20 ஓவர் கிரிக்கெட் பேட்டிங் தரவரிசையில் இந்திய வீராங்கனை ஷபாலி முதலிடம்


20 ஓவர் கிரிக்கெட் பேட்டிங் தரவரிசையில் இந்திய வீராங்கனை ஷபாலி முதலிடம்
x
தினத்தந்தி 5 March 2020 1:22 AM GMT (Updated: 5 March 2020 1:22 AM GMT)

20 ஓவர் கிரிக்கெட் பேட்டிங் தரவரிசையில் இந்திய வீராங்கனை ஷபாலி முதல் இடத்தை பிடித்துள்ளார்.

சிட்னி, 

பெண்கள் 20 ஓவர் கிரிக்கெட் போட்டிக்கான தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கிரிக்கெட் (ஐ.சி.சி.) நேற்று வெளியிட்டது. இதன்படி பேட்டிங் தரவரிசையில் 16 வயதான இந்திய வீராங்கனை ஷபாலி வர்மா (761 புள்ளிகள்) அதிரடியாக 19 இடங்கள் முன்னேற்றம் கண்டு முதலிடத்தை பிடித்துள்ளார். ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் 20 ஓவர் உலக கோப்பை போட்டியில் 4 ஆட்டங்களில் 161 ரன்கள் குவித்ததன் மூலம் அவர் ‘நம்பர் ஒன்’ அரியணையில் ஏறியுள்ளார். மிதாலி ராஜூக்கு அடுத்தபடியாக 20 ஓவர் போட்டியில் ‘நம்பர் ஒன்’ இடத்தை பிடித்த முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையை ஷபாலி வர்மா பெற்றிருக்கிறார்.

இதுவரை முதலிடத்தில் இருந்த நியூசிலாந்து வீராங்கனை சுசி பேட்ஸ் (750 புள்ளிகள்) ஒரு இடம் இறங்கி 2-வது இடத்துக்கு தள்ளப்பட்டார். இந்திய வீராங்கனை மந்தனா 2 இடங்கள் பின்தங்கி 6-வது இடத்தை பெற்றுள்ளார்.

பவுலர்கள் தரவரிசையில், 20 ஓவர் உலக போட்டியில் 4 ஆட்டங்களில் 8 விக்கெட்டுகள் வீழ்த்தி இருக்கும் இங்கிலாந்து சுழற்பந்து வீச்சாளர் சோபி எக்லெஸ்டோன் 2 இடம் உயர்ந்து முதலிடத்தை வசப்படுத்தியுள்ளார். இதனால் ஆஸ்திரேலியாவின் மேகன் ஸ்குட் 2-வது இடத்துக்கு சரிந்தார். இந்திய வீராங்கனைகளில் தீப்தி ஷர்மா 5-வது இடத்திலும், ராதா யாதவ் 7-வது இடத்திலும், பூனம் யாதவ் 8-வது இடத்திலும் உள்ளனர்.

Next Story