நியூசிலாந்துக்கு எதிரான பகல்-இரவு டெஸ்ட்: லபுஸ்சேன் சதத்தால் ஆஸ்திரேலியா சிறப்பான தொடக்கம்


நியூசிலாந்துக்கு எதிரான பகல்-இரவு டெஸ்ட்: லபுஸ்சேன் சதத்தால் ஆஸ்திரேலியா சிறப்பான தொடக்கம்
x
தினத்தந்தி 12 Dec 2019 11:47 PM GMT (Updated: 12 Dec 2019 11:47 PM GMT)

நியூசிலாந்துக்கு எதிரான பகல்-இரவு டெஸ்ட் கிரிக்கெட்டில் லபுஸ்சேனின் சதத்தால் ஆஸ்திரேலியா சிறப்பான தொடக்கம் கண்டுள்ளது.

பெர்த்,

ஆஸ்திரேலியாவுக்கு சென்றுள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி 3 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடுகிறது. இதன் முதலாவது டெஸ்ட் உலகின் அதிவேக ஆடுகளமான பெர்த்தில் பகல்-இரவு ஆட்டமாக நேற்று தொடங்கியது.

‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக டேவிட் வார்னரும், ஜோ பர்ன்சும் களம் புகுந்தனர். நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர்கள் அடிக்கடி ‘பவுன்சர்’ வீசி தாக்குதல் தொடுத்ததால் நிதானமாக ஆடினர். பர்ன்ஸ் (9 ரன், 42 பந்து), வேகப்பந்து வீச்சாளர் காலின் டி கிரான்ட்ஹோமின் பந்து வீச்சில் எல்.பி.டபிள்யூ. ஆகி வெளியேறினார். டி.வி. ரீப்ளேயில் பந்து லெக்ஸ்டம்பை விட்டு விலகுவது தெரிந்தது. டி.ஆர்.எஸ். தொழில்நுட்பத்தை அவர் கேட்டு இருந்தால் தப்பி இருப்பார்.

அடுத்து மார்னஸ் லபுஸ்சேன் இறங்கி நிலைத்து நின்று ஆடினார். மறுமுனையில் டேவிட் வார்னர் (43 ரன்) பந்து வீசிய நீல் வாக்னெரிடமே பிடிபட்டார். 3-வது விக்கெட்டுக்கு முன்னாள் கேப்டன் ஸ்டீவன் சுமித், லபுஸ்சேனுடன் கூட்டணி போட்டார். நேர்த்தியாக ஆடிய இவர்கள் அணியை சரிவில் இருந்து மீட்டனர். அசத்தலாக ஆடிய லபுஸ்சேன், சான்ட்னெரின் சுழலில் பந்தை சிக்சருக்கு தூக்கியடித்து தனது 3-வது சதத்தை பூர்த்தி செய்தார். இந்த 3 சதத்தையும் அவர் தொடர்ச்சியாக 3 டெஸ்டுகளில் (ஹாட்ரிக்) அடித்திருக்கிறார். மேலும் டெஸ்டில் ஆயிரம் ரன்களை வேகமாக கடந்த 4-வது ஆஸ்திரேலிய வீரர் (18 இன்னிங்ஸ்) என்ற சிறப்பையும் பெற்றார். அணியின் ஸ்கோர் 207 ரன்களை எட்டிய போது ஸ்டீவன் சுமித் (43 ரன், 164 பந்து, 4 பவுண்டரி) ஆட்டம் இழந்தார். அடுத்து வந்த மேத்யூ வேட் (12 ரன்) தாக்குப்பிடிக்கவில்லை.

ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 90 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 248 ரன்கள் சேர்த்துள்ளது. லபுஸ்சேன் 110 ரன்களுடனும் (202 பந்து, 14 பவுண்டரி, ஒரு சிக்சர்), டிராவிஸ் ஹெட் 20 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.

இதற்கிடையே இந்த டெஸ்டில் அறிமுக பவுலராக அடியெடுத்து வைத்து மணிக்கு 140 கிலோமீட்டருக்கு மேல் பந்து வீசி மிரட்டிய நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் லோக்கி பெர்குசன், வலது பின்னங்காலில் தசைப்பிடிப்பு ஏற்பட்டதால், கடைசி பகுதியில் பந்து வீசாமல் வெளியேறி சிகிச்சை பெற்றார். 11 ஓவர்கள் பந்து வீசிய அவருக்கு முதல் நாளில் விக்கெட் கிடைக்கவில்லை. இன்று 2-வது நாளில் அவர் பவுலிங் செய்வது சந்தேகம் தான்.

Next Story