இலங்கைக்கு எதிரான டெஸ்ட்: பாகிஸ்தான் அணி 395 ரன்கள் குவிப்பு


இலங்கைக்கு எதிரான டெஸ்ட்: பாகிஸ்தான் அணி 395 ரன்கள் குவிப்பு
x
தினத்தந்தி 21 Dec 2019 11:46 PM GMT (Updated: 21 Dec 2019 11:46 PM GMT)

இலங்கைக்கு எதிரான 2-வது டெஸ்டில் பாகிஸ்தான் அணி 2 விக்கெட்டுக்கு 395 ரன்கள் குவித்து வலுவான நிலையை எட்டியுள்ளது. அபித் அலி, ஷான் மசூத் சதம் அடித்தனர்.

கராச்சி,

பாகிஸ்தான் - இலங்கை அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி துறைமுக நகரான கராச்சியில் நடந்து வருகிறது. இதில் முதல் இன்னிங்சில் பாகிஸ்தான் 191 ரன்களும், இலங்கை 271 ரன்களும் எடுத்தன. 80 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை ஆடிய பாகிஸ்தான் 2-வது நாள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 57 ரன்கள் எடுத்திருந்தது. அபித் அலி 32 ரன்னுடனும், ஷான் மசூத் 21 ரன்னுடனும் அவுட் ஆகாமல் இருந்தனர்.

இந்த நிலையில் 3-வது நாளான நேற்று தொடர்ந்து பேட்டிங் செய்த பாகிஸ்தான் வீரர்கள் முழுமையாக கோலோச்சினர். இலங்கையின் பந்து வீச்சு துளியும் எடுபடவில்லை.

நிலைத்து நின்று நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்திய அபித் அலியும், ஷான் மசூத்தும் சதம் அடித்தனர். ஒரே இன்னிங்சில் பாகிஸ்தான் தொடக்க ஆட்டக்காரர்கள் இருவரும் சதத்தை ருசிப்பது இது 3-வது நிகழ்வாகும். அபித் அலி ஏற்கனவே தனது அறிமுக போட்டியான முந்தைய டெஸ்டிலும் சதம் அடித்திருந்தார். இதன் மூலம் தனது முதல் இரண்டு டெஸ்டிலும் சதம் விளாசிய முதல் பாகிஸ்தான் வீரர் என்ற பெருமையை 32 வயதான அபித் அலி பெற்றார்.

அணியின் ஸ்கோர் 278 ரன்களாக உயர்ந்த போது, இந்த ஜோடி பிரிந்தது. 2-வது முறையாக சதத்தை எட்டிய ஷான் மசூத் 135 ரன்களில் (198 பந்து, 7 பவுண்டரி, 3 சிக்சர்) கேட்ச் ஆனார்.

தொடக்க விக்கெட்டுக்கு பாகிஸ்தான் ஜோடி திரட்டிய 2-வது அதிகபட்சம் (278 ரன்) இதுவாகும். இதே மைதானத்தில் 1997-ம் ஆண்டு வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான டெஸ்டில் அமிர் சோகைல்-இஜாஸ் அகமது ஜோடி 298 ரன்கள் எடுத்ததே பாகிஸ்தான் தொடக்க ஜோடியின் அதிகபட்சமாக நீடிக்கிறது.

இரட்டை சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட அபித் அலி 174 ரன்களில் (281 பந்து, 21 பவுண்டரி, ஒரு சிக்சர்) வேகப்பந்து வீச்சாளர் லாஹிரு குமாராவின் பந்து வீச்சில் எல்.பி.டபிள்யூ. ஆனார். டி.ஆர்.எஸ். தொழில்நுட்பத்தின்படி அப்பீல் செய்தும் பலன் இல்லை. ஆனாலும் கடைசி வரை பாகிஸ்தான் பேட்ஸ்மேன்களின் ஆதிக்கமே மேலோங்கியது.

ஆட்ட நேர முடிவில் பாகிஸ்தான் அணி 2-வது இன்னிங்சில் 104 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 395 ரன்கள் குவித்துள்ளது. கேப்டன் அசாலி அலி 57 ரன்னுடனும், பாபர் அசாம் 22 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.

பாகிஸ்தான் அணி இதுவரை 315 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. இன்றைய 4-வது நாளில் பாகிஸ்தான் அணி உணவு இடைவேளை வரை விளையாடிவிட்டு டிக்ளேர் செய்து பெரிய ஸ்கோரை இலக்காக நிர்ணயிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story