‘இந்திய அணியில் இடம் எதிர்பார்க்காத ஒன்று’ வருண்சக்ரவர்த்தி பேட்டி


‘இந்திய அணியில் இடம் எதிர்பார்க்காத ஒன்று’ வருண்சக்ரவர்த்தி பேட்டி
x
தினத்தந்தி 27 Oct 2020 11:15 PM GMT (Updated: 27 Oct 2020 11:15 PM GMT)

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 20 ஓவர் தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணியில் முதல்முறையாக தமிழகத்தை சேர்ந்த சுழற்பந்து வீச்சாளர் வருண்சக்ரவர்த்தி சேர்க்கப்பட்டு உள்ளார்.

சார்ஜா, 

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 20 ஓவர் தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணியில் முதல்முறையாக தமிழகத்தை சேர்ந்த சுழற்பந்து வீச்சாளர் வருண்சக்ரவர்த்தி சேர்க்கப்பட்டு உள்ளார். ஐ.பி.எல். கிரிக்கெட்டில் கொல்கத்தா அணிக்காக பிரமாதமாக பந்து வீசி வரும் (11 ஆட்டத்தில் 13 விக்கெட்) 29 வயதான வருண் சக்ரவர்த்தி கூறுகையில், ‘இந்திய அணிக்கு தேர்வு செய்யப்பட்டது பெரிய விஷயம். இதை எதிர்பார்க்கவே இல்லை. இன்னும் சொல்லப்போனால் நம்பவே முடியவில்லை. எனது உணர்வுகளை விவரிக்க வார்த்தைகளே இல்லை. ஐ.பி.எல். கிரிக்கெட்டில் கொல்கத்தா அணிக்காக தொடர்ந்து விளையாட வேண்டும். வெற்றிக்கு மிகச்சிறந்த பங்களிப்பை அளிக்க வேண்டும் என்பதே எனது அடிப்படை லட்சியம். இதையே இந்திய அணிக்காகவும் செய்ய முடியும் என்று நம்புகிறேன். என் மீது நம்பிக்கை வைத்து வாய்ப்பு அளித்த தேர்வு குழுவினருக்கு நன்றி’ என்றார்.

சென்னையில் தனியார் கல்லூரியில் கட்டிடக் கலை வல்லுனர் படிப்பு படித்து விட்டு சிறிது காலம் வேலை பார்த்த வருண்சக்ரவர்த்தி அதை உதறிவிட்டு கிரிக்கெட் வீரராக உருவெடுத்தார். 2018-ம் ஆண்டில் தமிழ்நாடு பிரிமீயர் லீக் (டி.என்.பி.எல்.) கிரிக்கெட்டில் எதிரணி பேட்ஸ்மேன்களால் எளிதில் கணிக்க முடியாத அளவுக்கு தனது சுழற்பந்து வீச்சில் பலவித வித்தியாசங்களை வெளிக்காட்டி வியக்க வைத்த வருண் சக்ரவர்த்தி அதன் மூலம் ஐ.பி.எல். போட்டிக்குள் நுழையும் அதிர்ஷ்டத்தை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே வருண்சக்ரவர்த்தியை பாராட்டியுள்ள கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர், ‘இந்த ஐ.பி.எல். தொடர் முழுவதும் வருண் சக்ரவர்த்தி சிறப்பாக பந்து வீசி வருகிறார். அரிதாக ஒரு சில ஆட்டங்களில் மட்டுமே கொஞ்சம் கூடுதல் ரன்களை விட்டுக்கொடுத்துள்ளார். எப்படிப்பட்ட பேட்ஸ்மேன் களத்தில் இருந்தாலும் மனஉறுதியுடன் சரியான அளவில் பந்து வீசுகிறார். அவரது பந்து வீச்சு என்னை வெகுவாக கவர்ந்துள்ளது’ என்று கூறியுள்ளார்.

Next Story