தியோதர் கோப்பை கிரிக்கெட்: இந்திய ‘பி’ அணி சாம்பியன்


தியோதர் கோப்பை கிரிக்கெட்: இந்திய ‘பி’ அணி சாம்பியன்
x
தினத்தந்தி 4 Nov 2019 11:39 PM GMT (Updated: 4 Nov 2019 11:39 PM GMT)

தியோதர் கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டியில் இந்திய ‘பி’ அணி 51 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய ‘சி’ அணியை வீழ்த்தி ‘சாம்பியன்’ பட்டத்தை கைப்பற்றியது.

ராஞ்சி,

தியோதர் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடர் ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நடந்தது. இதில் நேற்று நடந்த இறுதிப்போட்டியில் பார்த்தீவ் பட்டேல் தலைமையிலான இந்திய ‘பி’ அணி, சுப்மான் கில் தலைமையிலான இந்திய ‘சி’ அணியை எதிர்கொண்டது.

‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட்டிங் செய்த இந்திய ‘பி’ அணி 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 283 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக கேதர் ஜாதவ் 86 ரன்னும், ஜெய்ஸ்வால் 54 ரன்னும், விஜய் சங்கர் 45 ரன்னும் எடுத்தனர். கேப்டன் பார்த்தீவ் பட்டேல் 14 ரன்னில் ஆட்டம் இழந்து ஏமாற்றம் அளித்தார். இந்திய ‘சி’ அணி தரப்பில் இஷான் போரெல் 5 விக்கெட் வீழ்த்தினார்.

பின்னர் 284 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய இந்திய ‘சி’ அணி 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 232 ரன்களே எடுத்தது. இதனால் இந்திய ‘பி’ அணி 51 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று ‘சாம்பியன்’ பட்டத்தை சொந்தமாக்கியது. அதிகபட்சமாக பிரியம் கார்க் 74 ரன்னும், அக்‌ஷர் பட்டேல் 38 ரன்னும் எடுத்து ஆட்டம் இழந்தனர். கேப்டன் சுப்மான் கில் 1 ரன்னிலும், விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக் 3 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர்.

ஜலாஜ் சக்சேனா 37 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார். இந்திய ‘பி’ அணி தரப்பில் ஷபாஸ் நதீம் 4 விக்கெட்டும், முகமது சிராஜ் 3 விக்கெட்டும் கைப்பற்றினார்கள். லீக் ஆட்டத்தில் இந்திய ‘சி’ அணியிடம் 136 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்து இருந்த இந்திய ‘பி’ அணி அதற்கு தகுந்த பதிலடி கொடுத்ததுடன் கோப்பையையும் தனதாக்கியது.

இந்த இறுதிப்போட்டியில் இந்திய ‘சி’ அணியின் கேப்டனாக இருந்த சுப்மான் கில்லுக்கு தற்போது வயது 20 ஆகும். இதன் மூலம் அவர் தியோதர் கோப்பை இறுதிப்போட்டியில் குறைந்த வயதில் கேப்டனாக இருந்த வீரர் என்ற பெருமையை பெற்றார். இதற்கு முன்பு 2009-10-ம் ஆண்டில் தியோதர் கோப்பை இறுதிப்போட்டியில் வடக்கு மண்டல அணிக்கு விராட்கோலி தனது 21 வயதில் கேப்டனாக இருந்ததே சாதனையாக இருந்தது.


Next Story