பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் பேட்டிங் பயிற்சியாளராக யூனிஸ்கான் நியமனம்


பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் பேட்டிங் பயிற்சியாளராக யூனிஸ்கான் நியமனம்
x
தினத்தந்தி 12 Nov 2020 10:59 PM GMT (Updated: 12 Nov 2020 10:59 PM GMT)

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் பேட்டிங் பயிற்சியாளராக யூனிஸ்கான் நியமிக்கப்பட்டுள்ளார்.

கராச்சி, 

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், தலைசிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவருமான 42 வயதான யூனிஸ்கான் சமீபத்தில் நடந்த இங்கிலாந்து தொடரில் பாகிஸ்தான் அணியின் பேட்டிங் பயிற்சியாளராக தற்காலிகமாக பணியாற்றினார். அவரது செயல்பாடு சிறப்பாக இருந்ததை அடுத்து அவரை பாகிஸ்தான் அணியின் பேட்டிங் பயிற்சியாளராக கிரிக்கெட் வாரியம் நேற்று நியமித்தது. யூனிஸ்கான் 2022-ம் ஆண்டு அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் 20 ஓவர் உலக கோப்பை போட்டி வரை அந்த பதவியில் நீடிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த மாதம் நடக்கும் நியூசிலாந்து தொடரில் இருந்து யூனிஸ்கானின் பணி தொடங்கும்.

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைமை செயல் அதிகாரி வாசிம்கான் கூறுகையில், ‘யூனிஸ்கானின் செயல் திட்டம், அர்ப்பணிப்பு, ஆட்ட அறிவு முதன்மையானதாகும். அவரது நியமனத்தின் மூலம் திறமையான பேட்ஸ்மேன்கள் பலரும் பயன் அடைவார்கள் என்று நம்புகிறேன். பாகிஸ்தான் அணிக்கு போட்டிகள் இல்லாத சமயத்தில் யூனிஸ்கானின் திறமையை உள்ளூர் பேட்ஸ்மேன்களின் திறமையை வளர்க்க பயன்படுத்தி கொள்வோம்’ என்றார்.

Next Story