இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட்: இந்திய அணி வீரர்கள் தீவிர பயிற்சி


இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட்: இந்திய அணி வீரர்கள் தீவிர பயிற்சி
x
தினத்தந்தி 2 March 2021 12:43 AM GMT (Updated: 2 March 2021 12:43 AM GMT)

இங்கிலாந்துக்கு எதிரான 4 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் போட்டி தொடரில் விளையாடி வரும் இந்திய அணி சென்னையில் நடந்த முதலாவது டெஸ்டில் தோல்வியை சந்தித்தது.

ஆமதாபாத், 

இங்கிலாந்துக்கு எதிரான 4 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் போட்டி தொடரில் விளையாடி வரும் இந்திய அணி சென்னையில் நடந்த முதலாவது டெஸ்டில் தோல்வியை சந்தித்தது. சென்னையில் நடந்த 2-வது டெஸ்ட் மற்றும் ஆமதாபாத்தில் நடந்த 3-வது டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரில் 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இவ்விரு அணிகள் இடையிலான 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நாளை மறுநாள் தொடங்குகிறது. இந்த போட்டியில் வெற்றி பெற்றாலோ அல்லது டிரா செய்தாலோ இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்று விடும்.

இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டிக்கு தயாராகுவதற்காக இந்திய அணியின் கேப்டன் விராட்கோலி, துணை கேப்டன் ரஹானே, தொடக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மா உள்ளிட்ட வீரர்கள் ஆமதாபாத்தில் நேற்று தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டனர். முன்னதாக அவர்களுக்கு ஆலோசனை வழங்கிய தலைமை பயிற்சியாளர் ரவிசாஸ்திரி வீரர்களின் பயிற்சியை கண்காணித்தார். முந்தைய டெஸ்டில் 11 விக்கெட்டுகள் வீழ்த்திய சுழற்பந்து வீச்சாளர் அக்‌ஷர் பட்டேல், பேட்ஸ்மேன்களுக்கு பந்து வீசி பயிற்சி மேற்கொண்டார். வீரர்கள் பீல்டிங் பயிற்சியிலும் ஈடுபட்டனர். வீரர்கள் தீவிர பயிற்சி மேற்கொள்ளும் வீடியோவை இந்திய கிரிக்கெட் வாரியம் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. 

Next Story