கிரிக்கெட்

முதல் ஆட்ட வெற்றியை விட ‘சாம்பியன் பட்டம் வெல்வதே முக்கியமானது’ - மும்பை கேப்டன் ரோகித் சர்மா பேட்டி + "||" + 'Winning the title is more important than winning the first match' - Mumbai captain Rohit Sharma interview

முதல் ஆட்ட வெற்றியை விட ‘சாம்பியன் பட்டம் வெல்வதே முக்கியமானது’ - மும்பை கேப்டன் ரோகித் சர்மா பேட்டி

முதல் ஆட்ட வெற்றியை விட ‘சாம்பியன் பட்டம் வெல்வதே முக்கியமானது’ - மும்பை கேப்டன் ரோகித் சர்மா பேட்டி
ஐ.பி.எல். போட்டியில் முதல் ஆட்ட வெற்றியை விட சாம்பியன் பட்டத்தை வெல்வதே மிகவும் முக்கியமானது என்று மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மா தெரிவித்தார்.
சென்னை,

14-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி தொடரில் சென்னை சேப்பாக்கத்தில் நேற்று முன்தினம் இரவு நடந்த தொடக்க லீக் ஆட்டத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்சை வீழ்த்தி ‘திரில்’ வெற்றியுடன் போட்டியை தொடங்கியது.

முதலில் ஆடிய மும்பை அணி 9 விக்கெட்டுக்கு 159 ரன்கள் எடுத்தது. பின்னர் ஆடிய பெங்களூரு அணி கடைசி பந்தில் இலக்கை எட்டியது. கடைசி கட்டத்தில் டிவில்லியர்ஸ் (27 பந்தில் 48 ரன்) அதிரடி காட்டி வெற்றிக்கு வழிவகுத்தார். 27 ரன்கள் விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகள் வீழ்த்திய பெங்களூரு அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஹர்ஷல் பட்டேல் ஆட்டநாயகன் விருது பெற்றார்.

தொடர்ந்து 9-வது ஆண்டாக ஐ.பி.எல்.-ல் தங்களது முதல் ஆட்டத்தில் மும்பை அணி தோல்வி அடைந்துள்ள நிலையில் அது குறித்து மும்பை கேப்டன் ரோகித் சர்மா கூறுகையில், ‘ஐ.பி.எல். போட்டியில் முதல் ஆட்ட வெற்றியை விட சாம்பியன் கோப்பையை வெல்வதே மிகவும் முக்கியமானது. ஆனாலும் இந்த ஆட்டத்தை எளிதில் விட்டு விடவில்லை. கடைசி வரை கடுமையாக போராடினோம். நாங்கள் பெற்ற தொடக்கத்தை பார்க்கும் போது, 20 ரன்கள் குறைவாக எடுத்து விட்டோம். இந்த ஆட்டத்தில் சில தவறுகளை இழைத்தோம். இதுபோல் நடக்கத் தான் செய்யும். இதை மறந்து அடுத்த ஆட்டத்துக்கு தயாராக வேண்டும். ஆடுகளம் பேட்டிங் செய்வதற்கு சுலபமாக இல்லை. இதனை இங்கு அடுத்த ஆட்டங்களில் ஆடும் போது கவனத்தில் கொள்ள வேண்டும். சூழ்நிலைக்கு தகுந்தபடி வித்தியாசமான அணுகுமுறையை கையாள வேண்டும்.

இந்த முறை நிறைய வீரர்கள் கடைசி வரை சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடி விட்டு வந்திருப்பதால் ஒருவருக்கொருவர் புரிந்து கொள்ள போதுமான நேரம் கிடைக்கவில்லை. ஆனாலும் நீண்ட கால ஐ.பி.எல். அனுபவம் இருப்பதால் போட்டிக்கு தகுந்தபடி சீக்கிரமாக நம்மை மாற்றிக்கொள்வது அவசியம். கடினமான இந்த காலகட்டத்தில் இந்திய மக்கள் முகத்தில் கொஞ்சம் புன்னகை மலரும் வகையில் விளையாடுவதை எதிர்நோக்குகிறோம்’ என்றார்.

வெற்றிக்கு பிறகு பெங்களூரு அணியின் கேப்டன் விராட்கோலி பேசுகையில், ‘கடந்த ஆண்டு போல் இந்த முறையும் முதல் ஆட்டத்தில் வெற்றி பெற்று இருக்கிறோம். வலுவான அணியுடன் மோதி நமது பலத்தை சோதிப்பது முக்கியமானதாகும். முதல் பாதியில் ஆடுகளம் ஓரளவு நன்றாக இருந்தது. அதன் பிறகு பந்து மெதுவாக வந்தது. இதனால் அடித்து ஆடுவது கடினமாக இருந்தது. ஹர்ஷல் பட்டேல் தனது பொறுப்பை உணர்ந்து தெளிவான திட்டத்துடன் பந்து வீசினார். அவரது பந்து வீச்சு தான் ஆட்டத்தில் வித்தியாசத்தை ஏற்படுத்தியது. அவர் எங்களது இறுதிகட்ட பந்து வீச்சாளராக இருப்பார்.

கடைசி 6 ஓவர்களில் நாங்கள் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியதுடன், அந்த அணியின் ரன்னையும் வெகுவாக கட்டுப்படுத்தினோம். கடைசி 6 ஓவர்களில் எங்களது மிகச்சிறந்த செயல்பாடு இதுவாக தான் இருக்கும். மேக்ஸ்வெல் 4-வது வீரராக களம் இறங்குவதை நாங்கள் விரும்புகிறோம். அவர் நிலைத்து நின்று விட்டால் அதிரடியாக ஆடுவார். அதனை இந்த ஆட்டத்தில் பார்க்க முடிந்தது. டிவில்லியர்ஸ் களத்தில் நின்றாலே எதிரணிக்கு பதற்றம் வந்து விடும். அதனை நாங்கள் சரியாக பயன்படுத்தி கொள்ள நினைக்கிறோம்’ என்றார்.