பந்தை பளபளப்பு செய்ய முடியாவிட்டால் பவுலர்களின் திறமை பாதியாக குறைந்து விடும் - புவனேஷ்வர்குமார் சொல்கிறார் + "||" + If the ball is not able to glow, the bowlers' efficiency will be halved - says Bhuvaneshwar Kumar
பந்தை பளபளப்பு செய்ய முடியாவிட்டால் பவுலர்களின் திறமை பாதியாக குறைந்து விடும் - புவனேஷ்வர்குமார் சொல்கிறார்
பந்தை பளபளப்பு செய்ய முடியாவிட்டால் பவுலர்களின் திறமை பாதியாக குறைந்து விடும் என்று இந்திய முன்னணி வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர்குமார் கூறியுள்ளார்.
புதுடெல்லி,
இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் 30 வயதான புவனேஷ்வர்குமார் அளித்த பேட்டி ஒன்றில் கூறியதாவது:-
கொரோனா பரவும் அபாயம் இருப்பதாக கூறி பந்தை எச்சிலால் தேய்த்து பளபளப்பாக்குவதற்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) தடை விதித்துள்ளது. மணிக்கு 145 கிலோமீட்டர் வேகத்தில் பந்து வீசும் ஒரு பவுலருக்கு இதனால் எந்த வகையிலும் பாதிப்பு இல்லை. ஏனெனில் அவர் தனது பந்து வீச்சின் வேகத்தை அதிகப்படுத்திக் கொள்வார். ஆனால் ‘ஸ்விங்’ பந்து வீச்சை சார்ந்து இருக்கும் என்னை போன்ற பவுலர்களுக்கு தான் எச்சிலை பயன்படுத்த தடை விதித்திருப்பது பின்னடைவாக இருக்கும். பந்து ‘ஸ்விங்’ ஆகாவிட்டால், ஆட்டம் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக மாறி விடும்.
உதாரணமாக, இங்கிலாந்து மண்ணில் விளையாடும் போது அங்குள்ள சூழலில் பந்தை நன்கு ‘ஸ்விங்’ செய்ய முடியும். ஆனால் சில ஓவர்களுக்கு பிறகு பந்து பழசானதும் எச்சிலால் தேய்க்க வழியில்லாத நிலைமையில் பந்தை பளபளப்பாக்க முடியாது. பந்தை ஒரு பக்கம் பளபளப்பாக வைத்திருக்காவிட்டால், என்னை போன்ற பந்து வீச்சாளர்களின் திறமை ‘ஸ்விங்’ செய்ய முடியாமல் பாதியாக குறைந்து விடும்.
பந்தை பளபளப்பு செய்வது கிரிக்கெட்டில் ஒரு அங்கமாகி விட்டது. இது ‘ஸ்விங்’ பந்து வீச்சாளர்களுக்கு மட்டுமல்ல, சுழற்பந்து வீச்சாளர்களுக்கும் முக்கியமானது. எனவே பந்தை பளபளப்பு செய்ய ஏதாவது செயற்கை பொருளை பயன்படுத்த ஐ.சி.சி. ஒப்புதல் வழங்கும் என்று நம்புகிறேன்.
எச்சிலுக்கு பதிலாக வியர்வையால் பந்தை தேய்க்கலாம் என்று ஐ.சி.சி. கூறியுள்ளது. கோடை காலத்தில் எச்சிலுக்கு மாற்றாக வியர்வையை பயன்படுத்தலாம். ஆனால் வேறு எந்த பொருளையும் பயன்படுத்த ஐ.சி.சி. அனுமதிக்காவிட்டால் பந்தை வியர்வையால் தான் தேய்த்தாக வேண்டும். அதுவும் குளிர்காலத்தில் போட்டி நடக்கும் போது எங்கிருந்து வியர்வை வரும்? அதன் பிறகு பந்தை எப்படி பளப்பளப்பாக்குவது? நிச்சயம் இது பவுலர்களுக்கு மிகவும் சவாலாக இருக்கும்.
ரசிகர்கள் இன்றி பூட்டிய மைதானத்தில் கிரிக்கெட் போட்டிகள் நடக்க இருப்பது குறித்து கேட்கிறீர்கள். எந்த ஒரு போட்டிக்கும் ரசிகர்கள் முக்கியம். களத்தில் அவர்களது கரவொலியும், உற்சாகமும் நமது நம்பிக்கைக்கு ஊக்கமாக அமையும். அதே சமயம் நீங்கள் நாட்டுக்காக பங்கேற்கும் போது எப்போதும் 100 சதவீத திறமையை வெளிப்படுத்த வேண்டியது அவசியம். தேசத்துக்காக விளையாடுவதை விட பெரிய உத்வேகம் அளிக்கும் விஷயம் எதுவும் கிடையாது.