விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட்: வெற்றியோடு வெளியேறியது தமிழக அணி


விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட்: வெற்றியோடு வெளியேறியது தமிழக அணி
x
தினத்தந்தி 1 March 2021 12:18 AM GMT (Updated: 1 March 2021 12:18 AM GMT)

விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட்டில் தமிழக அணி கடைசி லீக்கில் விதர்பாவை தோற்கடித்த போதிலும் அடுத்த சுற்று வாய்ப்பை எட்ட முடியாமல் வெளியேறியது.

இந்தூர், 

38 அணிகள் பங்கேற்றுள்ள விஜய் ஹசாரே கோப்பைக்கான ஒரு நாள் கிரிக்கெட் போட்டித் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.

இதில் இந்தூரில் நேற்று நடந்த ‘பி’ பிரிவு கடைசி லீக் ஆட்டத்தில் தமிழக அணி, விதர்பாவை எதிர்கொண்டது. ‘டாஸ்’ ஜெயித்த தமிழக கேப்டன் தினேஷ் கார்த்திக் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதன்படி முதலில் பேட் செய்த விதர்பா அணி, தமிழகத்தின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 41 ஓவர்களில் 150 ரன்னில் சுருண்டது. அதிகபட்சமாக விக்கெட் கீப்பர் அக்‌ஷய் வாட்கர் 31 ரன்கள் எடுத்தார். தமிழகம் தரப்பில் பாபா அபராஜித், ஜே.கவுசிக், முகமது ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

அடுத்து இலக்கை சீக்கிரம் எட்டி ரன்ரேட்டை உயர்த்தும் முனைப்புடன் அதிரடியாக விளையாடிய தமிழக அணி 11.2 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 152 ரன்கள் சேர்த்து 5 விக்கெட் வித்தியாசத்தில் மொத்தம் 232 பந்துகள் மீதம் வைத்து வெற்றி பெற்றது. ஜெகதீசன் 48 ரன்களும் (18 பந்து, 4 பவுண்டரி, 4 சிக்சர்), முகமது 37 ரன்களும் (14 பந்து, 3 பவுண்டரி, 3 சிக்சர்), கேப்டன் தினேஷ் கார்த்திக் 19 ரன்களும் (2 சிக்சர்) விளாசினர்.

ஆந்திரா அமர்க்களம்

ஆனால் இந்த பிரிவில் இதே போன்று ஆந்திராவும் அதிரடி காட்டி ரன்ரேட்டில் தமிழகத்தை முந்தியது. ஆந்திரா தனது கடைசி லீக்கில் ஜார்கண்ட் அணியுடன் நேற்று மல்லுக்கட்டியது. முதலில் பேட் செய்த ஜார்கண்ட் 46.2 ஓவர்களில் வெறும் 139 ரன்னில் முடங்கியது. கேப்டன் இஷான் கிஷன் (38 ரன், 68 பந்து) மட்டும் ஓரளவு நிலைத்து நின்று ஆடினார். மற்றவர்கள் சொற்ப ரன்னில் நடையை கட்டினர். பின்னர் களம் கண்ட ஹனுமா விஹாரி தலைமையிலான ஆந்திரா அணி 9.5 ஓவர்களில் இலக்கை அடைந்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஆந்திர பேட்ஸ்மேன்கள் மொத்தம் 12 சிக்சர்களை பறக்க விட்டனர்.

மற்றொரு ஆட்டத்தில் மத்தியபிரதேச அணி 105 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப்பை பந்தாடியது. 2 ரன்னில் இரட்டை சதத்தை தவற விட்ட மத்திய பிரதேச வீரர் வெங்கடேஷ் அய்யர் 198 ரன்கள் (146 பந்து, 20 பவுண்டரி, 7 சிக்சர்) குவித்து ரன்-அவுட் ஆனார்.

‘பி’ பிரிவில் ஆந்திரா, தமிழ்நாடு, ஜார்கண்ட், மத்திய பிரதேசம் ஆகிய அணிகள் தலா 3 வெற்றி, 2 தோல்வி என்று 12 புள்ளிகளுடன் சமநிலை வகித்தன. ரன்ரேட் அடிப்படையில் ஆந்திரா இந்த பிரிவில் முதலிடம் பிடித்து கால்இறுதிக்கு முன்னேறியது. தமிழக அணி 2-வது இடத்தை பெற்றது. லீக் முடிவில் 5 பிரிவுகளில் முதலிடத்தை பிடிக்கும் அணிகளும், 2-வது இடத்தை பிடிக்கும் சிறந்த இரு அணிகளும், 3-வது இடத்தை பிடிக்கும் சிறந்த ஒரு அணியும் கால்இறுதி வாய்ப்பை பெறும். அந்த வகையில் பார்த்தால் தமிழக அணி அடுத்த சுற்று வாய்ப்பை இழந்து விட்டது.

தேவ்தத் ‘ஹாட்ரிக்’ சதம்

‘சி’ பிரிவில் பெங்களூருவில் உள்ள சின்னசாமி ஸ்டேடியத்தில் நடந்த ஒரு ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கர்நாடக அணி, ரெயில்வேயுடன் மோதியது. இதில் ரெயில்வே நிர்ணயித்த 285 ரன்கள் வெற்றி இலக்கை கர்நாடக அணி 40.3 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி எட்டிப்பிடித்து பிரமாதப்படுத்தியது. கர்நாடக தொடக்க வீரர்கள் ரவிகுமார் சமார்த் (130 ரன், 17 பவுண்டரி), தேவ்தத் படிக்கல் (145 ரன், 9 பவுண்டரி, 9 சிக்சர்) சதம் அடித்தனர். தேவ்தத் படிக்கல் தொடர்ச்சியாக பதிவு செய்த 3-வது சதம் இதுவாகும்.

இதே பிரிவில் நடந்த இன்னொரு ஆட்டத்தில் கேரளா 9 விக்கெட் வித்தியாசத்தில் பீகாரை தோற்கடித்தது. கேரள வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த் 4 விக்கெட்டுகளை சாய்த்தார்.

‘சி பிரிவில் கா்நாடகா, உத்தரபிரதேசம், கேரளா தலா 16 புள்ளிகளுடன் சமநிலை வகித்த போதிலும் ரன்-ரேட் அடிப்படையில் கர்நாடகா கால்இறுதி வாய்ப்பை தட்டிச்சென்றது.

‘ஏ’ பிரிவில் குஜராத் அணி 40 ரன்கள் வித்தியாசத்தில் பரோடாவை வீழ்த்தியதுடன் தொடர்ச்சியாக 5-வது வெற்றியை ருசித்து கால்இறுதியை உறுதி செய்தது.

Next Story