ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நடந்துள்ள சில ருசிகர சாதனைகள்


கிறிஸ் கெய்ல்; முகமது சிராஜ்
x
கிறிஸ் கெய்ல்; முகமது சிராஜ்
தினத்தந்தி 8 April 2021 11:11 PM GMT (Updated: 8 April 2021 11:11 PM GMT)

டெல்லி அணிக்காக ஆடும் சுழற்பந்து வீச்சாளர் அமித் மிஸ்ரா அதிகபட்சமாக 3 முறை ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தியுள்ளார்.

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நடந்துள்ள சில ருசிகர சாதனைகள் பற்றிய விவரம் வருமாறு:-

* 2013-ம் ஆண்டு புனே வாரியர்சுக்கு எதிராக பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி 5 விக்கெட்டுக்கு 263 ரன்கள் குவித்ததே ஒரு அணியின் அதிகபட்சமாகும். இதே பெங்களூரு அணி 2017-ம் ஆண்டில் கொல்கத்தாவுக்கு எதிராக 49 ரன்னில் சுருண்டது மோசமான ஸ்கோராகும்.

* இதுவரை 63 சதங்கள் அடிக்கப்பட்டுள்ளன. அதிக சதங்கள் நொறுக்கியவர்களின் பட்டியலில் கிறிஸ் கெய்ல் (6 சதம்) முதலிடத்தில் உள்ளார். பெங்களூரு கேப்டன் விராட் கோலி 5 சதத்துடன் 2-வது இடம் வகிக்கிறார்.

* ஐ.பி.எல். வரலாற்றில் முதல் சதத்தை அடித்தவர், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் வீரர் பிரன்டன் மெக்கல்லம். 2008-ம் ஆண்டில் நடந்த தொடக்க ஆட்டத்தில் பெங்களூருவுக்கு எதிராக அவர் 158 ரன்கள் திரட்டினார். அதன் பிறகு இந்த நாள் வரைக்கும் கொல்கத்தா அணி வீரர் யாரும் சதம் அடித்ததில்லை என்பது ஆச்சரியமான உண்மையாகும்.

* தற்போது பஞ்சாப் கிங்சுக்காக ஆடும் கிறிஸ் கெய்ல் முன்பு பெங்களூரு அணிக்காக 175 ரன்கள் (2013-ம் ஆண்டில் புனே வாரியர்சுக்கு எதிராக) விளாசியதே தனிநபர் அதிகபட்சமாகும். இதில் 30 பந்துகளில் 100 ரன்கள் எடுத்த போது, அதிவேக சதமாகவும் பதிவானது.

* சிக்சர் மன்னனாகவும் 41 வயதான கிறிஸ் கெய்ல் வலம் வருகிறார். அவர் 349 சிக்சருடன் (132 ஆட்டம்) அசைக்க முடியாத இடத்தில் இருக்கிறார். இந்த வகையில் பெங்களூரு அணி வீரர் டிவில்லியர்ஸ் (235 சிக்சர்) 2-வது இடத்திலும், சென்னை கேப்டன் டோனி (216 சிக்சர்) 3-வது இடத்திலும் உள்ளனர்.

* 2016-ம் ஆண்டில் விராட் கோலி 973 ரன்கள் குவித்ததே ஒரு ஐ.பி.எல். சீசனில் எடுக்கப்பட்ட தனிநபரின் அதிக பட்ச ரன்னாகும்.

* இந்த ஆண்டு கொல்கத்தா அணிக்காக விளையாட உள்ள சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன்சிங் ரன் விட்டுக்கொடுக்காமல் அதிகமான பந்துகளை வீசியவர் என்ற சிறப்புக்குரியவர் ஆவார். அவர் 1,249 ‘டாட்பால்’ வீசியுள்ளார்.

* 19 ‘ஹாட்ரிக்’ விக்கெட் சாதனை படைக்கப்பட்டுள்ளன. டெல்லி அணிக்காக ஆடும் சுழற்பந்து வீச்சாளர் அமித் மிஸ்ரா அதிகபட்சமாக 3 முறை ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தியுள்ளார்.

* கடந்த ஆண்டு கொல்கத்தாவுக்கு எதிரான ஆட்டத்தில் பெங்களூரு வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் 2 ஓவர்களில் ரன் ஏதும் கொடுக்காமல் மெய்டனாக வீசினார். ஐ.பி.எல்.-ல் ஒரு ஆட்டத்தில் 2 மெய்டன் ஓவர்கள் வீசிய ஒரே பவுலர் இவர் தான்.

Next Story