தோல்விக்கு காரணம் என்ன? விராட் கோலி விளக்கம்


தோல்விக்கு காரணம் என்ன? விராட் கோலி விளக்கம்
x
தினத்தந்தி 7 Nov 2020 6:33 AM GMT (Updated: 7 Nov 2020 6:33 AM GMT)

டிவில்லியர்சிடம் இருந்து எப்போதும் சிறப்பான பங்களிப்பை எதிர்பார்க்கலாம் என்று விராட் கோலி கூறினார்.

அபுதாபி,

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற வெளியேற்றுதல்  சுற்று ஆட்டத்தில் பெங்களூரு அணியை ஐதராபாத் அணி தோற்கடித்தது. இதன் மூலம் நடப்பு ஐபிஎல் சீசனில் இருந்து பெங்களூரு அணி வெளியேற்றப்பட்டது.  ஐபிஎல் தொடரில் இதுவரை கோப்பை வெல்லாத அணியாக இருக்கும் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் கோப்பை வெல்லும் கனவு இந்த முறையும் தகர்ந்து போனது. 

தோல்விக்குப் பிறகு பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் கேப்டன் கோலி கூறியதாவது:-  நாங்கள் போதிய அளவு ரன்கள் குவிக்கவில்லை. கேன் வில்லியம்சன் கொடுத்த கேட்சை பிடித்திருந்தால் ஆட்டத்தின் போக்கு மாறியிருக்கும். 

முதல் இன்னிங்ஸில் ஏராளமான அழுத்தங்கள் நெருக்கடிகளை சன்ரைசர்ஸ் அணியினர் எங்களுக்குக் கொடுத்தார்கள். அதுமட்டுமல்லாமல் விரைவாக நாங்கள் விக்கெட்டுகளையும் இழந்துவிட்டோம். போதுமான ரன்கள் அடிக்காமல் இருந்ததும் தோல்விக்கான காரணமாக அமைந்தது. 

இந்தத் தொடரில் சாதகமான விஷயம் என்னவென்றால் தேவ்தத் படிக்கல் சிறந்த வீரராக உருவெடுத்துள்ளார். முதல் தொடரிலேயே 400 ரன்களுக்கு மேல் குவித்து, சிறந்த பேட்ஸ்மேனாக உருவெடுத்து திறமையை நிரூபித்துள்ளார். அவரை நினைத்துப் பெருமைப்படுகிறேன்.

சாஹல், டிவில்லியர்ஸ் இருவரிடம் இருந்தும் எப்போதும் சிறப்பான பங்களிப்பைக் காண முடியும். உள்நாட்டில் ஐபிஎல் போட்டி நடக்காமல் வெளிநாட்டில் நடந்ததால்தான் இந்த அளவுக்குக் கடும் போட்டியாக மாறியுள்ளது. ஐபிஎல் அணிகளின் வலிமையையும் இந்தத் தொடர் எடுத்துக் காட்டியுள்ளது. 

ஒவ்வொரு அணியிலும் வலிமையான, திறமையான வீரர்கள் இருக்கிறார்கள். எந்தப் போட்டியும் யாருக்கும் சாதகமாக இல்லாமல், கடும் சவாலாகவே இருந்தது. ஒவ்வொரு ஆண்டு போல இந்த ஆண்டும் எங்களுக்கும் ஆதரவளித்த ரசிகர்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்” என்றார்.

Next Story