‘டிவில்லியர்ஸ் ஒரு சூப்பர்ஹியூமன்’ - பெங்களூரு அணி கேப்டன் கோலி புகழாரம்


‘டிவில்லியர்ஸ் ஒரு சூப்பர்ஹியூமன்’ - பெங்களூரு அணி கேப்டன் கோலி புகழாரம்
x
தினத்தந்தி 13 Oct 2020 11:06 PM GMT (Updated: 13 Oct 2020 11:06 PM GMT)

‘டிவில்லியர்ஸ் ஒரு சூப்பர்ஹியூமன்’ என்று பெங்களூரு அணியின் கேப்டன் விராட்கோலி புகழாரம் சூட்டினார்.

சார்ஜா, 

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் சார்ஜாவில் நேற்று முன்தினம் இரவு நடந்த லீக் ஆட்டத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி 82 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்சை பந்தாடி 5-வது வெற்றியை சொந்தமாக்கியது.

இதில் பெங்களூரு நிர்ணயித்த 195 ரன் இலக்கை நோக்கி ஆடிய கொல்கத்தா அணி 9 விக்கெட் இழப்புக்கு 112 ரன்களே எடுத்து பணிந்தது. 33 பந்துகளில் 5 பவுண்டரி, 6 சிக்சருடன் 73 ரன்கள் விளாசி ஆட்டம் இழக்காமல் இருந்த பெங்களூரு அணி வீரர் 36 வயதான டிவில்லியர்ஸ் ஆட்டநாயகன் விருது பெற்றார்.

வெற்றிக்கு பிறகு பெங்களூரு அணியின் கேப்டன் விராட் கோலி அளித்த பேட்டியில், ‘வலுவான அணிக்கு எதிராக கிடைத்த மிகப்பெரிய வெற்றி இதுவாகும். கிறிஸ் மோரிஸ் அணிக்கு திரும்பி இருப்பதன் மூலம் எங்கள் பந்து வீச்சு அதிக பலம் அடைந்து இருக்கிறது. இது வழக்கமான சார்ஜா ஆடுகளம் போன்று இல்லை. வறண்டு காணப்பட்டது. போக போக ஆடுகளத்தன்மையில் வேகம் குறையும் (ஸ்லோ) என்பது தெரியும். மேலும் பனியின் தாக்கம் எதுவும் இருக்காது என்று நாங்கள் நினைத்தோம். டிவில்லியர்ஸ் எனும் ஒரு சூப்பர்ஹியூமன் (அசாத்திய ஆற்றல் படைத்த மனிதர்) தவிர எல்லா பேட்ஸ்மேன்களும் இந்த ஆடுகளத்தில் திணறினார்கள். 165 ரன்கள் எடுக்க வேண்டும் என்பது குறித்து தான் பேசினோம். அதையும் தாண்டி நாங்கள் 194 ரன்கள் குவித்தோம். அதனை எப்படி எடுத்தோம் என்பது உங்களுக்கு தெரியும். இது நம்ப முடியாததாகும். இதுபோல் டிவில்லியர்சால் மட்டுமே விளையாட முடியும். இது ஒரு அற்புதமான ஆட்டமாகும். அவருடன் இணைந்து ஆடியது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. எதிர்முனையில் இருந்து அவரது பேட்டிங்கை நன்றாக ரசித்தேன்’ என்றார்.

தோல்வி குறித்து கொல்கத்தா அணியின் கேப்டன் தினேஷ் கார்த்திக் கூறுகையில் ‘டிவில்லியர்ஸ் உலகத் தரம் வாய்ந்த வீரர். அவரை கட்டுப்படுத்துவது என்பது கடினமான விஷயமாகும். இரு அணிகளுக்கும் இடையே அவருடைய ஆட்டம் தான் வித்தியாசம். அவருக்கு எதிராக நாங்கள் எல்லா வகையிலும் முயன்று பார்த்தோம். ஆனால் ஒன்றும் நடக்கவில்லை. துல்லியமான இன்ஸ்விங் யார்க்கர் மட்டுமே அவரை சமாளிக்க சரியானதாக இருக்கும். நாங்கள் அவர்களை 175 ரன்களுக்குள் கட்டுப்படுத்தி இருந்தால் கூட இன்னும் சில விஷயங்களில் நாங்கள் சிறப்பாக செயல்பட வேண்டியது அவசியமானதாகும். எந்தவொரு கேப்டனுக்கும் ஒருநாளில் எதுவும் சரியாக அமையாமல் போகும்’ என்றார்.

டிவில்லியர்சுக்கு ரவிசாஸ்திரி வேண்டுகோள்

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி டுவிட்டர் பதிவில், ‘கொல்கத்தாவுக்கு எதிரான ஆட்டத்தில் டிவில்லியர்சின் பேட்டிங் நம்ப முடியாத வகையில் இருந்தது. இந்த கடினமான சூழ்நிலையில் நீங்கள் சர்வதேச கிரிக்கெட்டுக்கு தேவையாகும். எனவே நீங்கள் ஓய்வில் இருந்து வெளியே வர வேண்டும். இதனால் கிரிக்கெட்டுக்கு மேலும் பல நன்மைகள் கிடைக்கும்’ என்று குறிப்பிட்டுள்ளார். தென்ஆப்பிரிக்க வீரரான டிவில்லியர்ஸ் 2018-ம் ஆண்டு மே மாதம் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார்.


Next Story