ஐ.பி.எல். கிரிக்கெட்டில் சில ஆட்டங்களை தவற விடும் ஸ்டீவன் சுமித், வார்னர்


ஐ.பி.எல். கிரிக்கெட்டில் சில ஆட்டங்களை தவற விடும் ஸ்டீவன் சுமித், வார்னர்
x
தினத்தந்தி 15 Aug 2020 12:59 AM GMT (Updated: 15 Aug 2020 12:59 AM GMT)

இங்கிலாந்து தொடரில் விளையாட இருப்பதால், ஐ.பி.எல். கிரிக்கெட்டில் சில ஆட்டங்களை ஸ்டீவன் சுமித், வார்னர் ஆகியோர் தவற விடுகிறார்கள்.

லண்டன், 

இங்கிலாந்துக்கு சென்று சர்வதேச கிரிக்கெட் போட்டியில் விளையாட இருப்பதால் ஆஸ்திரேலியாவின் ஸ்டீவன் சுமித், வார்னர், கம்மின்ஸ் உள்ளிட்ட நட்சத்திர வீரர்கள் ஐ.பி.எல்.-ன் தொடக்ககட்ட ஆட்டங்களை தவற விடுகிறார்கள்.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒரு நாள் மற்றும் மூன்று 20 ஓவர் போட்டிகளில் விளையாடுவதை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் நேற்று உறுதி செய்தது. இதன்படி இங்கிலாந்து - ஆஸ்திரேலியா இடையிலான 20 ஓவர் போட்டிகள் செப்டம்பர் 4, 6, 8-ந்தேதிகளில் சவுதம்டனிலும், ஒரு நாள் போட்டிகள் செப்.11, 13, 16-ந்தேதிகளில் மான்செஸ்டரிலும் நடைபெறுகிறது.

இங்கிலாந்து அரசாங்கத்தின் கொரோனா தடுப்பு பாதுகாப்பு வழிகாட்டுதலின்படி, ஆஸ்திரேலிய நாட்டவர் இங்கிலாந்துக்கு செல்லும் போது தனிமைப்படுத்த வேண்டிய அவசியமில்லை. ஆஸ்திரேலிய வீரர்கள் கொரோனா பரிசோதனை செய்து கொண்டால் மட்டும் போதும். அவர்கள் வருகிற 24-ந்தேதி இங்கிலாந்துக்கு புறப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

‘இந்த தொடருக்காக முழு முயற்சி எடுத்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் மற்றும் வீரர்கள், பயிற்சி உதவியாளர்களுக்கு நன்றி கடன்பட்டுள்ளோம். இங்கிலாந்தில் தற்போதைய சூழலில் இந்த கிரிக்கெட் போட்டி மிகவும் முக்கியமானது. குறிப்பாக இங்கிலாந்தில் எல்லா வகையிலான கிரிக்கெட்டுக்கும் தேவையான நிதி வழங்குவதற்கு இந்த தொடர் உதவும்’ என்று இங்கிலாந்து கிரிக்கெட் வாரிய தலைமை செயல் அதிகாரி டாம் ஹாரிசன் குறிப்பிட்டார்.

ஆரோன் பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியில் ஸ்டீவன் சுமித், டேவிட் வார்னர், கம்மின்ஸ், ஹேசில்வுட், அலெக்ஸ் கேரி, லபுஸ்சேன், மேக்ஸ்வெல், கேன் ரிச்சர்ட்சன், மார்கஸ் ஸ்டோனிஸ், மிட்செல் மார்ஷ், நாதன் லயன், மிட்செல் ஸ்டார்க், ஆன்ட்ரூ டை, ஆடம் ஜம்பா உள்பட 21 வீரர்கள் இடம் பெற்றுள்ளனர்.

இந்த தொடர் செப்டம்பர் 16-ந்தேதி நிறைவடைகிறது. அடுத்த 3 நாட்களில் அதாவது செப்டம்பர் 19-ந்தேதி ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்குகிறது.

தற்போதைய ஆஸ்திரேலிய அணியில் அங்கம் வகிக்கும் 21 பேரில் ஸ்டீவன் சுமித் (ராஜஸ்தான்), வார்னர் (ஐதராபாத்), கம்மின்ஸ் (கொல்கத்தா), மேக்ஸ்வெல் (பஞ்சாப்), ஆரோன் பிஞ்ச் (பெங்களூரு), ஹேசில்வுட் (சென்னை), அலெக்ஸ் கேரி (டெல்லி) உள்பட 12 வீரர்கள் ஐ.பி.எல். அணிகளில் விளையாட ஒப்பந்தமாகியுள்ளனர். அவர்கள் இங்கிலாந்து தொடரை முடித்துக் கொண்டு உடனடியாக அமீரகம் புறப்படுவார்கள். ஐ.பி.எல். நிர்வாகத்தின் கொரோனா தடுப்பு பாதுகாப்பு நடைமுறையின்படி அமீரகம் செல்லும் வீரர்கள் 7 நாட்கள் கட்டாயம் தனிமைப்படுத்தப்படுவார்கள். இந்த காலக்கட்டத்தில் மூன்று முறை கொரோனா பரிசோதனை செய்து ‘நெகட்டிவ்’ முடிவு வர வேண்டும். ஆஸ்திரேலிய வீரர்களுக்கு விதிமுறை தளர்வு எதுவும் வழங்கப்படாது என்று தெளிவாக தெரிகிறது. இவற்றை எல்லாம் பார்க்கும் போது ஆஸ்திரேலிய வீரர்கள் ஐ.பி.எல்.-ல் தங்கள் அணிக்குரிய 2-3 ஆட்டங்களை தவற விடுவார்கள் என்பதில் சந்தேகமில்லை.

ஐ.பி.எல்.-ல் ஆடும் இங்கிலாந்து வீரர்களான மோர்கன், ஜாசன் ராய், ஜோஸ் பட்லர், பென் ஸ்டோக்ஸ், பேர்ஸ்டோ, ஜோப்ரா ஆர்ச்சர் ஆகியோரும் இதே நிலைமையில் தான் உள்ளனர். அவர்கள் இங்கிலாந்து அணிக்கு தேர்வு செய்யப்பட்டால் ஐ.பி.எல்.-ன் தொடக்க கட்ட ஆட்டங்களில் விளையாட முடியாது.

அதே சமயம் ஆஸ்திரேலிய அணியின் உதவி பயிற்சியாளர் ஆன்ட்ரூ மெக்டொனால்டு, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராகவும் இருக்கிறார். அவரை ஐ.பி.எல். அணிக்காக பணியாற்ற ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அனுமதி அளித்து இருப்பதால் இங்கிலாந்துக்கு செல்லமாட்டார்.


Next Story