வங்காளதேசத்துக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட் தொடர்: இந்திய அணியில் கோலிக்கு ஓய்வு


வங்காளதேசத்துக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட் தொடர்: இந்திய அணியில் கோலிக்கு ஓய்வு
x
தினத்தந்தி 25 Oct 2019 12:04 AM GMT (Updated: 25 Oct 2019 12:04 AM GMT)

வங்காளதேசத்துக்கு எதிரான 20 ஓவர் தொடரில் விளையாடும் இந்திய அணியில் கேப்டன் விராட் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. புதுமுக வீரராக ஆல்-ரவுண்டர் ஷிவம் துபே சேர்க்கப்பட்டுள்ளார்.

மும்பை,

இந்தியாவுக்கு வருகை தரும் வங்காளதேச கிரிக்கெட் அணி மூன்று 20 ஓவர் போட்டி மற்றும் இரண்டு டெஸ்டுகளில் பங்கேற்கிறது. இந்தியா-வங்காளதேசம் இடையிலான முதலாவது 20 ஓவர் போட்டி வருகிற 3-ந்தேதி டெல்லியில் நடக்கிறது. அடுத்த இரு ஆட்டங்கள் ராஜ்கோட் (நவ.7), நாக்பூரில் (நவ.10) நடைபெறுகிறது.

டெஸ்ட் போட்டிகள் முறையே இந்தூர் (நவ.14-18), கொல்கத்தா (நவ.22-26) ஆகிய இடங்களில் நடத்தப்படுகிறது. இது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கு உட்பட்ட தொடராகும்.

வங்காளதேச தொடருக்கான இந்திய அணியை எம்.எஸ்.கே.பிரசாத் தலைமையிலான தேர்வு கமிட்டியினர் மும்பையில் நேற்று கூடி ஆலோசித்து அறிவித்தனர்.

தொடர்ச்சியாக சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வருவதால் கேப்டன் விராட் கோலிக்கு அவரது விருப்பத்தின் பேரில் வங்காளதேசத்துக்கு எதிரான 20 ஓவர் தொடரில் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இதனால் ரோகித் சர்மா அணியை வழிநடத்துவார்.

அண்மையில் விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட்டில் இரட்டை சதம் அடித்து அசத்திய சஞ்சு சாம்சன் 4 ஆண்டுக்கு பிறகு தேசிய அணிக்கு தேர்வாகியுள்ளார். 24 வயதான கேரளாவைச் சேர்ந்த சஞ்சு சாம்சன் 2015-ம் ஆண்டு ஜிம்பாப்வேக்கு எதிராக ஒரே ஒரு 20 ஓவர் போட்டியில் மட்டும் விளையாடி இருக்கிறார். சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சாஹல், ஷர்துல் தாகூர் அணிக்கு திரும்பியுள்ளனர். உடல்தகுதி பிரச்சினை காரணமாக வேகப்பந்து வீச்சாளர் நவ்தீப் சைனிக்கு இடம் கிடைக்கவில்லை.

முதுகில் ஏற்பட்ட காயத்துக்கு ஆபரேஷன் செய்து ஓய்வில் இருக்கும் ஹர்திக் பாண்ட்யாவின் இடத்தை நிரப்புவதற்காக உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக விளையாடி வரும் மும்பையைச் சேர்ந்த ஆல்-ரவுண்டர் 26 வயதான ஷிவம் துபே முதல் முறையாக அழைக்கப்பட்டுள்ளார். விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட்டில் கர்நாடகாவுக்கு எதிரான ஆட்டத்தில் ஷிவம் துபே 67 பந்துகளில் 7 பவுண்டரி, 10 சிக்சருடன் 118 ரன்கள் விளாசியதும், கடந்த ஆண்டு ரஞ்சி கிரிக்கெட்டில் பரோடாவுக்கு எதிராக ஒரே ஓவரில் தொடர்ச்சியாக 5 சிக்சர்கள் நொறுக்கியதும் குறிப்பிடத்தக்கது.

பேட்டிங் மட்டுமின்றி வேகப்பந்தும் வீசக்கூடியவரான ஷிவம் துபே ஐ.பி.எல். கிரிக்கெட்டில் ரூ.5 கோடிக்கு பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியால் வாங்கப்பட்டார். ஆனால் கடந்த ஐ.பி.எல். சீசனில் அவர் சோபிக்கவில்லை.

இந்திய டெஸ்ட் அணியில் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை. தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றிய இந்திய வீரர்கள் அப்படியே அணியில் தொடருகிறார்கள். கடைசி டெஸ்டுக்கு முன்பாக குல்தீப் யாதவ் காயமடைந்ததால் அவருக்கு பதிலாக சேர்க்கப்பட்டு களம் கண்ட இடக்கை சுழற்பந்து வீச்சாளர் ஷபாஸ் நதீம் மட்டும் இடம் பெறவில்லை.

அணி பட்டியலை வெளியிட்டு இந்திய அணியின் தேர்வு குழு தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத் நிருபர்களிடம் கூறுகையில், ‘ஆல்-ரவுண்டர் இடத்துக்கு நம்மிடம் ஹர்திக் பாண்ட்யா இருந்தார். அதன் பிறகு விஜய் சங்கரை முயற்சித்தோம். இப்போது நாங்கள் அந்த இடத்துக்கு ஷிவம் துபே பொருத்தமானவராக இருப்பார் என்று முடிவு செய்துள்ளோம். இவர் ஆக்ரோஷமாக பேட்டிங் செய்யக்கூடியவர். வெஸ்ட் இண்டீஸ் மற்றும் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடர்களில் இந்திய ‘ஏ’ அணிக்காக அவரது செயல்பாடு பிரமாதமாக இருந்தது. ஷிவம் துபே, வேகமாக முன்னேறும் ஒரு வீரர் ஆவார். காயத்தால் வெளியில் இருக்கும் வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர்குமார் அடுத்த தொடருக்கு அணிக்கு திரும்ப வாய்ப்புள்ளது.



 


 உலக கோப்பை போட்டி முடிந்ததும், அணிக்கான எங்களது வருங்கால திட்டம் இளம் வீரர்களை தயார்படுத்துவது தான் என்பதை ஏற்கனவே தெளிவுப்படுத்தி விட்டோம். இளம் வீரர் களுக்கு வாய்ப்பு அளித்து அவர்கள் எப்படி அணியில் தங்களை நிலைநிறுத்திக் கொள்கிறார்கள் என்பதை பார்க்கிறோம். விக்கெட் கீப்பர் ரிஷாப் பண்ட் நல்ல நிலையில் உள்ளார். இப்போது சஞ்சு சாம்சன் (மாற்று விக்கெட் கீப்பர்) அணிக்கு வந்துள்ளார். இதன் மூலம் நாங்கள் என்ன சிந்திக்கிறோம் என்பது உங்களுக்கு புரிந்து இருக்கும். டோனியிடம் நாங்கள் பேசிய போது அவரும் இளம் வீரர்களுக்கு முன்னுரிமை அளிக்கும் முடிவுக்கு ஆதரவு தெரிவித்தார். ரிஷாப் பண்ட் சில ஆட்டங்களில் சரியாக ஆடாமல் இருந்திருக்கலாம். ஆனால் அவர் நிச்சயம் வெற்றிகரமான வீரராக வலம் வருவார் என்று உறுதியாக நம்புகிறோம். அதனால் தான் அவர் மீது கவனம் செலுத்துகிறோம். டோனியின் எதிர்காலம் குறித்து கேட்கிறீர்கள். இந்த விஷயத்தில் அவர் தான் முடிவு செய்ய வேண்டும்.’ என்றார்.

இந்திய 20 ஓவர் அணி: ரோகித் சர்மா (கேப்டன்), ஷிகர் தவான், லோகேஷ் ராகுல், சஞ்சு சாம்சன், ஸ்ரேயாஸ் அய்யர், மனிஷ் பாண்டே, ரிஷாப் பண்ட், வாஷிங்டன் சுந்தர், குருணல் பாண்ட்யா, யுஸ்வேந்திர சாஹல், ராகுல் சாஹர், தீபக் சாஹர், கலீல் அகமது, ஷிவம் துபே, ஷர்துல் தாகூர்.

டெஸ்ட் அணி: விராட் கோலி (கேப்டன்), ரோகித் சர்மா, மயங்க் அகர்வால், புஜாரா, ரஹானே, ஹனுமா விஹாரி, விருத்திமான் சஹா, ரவீந்திர ஜடேஜா, அஸ்வின், குல்தீப் யாதவ், முகமது ஷமி, உமேஷ் யாதவ், இஷாந்த் ஷர்மா, சுப்மான் கில், ரிஷாப் பண்ட்.

அணித் தேர்வுக்கு முன்பாக இந்திய கிரிக்கெட் வாரியத்தின் புதிய தலைவர் கங்குலி, செயலாளர் ஜெய்ஷா ஆகியோர் தேர்வு குழுவினரிடமும், இந்திய கேப்டன் கோலி, துணை கேப்டன் ரோகித் சர்மா ஆகியோருடனும் ஆலோசனை நடத்தினர். இந்த சந்திப்பில் பயிற்சியாளர் ரவிசாஸ்திரி பங்கேற்கவில்லை.


Next Story