந்தியாவுக்கு கடும் சவாலாக அமையும். காயம் காரணமாக தொடக்க ஆட்டக்காரர் மார்க்ராம் விலகி விட்டதால் அவருக்கு பதிலாக ஜூபைர் ஹம்சா இடம் பெறுவார் என்று தெரிகிறது.

ராஞ்சி மைதானத்தில் இதற்கு முன்பு ஒரே ஒரு டெஸ்ட் போட்டி நடந்துள்ளது. 2007-ம் ஆண்டு நடந்த இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான அந்த டெஸ்டிலும் இரு அணிகளும் ரன்மழை பொழிந்ததால் டிராவில் முடிந்தது.

இந்த ஆடுகளம் முதல் 3 நாட்களுக்கு பேட்டிங்குக்கும், அதன் பிறகு சுழற்பந்து வீச்சுக்கும் உகந்த வகையில் இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. ஆட்டத்தின் போது லேசான மழை குறுக்கீடு இருக்கலாம்.

போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

இந்தியா: மயங்க் அகர்வால், ரோகித் சர்மா, புஜாரா, விராட் கோலி (கேப்டன்), ரஹானே, விருத்திமான் சஹா, அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, முகமது ஷமி, இஷாந்த் ஷர்மா, உமேஷ் யாதவ் அல்லது ஹனுமா விஹாரி.

தென்ஆப்பிரிக்கா: டீன் எல்கர், ஜூபைர் ஹம்சா, தேனிஸ் டி புருன், பாப் டு பிளிஸ்சிஸ் (கேப்டன்), டெம்பா பவுமா, குயின்டான் டி காக், வெரோன் பிலாண்டர், செனுரன் முத்துசாமி, டேன் பீட் அல்லது ஜார்ஜ் லின்டே, காஜிசோ ரபடா, அன்ரிச் நார்ஜே அல்லது நிகிடி.

காலை 9.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.

‘டாஸ்’ போடுவதற்கு வேறு வீரரை அனுப்பலாம் - பிளிஸ்சிஸ்

டெஸ்ட் கிரிக்கெட்டில் பொதுவாக ‘டாஸ்’ முக்கிய பங்கு வகிக்கிறது. ஏனெனில் முதலில் பேட்டிங் செய்யும் அணிக்கே வெற்றி வாய்ப்பு அதிகமாக தென்படுகிறது. இந்த தொடரில் முதல் இரு டெஸ்டிலும் இந்தியா டாசில் ஜெயித்ததோடு, முதலில் பேட்டிங் செய்து போட்டிகளிலும் வெற்றி கண்டது.

ஆசிய கண்டத்தில் தென்ஆப்பிரிக்கா தொடர்ச்சியாக 9 டெஸ்டுகளில் டாசில் தோற்று இருக்கிறது. இவற்றில் எந்த டெஸ்டிலும் அந்த அணி வெற்றி பெற்றதில்லை. இது குறித்து தென்ஆப்பிரிக்க கேப்டன் பாப் டு பிளிஸ்சிஸ்சிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பிய போது அவர் கூறியதாவது:-

நாங்கள், இந்தியாவுக்கு அவர்களது இடத்தில் உண்மையிலேயே கடும் சவால் அளிக்கக்கூடிய அணியாக இருக்க விரும்புகிறோம். முதலாவது டெஸ்டில் சில கட்டங்களில் நன்றாக ஆடினோம். எனவே கடைசி டெஸ்டில் டாசில் இருந்தே நன்றாக தொடங்குவோம் என்று நம்புகிறேன்.


 


நாளைய தினம் (இன்று) டாஸ் போடுவதற்கு ஒரு வேளை நாங்கள் வேறு வீரரை (சிரித்தபடி) அனுப்பினாலும் அனுப்பலாம். ஏனெனில் இதுவரை டாசை வெல்வதில் எனது சாதனை சிறப்பாக இல்லை. முதல் இன்னிங்சில் நாங்கள் நிறைய ரன்கள் குவிக்க வேண்டியது அவசியமாகும். அதை செய்து விட்டால் அதன் பிறகு எதுவும் சாத்தியமே. ஆடுகளத்தை பார்ப்பதற்கு கொஞ்சம் வறண்டு காணப்படுகிறது. சுழற்பந்து வீச்சும், ரிவர்ஸ் ஸ்விங்கும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நினைக்கிறேன். எனவே முதல் இன்னிங்சில் ரன் குவிப்பது முக்கியமானது. 2-வது இன்னிங்சில் எதுவும் நடக்கலாம். இவ்வாறு பிளிஸ்சிஸ் கூறினார்.




Next Story