ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி தள்ளி வைக்கப்படமாட்டாது - கங்குலி திட்டவட்டம்


ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி தள்ளி வைக்கப்படமாட்டாது - கங்குலி திட்டவட்டம்
x
தினத்தந்தி 10 March 2020 12:35 AM GMT (Updated: 10 March 2020 12:35 AM GMT)

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி தள்ளி வைக்கப்படமாட்டாது என கங்குலி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

13-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மும்பையில் வருகிற 29-ந் தேதி தொடங்குகிறது. கொரோனா வைரஸ் இந்தியாவிலும் பரவுவதால் இந்த போட்டி தள்ளி வைக்கப்படலாம் என்ற சந்தேகம் கிளம்பி இருக்கிறது. இதற்கிடையில் மராட்டிய மாநில சுகாதார துறை மந்திரி ராஜேஷ் டோப் அளித்த ஒரு பேட்டியில், ‘மக்கள் ஒரு இடத்தில் அதிக அளவில் கூடும் போது அங்கு ஒருவருக்கு கொரோனா வைரஸ் தாக்கம் இருந்தாலும் அது வேகமாக மற்றவர்களுக்கு பரவுவதற்கான வாய்ப்பு இருக்கிறது. எனவே சிறிது காலத்துக்கு மக்கள் கூடும் நிகழ்ச்சிகள் நடத்துவதை தவிர்க்க வேண்டும். எனவே ஐ.பி.எல். போட்டியை தள்ளி வைக்கலாமா? என்பது குறித்து ஆலோசனை நடைபெற்று வருகிறது’ என்று கூறியிருந்தார். இது குறித்து இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் சவுரவ் கங்குலியிடம் கேட்ட போது, அவர் கூறுகையில், ‘ஐ.பி.எல். போட்டியை தள்ளி வைக்கும் எண்ணம் எதுவுமில்லை. போட்டி திட்டமிட்டபடி நடைபெறும். இந்த போட்டியுடன் தொடர்புடைய அனைத்து தரப்பினருக்கும் போட்டிக்கு முன்னதாகவும், போட்டியின் போதும் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்று இந்திய கிரிக்கெட் வாரியம் உறுதி அளித்துள்ளது. கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளை இந்திய கிரிக்கெட் வாரியம் தீவிரமாக மேற்கொள்ளும்’ என்றார்


Next Story