வங்காளதேசம் அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டி: மயங்க் அகர்வால் சதமடித்தார்


வங்காளதேசம் அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டி: மயங்க் அகர்வால் சதமடித்தார்
x
தினத்தந்தி 15 Nov 2019 9:31 AM GMT (Updated: 15 Nov 2019 9:31 AM GMT)

வங்காளதேசம் அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர் மயங்க் அகர்வால் சதமடித்தார்.

இந்தூர்,

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் வங்காளதேச கிரிக்கெட் அணி 20 ஓவர் போட்டித் தொடரை 1-2 என்ற கணக்கில் பறிகொடுத்தது. அடுத்ததாக 2 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றது.

இதன்படி இந்தியா-வங்காளதேசம் அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் தொடங்கியது.  வங்காளதேச கேப்டன் மொமினுல் ஹக் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தார். இந்திய அணியின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் வங்காளதேசம் 58.3 ஓவர்களில் 150 ரன்கள் எடுத்து முதல் இன்னிங்சில்  சுருண்டது.

இதையடுத்து இந்திய அணி பேட்டிங்கை தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக மயங்க் அகர்வாலும் ரோகித் சர்மாவும்  களம் இறங்கினர். ரோகித் சர்மா 6 ரன்களில் ஆட்டமிழந்தார்.

முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 1 விக்கெட்டுக்கு 86 ரன்கள் எடுத்திருந்தது. மயங்க் அகர்வால் (37 ரன்கள்), புஜாரா (43 ரன்கள்) அவுட்டாகாமல் இருந்தனர்.

இந்தநிலையில், இன்று 2-வது நாள் ஆட்டம் தொடங்கியது. அதில் அபு ஜயேத் ஓவரில் அடுத்தடுத்து பவுண்டரிகள் அடித்த புஜாரா, டெஸ்ட் அரங்கில் 23-வது அரைசதம் எட்டினார். தொடர்ந்து வேகமாக ரன்கள் சேர்க்க முயன்ற புஜாரா, 54 ரன்களில் அவுட்டானார்.

மயங்க் அகர்வாலுடன், கேப்டன் கோலி ஜோடி சேர்ந்தார். எபாதத் ஓவரில் இரண்டு பவுண்டரி விளாசிய மயங்க் அகர்வால், தன் பங்கிற்கு அரைசதம் விளாசினார். மறுமுனையில் கோலி 2-வது பந்தில் 'டக்' அவுட்டாகி ரசிகர்களுக்கு பேரதிர்ச்சி கொடுத்தார். பின்னர் மயங்க் அகர்வாலுடன் இணைந்த ரகானே, பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த இந்திய அணி முன்னிலை பெற்றது. தொடர்ந்து சிறப்பாக விளையாடிய மயங்க் அகர்வால் 183 பந்துகளில் சதமடித்துள்ளார். டெஸ்ட் போட்டியில் இது அவருடைய 3-வது சதம் ஆகும்.

28 வயதாகும் மயங்க் அகர்வால் இதுவரை 8 டெஸ்டுகளில் விளையாடி 3 சதங்கள், 3 அரை சதங்களை எடுத்துள்ளார். 12 இன்னிங்ஸ்களில் ஆறு முறை 50 ரன்களுக்கு மேல் எடுத்துள்ளார். இதில் ஒரு இரட்டை சதமும் அடங்கும்.

Next Story