கிரிக்கெட்

2-வது வெற்றியை ருசிக்கும் முனைப்பில் டெல்லி + "||" + In an attempt to taste the 2nd victory Delhi

2-வது வெற்றியை ருசிக்கும் முனைப்பில் டெல்லி

2-வது வெற்றியை ருசிக்கும் முனைப்பில் டெல்லி
சென்னை சூப்பர் கிங்சை வீழ்த்திய உற்சாகத்துடன் இந்த ஆட்டத்தில் களம் காணுகிறது.
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி தனது தொடக்க லீக் ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்சை வீழ்த்திய உற்சாகத்துடன் இந்த ஆட்டத்தில் களம் காணுகிறது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் பிரித்வி ஷா (72 ரன்), ஷிகர் தவான் (85 ரன்) ஆகியோர் கடந்த ஆட்டத்தில் அரைசதம் அடித்து அணிக்கு நல்ல அடித்தளம் அமைத்து கொடுத்தனர். ரிஷாப் பண்ட் (12 பந்தில் 15 ரன்) கடைசி வரை களத்தில் நின்று அணி எளிதில் வெற்றி இலக்கை கடக்க வைத்தார். பந்து வீச்சில் கிறிஸ் வோக்ஸ், அவேஷ் கான் ஆகியோர் சிறப்பாக செயல்பட்டனர். வேகப்பந்து புயல் காஜிசோ ரபடா தனிமைப்படுத்துதல் நாட்கள் முடிந்து திரும்புவது அந்த அணியின் பந்து வீச்சு பலத்தை அதிகரிக்கும்.

முன்னாள் சாம்பியனான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தன்னுடைய முதலாவது லீக் ஆட்டத்தில் 4 ரன் வித்தியாசத்தில் போராடி பஞ்சாப் கிங்ஸ் அணியிடம் வீழ்ந்தது. 222 ரன் இலக்கை நோக்கி ஆடிய அந்த ஆட்டத்தில் பேட்டிங்கில் அசத்திய ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் (119 ரன்கள்) கடைசி பந்தில் 5 ரன் தேவை என்ற நிலையில் சிக்சர் விளாச முயற்சித்து ஆட்டம் இழந்ததுடன் அந்த அணியின் வெற்றி வாய்ப்பும் பறிபோனது. மற்ற பேட்ஸ்மேன்கள் அதிரடி காட்டினாலும் நிலைத்து நிற்கவில்லை. அந்த ஆட்டத்தில் ராஜஸ்தான் அணி 8 பவுலர்களை பயன்படுத்தியும் எதிரணியின் ரன் குவிப்புக்கு அணை போட முடியாமல் திணறியது. கையில் ஆபரேஷன் செய்து இருப்பதால் வேகப்பந்து வீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சர் ஆடமுடியாத நிலையில் ஆல்-ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் முதல் லீக் ஆட்டத்தில் பீல்டிங் செய்கையில் கைவிரலில் ஏற்பட்ட எலும்பு முறிவு காரணமாக போட்டியில் இருந்து விலகி இருப்பது ராஜஸ்தான் அணிக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.

டெல்லி அணி தொடர்ந்து 2-வது வெற்றியை ருசிக்க எல்லா வகையிலும் தீவிரம் காட்டும். அதேநேரத்தில் வெற்றி கணக்கை தொடங்க ராஜஸ்தான் அணி கடுமையாக மல்லுக்கட்டும் என்பதால் இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவு இருக்காது. மும்பை ஆடுகளம் பேட்டிங்குக்கு அனுகூலமாக இருக்கும் என்பதால் 200 ரன்கள் கூட பாதுகாப்பான ஸ்கோராக இருக்காது. எனவே இரு அணிகளும் அதிக ரன் குவிக்க முனைப்பு காட்டும் என்பதால் இந்த ஆட்டத்தில் ரன் மழைக்கு பஞ்சம் இருக்காது. (நேரடி ஒளிபரப்பு : ஸ்டார் ஸ்போர்ட்ஸ்)