பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு இந்திய கிரிக்கெட் வாரியம் கண்டனம்


பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு இந்திய கிரிக்கெட் வாரியம் கண்டனம்
x

பாகிஸ்தானை விட இந்தியாவில் பாதுகாப்பு அச்சுறுத்தல் அதிகம் என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் கூறியதற்கு இந்திய கிரிக்கெட் வாரியம் கண்டனம் தெரிவித்து உள்ளது.

மும்பை,

கடந்த 2009ம் ஆண்டு நடந்த தீவிரவாத தாக்குதலுக்கு பின்னர் பாகிஸ்தானுக்கு சென்ற இலங்கை அணி டெஸ்ட் தொடரில் பங்கேற்றது. இந்த தொடரை பாகிஸ்தான் 1-0 என்ற கணக்கில் வென்ற நிலையில், பெரும்பாலான அணிகள் பாகிஸ்தான் செல்லும் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில் வங்காள தேச அணி பாதுகாப்பை காரணம் காட்டி நிராகரித்து விட்டது.  இதனால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவரான எஹ்மான் மானி இந்தியாவை கடுமையாக தாக்கி பேசியுள்ளார்  அவர் கூறுகையில், “பாகிஸ்தான் பாதுகாப்பானது என்பதை நாங்கள் நிரூபித்துள்ளோம். எந்த அணி பாகிஸ்தான் பாதுகாப்பு இல்லை என்று கூறுகிறதோ அந்த அணி அதனை நிரூபிக்க வேண்டும்.

இலங்கை தொடருக்கு பின்னர் எந்தவொரு நாடும் பாதுகாப்பு ஏற்பாட்டை பற்றி கவலைப்பட முடியாது, மீடியாக்களும், ரசிகர்களும் உலகளவில் பாகிஸ்தானை நேர்மறையாக காட்ட முக்கிய பங்காற்றினர். பாகிஸ்தானை விட இந்தியாவில் தான் பாதுகாப்பு அச்சுறுத்தல் மிகமிக அதிகம் என தெரிவித்துள்ளார்.

இது குறித்து இந்திய கிரிக்கெட் வாரிய பொருளாளர் அருண் துமால்,  எஹ்மான் மானி  இந்தியாவின் பாதுகாப்பு  குறித்து கருத்து தெரிவிப்பதற்கு தகுதியற்றவர் என கூறி உள்ளார்.

மேலும் அருண் துமால் கூறியதாவது:-

பெரும்பாலும் லண்டனில் தங்கியிருக்கும் ஒரு நபருக்கு, இந்தியாவின் பாதுகாப்பு குறித்து கருத்து தெரிவிப்பது பொருத்தமற்றது. பாகிஸ்தானின் பாதுகாப்பு குறித்து கருத்து தெரிவிக்க கூட அவர் தகுதியற்றவர். அரிதாகவே பாகிஸ்தானில் இருக்கிறார். பாகிஸ்தானில் அதிக நேரம் செலவிட்டால், அங்குள்ள உண்மையான நிலைமையை அவர் புரிந்து கொள்வார் என கூறினார்.

Next Story