தென்ஆப்பிரிக்காவை ஊதித்தள்ளியது: கடைசி டெஸ்டிலும் இந்தியா இன்னிங்ஸ் வெற்றி


தென்ஆப்பிரிக்காவை ஊதித்தள்ளியது: கடைசி டெஸ்டிலும் இந்தியா இன்னிங்ஸ் வெற்றி
x
தினத்தந்தி 23 Oct 2019 12:06 AM GMT (Updated: 23 Oct 2019 12:06 AM GMT)

ராஞ்சியில் நடந்த கடைசி டெஸ்டிலும் தென்ஆப்பிரிக்காவை இன்னிங்ஸ் வித்தியாசத்தில் ஊதித்தள்ளிய இந்திய அணி தொடரை 3-0 என்ற கணக்கில் முழுமையாக வென்றது.

ராஞ்சி,

இந்தியா - தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் கடந்த 19-ந்தேதி தொடங்கியது. இதில் ‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட் செய்த இந்தியா 497 ரன்களில் ‘டிக்ளேர்’ செய்து மலைக்க வைத்தது. தொடர்ந்து ஆடிய தென்ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 162 ரன்களில் முடங்கி ‘பாலோ-ஆன்’ ஆனது. 335 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை ஆடிய தென்ஆப்பிரிக்கா 3-வது நாள் முடிவில் 8 விக்கெட்டுக்கு 132 ரன்களுடன் தோல்வியின் பாதைக்கு தள்ளப்பட்டது. அதாவது ஒரே நாளில் தென்ஆப்பிரிக்கா 16 விக்கெட்டுகளை பறிகொடுத்து முற்றிலும் நிலைகுலைந்து போனது. டி புருன் 30 ரன்களுடனும், அன்ரிச் நார்ஜே 5 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

இந்த நிலையில் எதிர்பார்த்தது போலவே நேற்றைய 4-வது நாளில் தென்ஆப்பிரிக்காவின் கதை வெறும் 11 நிமிடங்களில் முடிவுக்கு வந்தது. முதல் ஓவரை வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி வீசினார். அதில் எக்ஸ்டிரா வகையில் ஒரு ரன் பெற்றனர்.

அடுத்த ஓவரை அறிமுக சுழற்பந்து வீச்சாளர் ஷபாஸ் நதீம் வீசினார். தாழ்வாக வந்த பந்தை டி புருன் (30 ரன்) அடிக்க முயற்சித்த போது, அது பேட்டின் அடிப்பகுதியில் உரசிக்கொண்டு விக்கெட் கீப்பர் சஹாவிடம் கேட்ச்சாக சிக்கியது. கடைசி விக்கெட்டுக்கு இறங்கிய நிகிடி (0), நதீம் வீசிய பந்தை வலுவாக ஓங்கி அடித்தார். துரதிர்ஷ்டவசமாக அந்த பந்து எதிர்முனையில் நின்ற நார்ஜேவின் வலது கையில் பட்டு தெறிக்க, அதை நதீம் நேர்த்தியாக கேட்ச் செய்தார்.

முடிவில் தென்ஆப்பிரிக்க அணி 2-வது இன்னிங்சில் 48 ஓவர்களில் 133 ரன்களில் சுருண்டது. நடப்பு தொடரில் தென்ஆப்பிரிக்காவின் மோசமான ஸ்கோர் இதுவாகும். இந்திய தரப்பில் முகமது ஷமி 3 விக்கெட்டுகளும், உமேஷ் யாதவ், ஷபாஸ் நதீம் தலா 2 விக்கெட்டும், ஜடேஜா, அஸ்வின் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.



 

இதன் மூலம் இன்னிங்ஸ் மற்றும் 202 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றியை ருசித்த இந்திய அணி தொடரை 3-0 என்ற கணக்கில் சொந்தமாக்கியது. உள்நாட்டில் இந்தியா தொடர்ச்சியாக வென்ற 11-வது தொடர் இதுவாகும். மேலும் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்திய அணி ஒரு டிராவுக்கு கூட இடம் கொடுக்காமல் முழுமையாக கைப்பற்றி ‘ஒயிட்வாஷ்’ செய்திருப்பது இதுவே முதல் முறையாகும். முன்னதாக விசாகப்பட்டினத்தில் நடந்த முதலாவது டெஸ்டில் இந்தியா 203 ரன்கள் வித்தியாசத்திலும், புனேயில் நடந்த 2-வது டெஸ்டில் இன்னிங்ஸ் மற்றும் 137 ரன்கள் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றிருந்தது.

இந்திய தொடக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மா ஒரு இரட்டை சதம், 2 சதம் உள்பட 529 ரன்கள் சேர்த்து தொடரில் முதலிடம் பிடித்தார். இதில் 19 சிக்சர்களும் அடங்கும். அவரே ஆட்டநாயகன் (ரூ.1 லட்சம் பரிசு) மற்றும் தொடர்நாயகன் விருதுகளை (ரூ.2½ லட்சம் பரிசு) தட்டிச் சென்றார்.






 





 1936-ம் ஆண்டுக்கு பிறகு தென்ஆப்பிரிக்கா சந்தித்த சோகம்

* இந்த டெஸ்ட் தொடரில் 6 இன்னிங்சையும் சேர்த்து தென்ஆப்பிரிக்காவின் 60 விக்கெட்டுகளையும் இந்திய பவுலர்கள் கபளகரம் செய்து பிரமாதப்படுத்தினர். ஆனால் தென்ஆப்பிரிக்க பவுலர்களால் 25 விக்கெட் மட்டுமே எடுக்க முடிந்தது. இதே போல் இந்திய பவுலர்கள் சராசரியாக 22.84 ரன்கள் விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட் எடுத்தனர். தென்ஆப்பிரிக்கா ஒரு விக்கெட் வீழ்த்த சராசரியாக 75.44 ரன்களை வாரி வழங்கியது. இந்த வித்தியாசம் தென்ஆப்பிரிக்காவின் மோசமான செயல்பாடுகளில் ஒன்றாக அமைந்திருக்கிறது.

* இந்த தொடரில் 2 மற்றும் 3-வது டெஸ்டில் தென்ஆப்பிரிக்கா இன்னிங்ஸ் தோல்வியை தழுவியது. 1936-ம் ஆண்டுக்கு பிறகு அடுத்தடுத்து இரு டெஸ்டுகளில் தென்ஆப்பிரிக்கா இன்னிங்ஸ் வித்தியாசத்தில் சரண் அடைவது இதுவே முதல் முறையாகும்.

* இனவெறி கொள்கையால் 20 ஆண்டு கால தடை முடிந்து 1991-ம் ஆண்டு தென்ஆப்பிரிக்கா சர்வதேச கிரிக்கெட்டுக்குள் மறுபிரவேசம் செய்த பின்னர், 3 மற்றும் அதற்கு மேல் போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஒயிட்வாஷ் ஆகியிருப்பது இது 3-வது நிகழ்வாகும். ஏற்கனவே ஆஸ்திரேலியாவிடம் இரண்டு முறை 0-3 என்ற கணக்கில் ‘ஒயிட்வாஷ்’ சோகத்தை சந்தித்து இருக்கிறது.

* இன்னிங்ஸ் மற்றும் 202 ரன்கள் வித்தியாசத்தில் வென்றதே தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக இந்தியாவின் ‘மெகா’ வெற்றியாகும். ஒட்டுமொத்தத்தில் பார்த்தால், தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக இது 4-வது பெரிய வெற்றியாக பதிவாகியிருக்கிறது. ஏற்கனவே ஆஸ்திரேலியா இன்னிங்ஸ் 360 ரன் (2002-ம் ஆண்டு), இன்னிங்ஸ் 259 ரன் (1950), இங்கிலாந்து இன்னிங்ஸ் 202 ரன் (1889) ஆகிய வித்தியாசங்களில் அந்த அணிக்கு எதிராக வெற்றி கண்டிருக்கிறது.

* தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக இந்தியா இதுவரை வெற்றி பெற்றுள்ள 14 டெஸ்டுகளில் 7 வெற்றி விராட் கோலியின் கேப்டன்ஷிப்பில் கிடைத்தவை ஆகும். தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக அதிக வெற்றிகளை தேடித்தந்த கேப்டன்களில் ஆஸ்திரேலியாவின் ரிக்கிபாண்டிங்குக்கு (8 வெற்றி) அடுத்த இடத்தில் கோலி உள்ளார்.

* இந்த டெஸ்டில் இந்திய வீரர் ரோகித் சர்மா முதல் இன்னிங்சில் அதிகபட்சமாக 212 ரன்கள் விளாசினார். ஆனால் தென்ஆப்பிரிக்கா ஒரு இன்னிங்சில் கூட அவரின் அதிகபட்ச ஸ்கோரை (முதல் இன்னிங்சில் 162 ரன் மற்றும் 2-வது இன்னிங்சில் 133 ரன்) தாண்டவில்லை. டெஸ்ட் ஒன்றில் இந்திய பேட்ஸ்மேன் ஒருவரின் அதிகபட்ச ஸ்கோர், எதிரணியின் இரண்டு இன்னிங்ஸ் ஸ்கோர்களை விடவும் மிஞ்சி நிற்பது இது 5-வது முறையாகும்.



Next Story