டெஸ்ட் தரவரிசையில் அஸ்வின், ரிஷாப் பண்ட் முன்னேற்றம்


டெஸ்ட் தரவரிசையில் அஸ்வின், ரிஷாப் பண்ட் முன்னேற்றம்
x
தினத்தந்தி 11 March 2021 4:53 AM GMT (Updated: 11 March 2021 4:53 AM GMT)

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் டெஸ்ட் கிரிக்கெட் வீரர்களின் புதிய தரவரிசை பட்டியலையும் நேற்று வெளியிட்டது.

பேட்ஸ்மேன்களின் தரவரிசையில் முதல் 5 இடங்களில் முறையே வில்லியம்சன் (நியூசிலாந்து), ஸ்டீவன் சுமித் (ஆஸ்திரேலியா), லபுஸ்சேன் (ஆஸ்திரேலியா), ஜோ ரூட் (இங்கிலாந்து), விராட் கோலி (இந்தியா) ஆகியோர் மாற்றமின்றி தொடருகிறார்கள். விராட் கோலி ஆமதாபாத்தில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்டில் டக்-அவுட் ஆனதால் 22 புள்ளிகளை இழந்து மொத்தம் 814 புள்ளிகளுடன் 5-வது இடத்தில் உள்ளார். 2017-ம் ஆண்டு நவம்பர் மாதத்திற்கு பிறகு கோலியின் குறைந்தபட்ச புள்ளி எண்ணிக்கை இதுவாகும். இதே டெஸ்டில் சொதப்பிய இந்தியாவின் புஜாரா 11 புள்ளிகளை இழந்ததுடன் 10-ல் இருந்து 13-வது இடத்துக்கு சறுக்கினார். புஜாரா தற்போது 697 புள்ளிகளுடன் இருக்கிறார். 2016-ம் ஆண்டுக்கு பிறகு முதல்முறையாக அவரது புள்ளி எண்ணிக்கை 700-க்கு கீழ் சென்றுள்ளது. அதே சமயம் இந்த டெஸ்டில் அதிரடியாக சதம் (101 ரன்) அடித்து அசத்திய இந்திய விக்கெட் கீப்பர் ரிஷாப் பண்ட் 7 இடங்கள் முன்னேறி 7-வது இடத்தை (747 புள்ளி) பிடித்துள்ளார். அவரது சிறந்த தரநிலை இதுவாகும். மற்றொரு இந்திய வீரர் ரோகித் சர்மா ஒரு இடம் உயர்ந்து ரிஷாப் பண்ட் மற்றும் நியூசிலாந்தின் ஹென்றி நிகோல்சுடன் 7-வது இடத்தை பகிர்ந்துள்ளார். ஆமதாபாத் டெஸ்டில் 96 ரன்கள் குவித்த ஆல்-ரவுண்டரான வாஷிங்டன் சுந்தர் 39 இடங்கள் எகிறி 62-வது இடத்தை பெற்றுள்ளார்.

பந்து வீச்சாளர்களின் தரவரிசையில் ஆஸ்திரேலியாவின் கம்மின்ஸ் (908 புள்ளி) முதலிடத்தில் கம்பீரமாக பயணிக்கிறார். இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்டில் 8 விக்கெட்டுகள் வீழ்த்தியதோடு தொடர்நாயகன் விருதையும் பெற்ற இந்திய சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் 27 புள்ளிகளை கூடுதலாக சேகரித்து மொத்தம் 850 புள்ளிகளுடன் மேலும் ஒரு இடம் உயர்ந்து 2-வது இடத்தை எட்டியுள்ளார். இதனால் 2-ல் இருந்த நியூசிலாந்தின் நீல் வாக்னெர் (825 புள்ளி) 3-வது இடத்துக்கு சரிந்தார். இந்த டெஸ்டில் ஆடாத இந்தியாவின் பும்ரா ஒரு இடம் குறைந்து 10-வது இடத்தில் இருக்கிறார். இங்கிலாந்து அணியை சுழல் ஜாலத்தால் மிரட்டி 9 விக்கெட்டுகளை சாய்த்த மற்றொரு இந்திய வீரர் அக்‌ஷர் பட்டேல் 8 இடங்கள் அதிகரித்து 30-வது இடத்துக்கு வந்துள்ளார்.

Next Story