கிரிக்கெட்

‘சிறப்பாக போராடி மீண்டு வந்து வென்றோம்’ மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மா பேட்டி + "||" + Captain of the Mumbai team Interview with Rohit Sharma

‘சிறப்பாக போராடி மீண்டு வந்து வென்றோம்’ மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மா பேட்டி

‘சிறப்பாக போராடி மீண்டு வந்து வென்றோம்’ மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மா பேட்டி
‘கொல்கத்தாவுக்கு எதிரான ஆட்டத்தில் சிறப்பாக போராடி மீண்டு வந்து வெற்றி பெற்றோம்’ என்று மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மா தெரிவித்தார்.
சென்னை,

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நேற்று முன்தினம் இரவு நடந்த லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி 10 ரன் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட்ரைடர்சை வீழ்த்தி முதல் வெற்றி கண்டது.

முதலில் ஆடிய மும்பை அணி 152 ரன்னில் ‘ஆல்-அவுட்’ ஆனது. ரோகித் சர்மா (43 ரன்), சூர்யகுமார் யாதவ் (56 ரன்) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் அந்த அணி கவுரவமான ஸ்கோரை எட்டியது. பின்னர் ஆடிய கொல்கத்தா அணிக்கு நிதிஷ் ராணா (57 ரன்), சுப்மான் கில் (33 ரன்) ஆகியோர் நல்ல தொடக்கம் அமைத்து கொடுத்தாலும் அடுத்து வந்த வீரர்களின் சொதப்பலால் அந்த அணி 7 விக்கெட்டுக்கு 142 ரன்களே எடுத்து தோல்வியை சந்தித்தது. கடைசி 5 ஓவர்களில் வெற்றிக்கு 31 ரன்கள் தேவை என்ற நல்ல நிலையில் இருந்த கொல்கத்தா அணியினரை, மும்பை பவுலர்கள் அபாரமான கடைசி கட்ட பந்து வீச்சால் முடக்கி அசத்தினார்கள். 27 ரன்கள் விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகள் வீழ்த்திய மும்பை அணியின் சுழற்பந்து வீச்சாளர் ராகுல் சாஹர் ஆட்டநாயகன் விருது பெற்றார்.

வெற்றிக்கு பிறகு மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மா கூறுகையில், ‘இலக்கை விரட்டுகையில் கொல்கத்தா அணியினர் ஒரு கட்டத்தில் வலுவான நிலையில் இருந்தனர். இருப்பினும் நாங்கள் சிறப்பாக போராடி மீண்டு வந்து இந்த வெற்றியை பெற்றோம். இதுபோன்ற நெருக்கமான ஆட்டத்தை பார்க்க முடியாது. வெவ்வேறு கட்டங்களில் எந்தவொரு பவுலரை பந்து வீச அழைத்தாலும் ஆர்வமாக முன்வந்ததுடன் அணிக்கும் பங்களிப்பு அளித்தனர். இந்த ஆட்டத்தின் மூலம் எங்களுக்கு நிறைய நம்பிக்கை கிடைத்து இருக்கிறது. ‘பவர்பிளே’யில் கொல்கத்தா அணி அருமையாக ‘பேட்டிங்’ செய்து நல்ல தொடக்கம் கண்டது. அதன் பிறகு ராகுல் சாஹர் பந்து வீச்சில் விக்கெட்டுகள் வீழ்ந்ததும் திருப்பம் ஏற்பட்டது. குருணல் பாண்ட்யாவும் நன்றாக பந்து வீசி நெருக்கடி அளித்தார். பந்து வீச்சாளர்கள் அனைவரும் பாராட்டுக்குரியவர்கள். இது அணியின் முன்னேற்றத்துக்கு நல்ல அறிகுறியாகும். இந்த ஆடுகளத்தில் பேட்டிங் செய்வது எளிதான காரியமல்ல. இதனால் நன்றாக ஆடிக் கொண்டிருக்கும் பேட்ஸ்மேன் முடிந்தவரை நீண்ட நேரம் நிலைத்து நின்று விளையாட வேண்டியது அவசியமானதாகும். சென்னை ஆடுகளத்தில் களம் இறங்கிய உடனேயே அடித்து ஆடுவது என்பது கடினமான காரியமாகும்.

உண்மையை சொல்லப்போனால் நாங்கள் 15-20 ரன்கள் குறைவாக தான் எடுத்தோம். நாங்கள் தொடங்கிய விதத்தை பார்க்கையில் இதைவிட நன்றாக பேட்டிங் செய்து இருக்கலாம். இந்த தொடரில் இதுபோல் 2-வது முறையாக நடந்து இருக்கிறது. எனவே பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து யோசிக்க வேண்டும். சூர்யகுமார் யாதவ் இந்திய அணிக்காக ஆடுகையில் காட்டிய பார்மை இந்த போட்டி தொடரிலும் தொடருவதாக நினைக்கிறேன். அவர் அச்சமின்றி அடித்து ஆடக்கூடியவர். இதேபோல் அவர் அச்சமின்றி செயல்படுவதே எங்களுக்கு தேவையானதாகும். கடைசி 5 ஓவர்களில் கடந்த காலங்களில் நாங்கள் சிறப்பாக செயல்பட்டது போல் வரும் ஆட்டங்களிலும் செயல்படுவதற்கான வழிமுறைகளை கண்டறிய வேண்டியது அவசியமானதாகும்’ என்று தெரிவித்தார்.