ரஞ்சி கிரிக்கெட்: மும்பை அணியின் ஆட்டம் மழையால் ரத்து


ரஞ்சி கிரிக்கெட்: மும்பை அணியின் ஆட்டம் மழையால் ரத்து
x

ரஞ்சி கிரிக்கெட் போட்டியில், மும்பை அணியின் ஆட்டம் மழையால் ரத்து செய்யப்பட்டது.

தர்மசாலா,

ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் தர்மசாலாவில் நடந்து வரும் இமாச்சலபிரதேச அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி தொடக்க நாளில் 5 விக்கெட் இழப்புக்கு 372 ரன்கள் குவித்து இருந்தது. சர்ப்ராஸ் கான் 226 ரன்களுடனும், சுபாம் ரஞ்சன் 44 ரன்களுடனும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர். 2-வது நாளான நேற்று மழை பெய்ததால் ஒரு பந்து கூட வீசப்படாமல் ஆட்டம் ரத்து செய்யப்பட்டது. இன்று 3-வது நாள் ஆட்டம் நடக்கிறது.

இந்தூரில் நடைபெறும் மத்தியபிரதேசம்-உத்தரபிரதேசம் அணிகள் இடையிலான ஆட்டத்தில் முதலில் ஆடிய மத்தியபிரதேச அணி முதல் இன்னிங்சில் 73 ஓவர்களில் 230 ரன்கள் எடுத்து ‘ஆல்-அவுட்’ ஆனது. அடுத்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய உத்தரபிரதேச அணி முதல் நாள் ஆட்டம் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 22 ரன்கள் எடுத்து இருந்தது. 2-வது நாளான நேற்று தொடர்ந்து ஆடிய உத்தரபிரதேச அணி முதல் இன்னிங்சில் 53 ஓவர்களில் 216 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. சவுரப் குமார் 98 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார். ‘ஹாட்ரிக்’ சாதனை படைத்த மத்தியபிரதேச இடக்கை வேகப்பந்து வீச்சாளர் ரவி யாதவ் 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார். 14 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை ஆடிய மத்தியபிரதேச அணி நேற்றைய முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 105 ரன்கள் எடுத்துள்ளது.

சண்டிகாரில் நடக்கும் புதுச்சேரிக்கு எதிரான ஆட்டத்தில் முதலில் ஆடிய சண்டிகார் அணி முதல் இன்னிங்சில் 37.3 ஓவர்களில் 134 ரன்னில் சுருண்டது. பின்னர் ஆடிய புதுச்சேரி அணி முதல் நாள் ஆட்டம் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 37 ரன்கள் எடுத்திருந்தது. அங்கு பெய்த மழை காரணமாக நேற்றைய ஆட்டம் முழுமையாக ரத்து செய்யப்பட்டது.

Next Story