பெண்கள் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்: இந்திய அணி முதல்முறையாக இறுதிப்போட்டிக்கு தகுதி அரைஇறுதி ஆட்டம் மழையால் ரத்து


பெண்கள் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்: இந்திய அணி முதல்முறையாக இறுதிப்போட்டிக்கு தகுதி அரைஇறுதி ஆட்டம் மழையால் ரத்து
x
தினத்தந்தி 6 March 2020 12:20 AM GMT (Updated: 6 March 2020 12:20 AM GMT)

பெண்கள் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில், இங்கிலாந்துக்கு எதிரான அரைஇறுதி ஆட்டம் மழையால் ரத்தானதால் இந்திய அணி முதல்முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.

சிட்னி,

பெண்களுக்கான 7-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது. 10 அணிகள் கலந்து கொண்ட இந்த கிரிக்கெட் திருவிழாவில் லீக் சுற்று நிறைவில் ‘ஏ’ பிரிவில் டாப்-2 இடங்களை பிடித்த இந்தியா, ஆஸ்திரேலியா, ‘பி’ பிரிவில் முதல் 2 இடங்களை பிடித்த தென்ஆப்பிரிக்கா, இங்கிலாந்து ஆகிய அணிகள் அரைஇறுதியை எட்டின.

இந்த நிலையில் இந்தியா - இங்கிலாந்து இடையிலான முதலாவது அரைஇறுதி ஆட்டம் சிட்னியில் நேற்று உள்ளூர் நேரப்படி பிற்பகல் 3 மணிக்கு (இந்திய நேரப்படி காலை 9.30 மணி) தொடங்குவதாக இருந்தது. ஆனால் எதிர்பார்த்தபடியே ஆட்டம் தொடங்குவதற்கு முன்பே மழை கொட்டித் தீர்த்தது. பலத்த மழையால் மைதானத்தில் தண்ணீர் தேங்கியது. மழை நின்றதும் ஈரப்பதத்தை காய வைத்து குறைந்தது 10 ஓவர் கொண்ட போட்டியை நடத்த ஐ.சி.சி. முயற்சி மேற்கொண்டது. ஆனால் அதற்கு போதிய நேரம் இல்லாமல் போனதால் ‘டாஸ்’ கூட போடப்படாத நிலையில் இந்த ஆட்டத்தை கைவிடுவதாக நடுவர்கள் அறிவித்தனர்.

இந்த உலக கோப்பையில் அரைஇறுதி ஆட்டங்களுக்கு மாற்று நாள் (ரிசர்வ் டே) கிடையாது. மழையால் அரைஇறுதி ஆட்டம் ரத்தானால் லீக்கில் புள்ளி பட்டியலில் முதலிடம் பிடிக்கும் அணிக்கு இறுதிப்போட்டி வாய்ப்பு வழங்கப்படும். இதன்படி புள்ளி பட்டியலில் (ஏ பிரிவு) 8 புள்ளியுடன் (4 வெற்றி) முதலிடம் வகித்த இந்தியாவுக்கு இறுதிப்போட்டி அதிர்ஷ்டம் கிட்டியது. 20 ஓவர் உலக கோப்பை வரலாற்றில் இந்தியா இறுதிப்போட்டிக்குள் கால்பதிப்பது இதுவே முதல் முறையாகும். ‘பி’ பிரிவில் 6 புள்ளியுடன் (3 வெற்றி, ஒரு தோல்வி) 2-வது இடம் பெற்றிருந்த முன்னாள் சாம்பியன் இங்கிலாந்து அணி பரிதாபமாக வெளியேறியது.

பின்னர் இந்திய கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் நிருபர்களிடம் கூறியதாவது:-
துரதிர்ஷ்டவசமாக மழையால் இந்த ஆட்டத்தில் களம் இறங்க முடியாமல் போய் விட்டது. ஆனால் இது தான் விதிமுறை என்கிற போது, அதை நாம் பின்பற்றி தான் ஆக வேண்டும். வருங்காலத்தில் அரைஇறுதி ஆட்டத்துக்கு மாற்றுநாள் இருந்தால் நன்றாக இருக்கும். இந்த தொடர் தொடங்கிய போதே, லீக் சுற்றில் அனைத்து ஆட்டங்களிலும் வெற்றி பெற வேண்டியது அவசியம். ஏனெனில் ஒருவேளை அரைஇறுதி ஆட்டம் ரத்தானால் அது பாதிப்பை ஏற்படுத்தி விடும் என்பதை அறிந்திருந்தோம். அந்த வகையில் லீக் சுற்றில் முழுமையாக வெற்றி தேடித்தந்த ஒட்டுமொத்த அணியினருக்கே எல்லா பெருமையும் சாரும். அணியில் உள்ள வீராங்கனைகள் நல்ல நிலையில் இருக்கிறார்கள். ஷபாலி வர்மாவும், ஸ்மிர்தி மந்தனாவும் நமக்கு சிறப்பான தொடக்கம் தருவது உதவிகரமாக இருக்கிறது. இதே போல் இறுதிப்போட்டியிலும் அசத்துவார்கள் என்று நம்புகிறேன். குறுகிய வடிவிலான 20 ஓவர் கிரிக்கெட்டில் நல்ல தொடக்கம் அமைவது முக்கியமாகும்.
20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் முதல்முறையாக இறுதிப்போட்டிக்கு வந்திருக்கிறோம். இதில் எங்களது மிகச்சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினால் கோப்பையை வெல்ல பிரகாசமான வாய்ப்புள்ளது.

நான் விளையாடும் சர்வதேச கிரிக்கெட் போட்டியை முதல்முறையாக எனது பெற்றோர் நேரில் பார்க்க இருந்தனர். துரதிர்ஷ்டவசமாக அது நடக்கவில்லை. நாங்கள் விளையாடுவதை பார்க்க வந்துள்ள அவர்கள் இறுதிப்போட்டிவரை ஆஸ்திரேலியாவில் தான் இருப்பார்கள். அவர்கள் மட்டுமல்ல, எல்லோருடைய பெற்றோரின் ஆதரவும் எங்களுக்கு கிடைக்கும் என்று நம்புகிறேன். அதன் மூலம் உலக கோப்பையை வெல்ல முயற்சிப்போம். இவ்வாறு ஹர்மன்பிரீத் கவுர் கூறினார்.

இங்கிலாந்து கேப்டன் ஹீதர் நைட் கூறுகையில், ‘எங்களது உலக கோப்பை பயணம் முடிந்தவிதம் உண்மையிலேயே ஏமாற்றம் அளிக்கிறது. ஆனால் வானிலை விஷயத்தில் செய்வதற்கு எதுவும் இல்லை. மாற்றுநாள் இருந்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும். முதலாவது லீக்கில் தென்ஆப்பிரிக்காவிடம் அடைந்த தோல்வி இப்போது எங்களது வாய்ப்பை பறித்து விட்டது.

அரைஇறுதிக்கு மாற்றுநாள் கிடையாது என்ற ஐ.சி.சி.யின் விதிமுறையில் அனைவரும் கையெழுத்திட்டுள்ளோம். இருப்பினும் வருங்காலத்தில் இந்த விதிமுறையில் மாற்றம் தேவை. இதை செய்வார்கள் என்று நம்புகிறேன்’ என்றார்.

‘இந்திய வீராங்கனைகளால் பெருமிதம்’ - கோலி

20 ஓவர் உலககோப்பை கிரிக்கெட் போட்டியில் முதல்முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறிய இந்திய பெண்கள் அணிக்கு இந்திய ஆண்கள் அணியின் கேப்டன் விராட் கோலி வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், ‘இறுதிசுற்றை எட்டிய இந்திய பெண்கள் அணிக்கு வாழ்த்துகள். உங்களை நினைத்து நாங்கள் பெருமிதம் கொள்கிறோம். இறுதிப்போட்டியிலும் சாதிக்க வாழ்த்துகள்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்திய முன்னாள் வீரர் ஷேவாக், ‘லீக் சுற்றில் அனைத்து ஆட்டங்களிலும் பெற்ற வெற்றிக்கு கிடைத்த பரிசு இது. இந்த ஞாயிற்றுக்கிழமை மகுடம் சூடுவதற்கு வாழ்த்துகள்’ என்றார்.

விராட் கோலியின் மனைவியும், இந்தி நடிகையுமான அனுஷ்கா சர்மா டுவிட்டர் பக்கத்தில், ‘மிகச்சிறந்த ஆட்டத்தை பார்க்க உற்சாகமாக இருந்த நிலையில் மழை புகுந்து பாழ்படுத்தி விட்டது. அடுத்து 8-ந்தேதி நடக்கும் இறுதி ஆட்டத்தை காண ஆர்வமுடன் காத்திருக்கிறேன்’ என்றார்.

Next Story