பொது இடங்களுக்கு செல்லும் அனைவரும் மாஸ்க் அணியுங்கள் - தெண்டுல்கர், கோலி வேண்டுகோள்


பொது இடங்களுக்கு செல்லும் அனைவரும் மாஸ்க் அணியுங்கள் - தெண்டுல்கர், கோலி வேண்டுகோள்
x
தினத்தந்தி 20 April 2020 6:24 AM GMT (Updated: 20 April 2020 6:24 AM GMT)

'பொது இடங்களுக்கு செல்லும் அனைவரும் கட்டாயமாக 'மாஸ்க்' அணிய வேண்டும் என சச்சின் தெண்டுல்கர் கோலி உள்ளிட்டோர் வேண்டுகோள்விடுத்துள்ளனர்.

புதுடெல்லி,

உலகளவில் கொரோனா பாதிப்பு 24 லட்சத்து 2 ஆயிரத்து 980 பேர் உயர்ந்துள்ளது. உயிரிழப்பு ஒரு லட்சத்து 65 ஆயிரத்து 641 பேர் ஆனது. அதில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 6 லட்சத்து 15 ஆயிரத்து 703 ஆக உள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 17,265 ஆகவும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 543 ஆகவும், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2547 ஆகவும் அதிகரித்துள்ளது.

இந்தநிலையில், இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருகிறது.கொரோனா வைரசிடம் இருந்து  தப்பிக்க வீட்டை விட்டு வெளியே செல்லும் அனைவரும் கட்டாயம் 'மாஸ்க்' (முகக் கவசம்) அணிய வேண்டும் என மத்திய மாநில அரசுகள்  வலியுறுத்தி வருகிறது.

இதை வலியுறுத்தும் வகையில் இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) சார்பில் முன்னணி கிரிக்கெட் நட்சத்திரங்களை கொண்டு 'டீம் மாஸ்க் போர்ஸ்' என்ற பெயரில் 'வீடியோ' வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்து பி.சி.சி.ஐ., வெளியிட்ட 'டுவிட்டர்' செய்தியில்,

'இந்திய கிரிக்கெட் அணி தற்போது 'டீம் மாஸ்க் போர்ஸ்' ஆகியுள்ளது. இந்தியாவில் கொரோனா வைரசை விரட்ட நீங்களும் இதில் இணையவேண்டும். உங்களது மொபைல்போனில் 'ஆரோக்ய சேது', எனது இந்திய அரசு, செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்,' என தெரிவித்துள்ளது.

இதில் இந்திய விளையாட்டு நட்சத்திரங்கள் கூறியதாவது:-

எல்லோரும் 'மாஸ்க்' உருவாக்குங்கள், எங்கள் 'மாஸ்க் போர்சில்' ஒரு பகுதியாக மாறுங்கள். முக்கியமாக 20 வினாடிகள் கைகழுவுங்கள், சமூக விலகலை கடைபிடியுங்கள் என இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் சச்சின் தெண்டுல்கர் கூறியுள்ளார்.

இந்திய அணியில் ஒரு அங்கமாக இருப்பது பெருமையாக உள்ளது. ஆனால் இன்று நாம் எல்லோரும் சேர்ந்து மிகப்பெரிய அணியை உருவாக்கப் போகிறோம் என விராட் கோலி தெரிவித்துள்ளார்.

மாஸ்க் போர்சில்' இணைவது மிக எளிது. என்னைப் போல, எல்லோரும் தங்களது வீடுகளில் 'மாஸ்க்' தயார் செய்யுங்கள் என ரோகித் சர்மா குறிப்பிட்டுள்ளார்.

இதை தவிர பி.சி.சி.ஐ., தலைவர் கங்குலி, முன்னாள் வீரர் டிராவிட், சேவக், ஹர்பஜன் சிங், இந்திய வீராங்கனைகள் மிதாலி ராஜ், ஹர்மன்பிரீத் கவுர், ஸ்மிருதி மந்தனாவும் 'மாஸ்க்' அணிவதன் அவசியத்தை குறித்து விளக்கை உள்ளனர். 

Next Story