‘வருங்காலத்தில் தேவ்தத் படிக்கல் சிறந்த வீரராக விளங்குவார்’; பெங்களூரு அணியின் கேப்டன் கோலி பாராட்டு


‘வருங்காலத்தில் தேவ்தத் படிக்கல் சிறந்த வீரராக விளங்குவார்’; பெங்களூரு அணியின் கேப்டன் கோலி பாராட்டு
x
தினத்தந்தி 23 April 2021 11:46 PM GMT (Updated: 23 April 2021 11:46 PM GMT)

சதம் அடித்து அசத்திய தேவ்தத் படிக்கல் வருங்காலத்தில் மிகச்சிறந்த வீரராக விளங்குவார் என்று பெங்களூரு அணியின் கேப்டன் விராட்கோலி பாராட்டினார்.

பெங்களூரு அணி அபார வெற்றி

14-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நேற்று முன்தினம் இரவு நடந்த லீக் ஆட்டத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்சை வீழ்த்தி தொடர்ச்சியாக 4-வது வெற்றியை பதிவு செய்தது. முதலில் ஆடிய ராஜஸ்தான் அணி 9 விக்கெட்டுக்கு 177 ரன்கள் எடுத்தது. பின்னர் ஆடிய பெங்களூரு அணி 16.3 ஓவர்களில் 181 ரன்கள் எடுத்து சிரமமின்றி வெற்றி இலக்கை எட்டியது. கேப்டன் விராட்கோலி 72 ரன்னும் (47 பந்து, 6 பவுண்டரி, 3 சிக்சர்), தேவ்தத் படிக்கல் 101 ரன்னும் (52 பந்து, 11 பவுண்டரி, 6 சிக்சர்) எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர். ஐ.பி.எல். போட்டியில் தேவ்தத் படிக்கல் அடித்த முதல் சதம் இதுவாகும். அவருக்கு ஆட்டநாயகன் விருது கிடைத்தது. 40-வது அரைசதத்தை அடித்த விராட்கோலி ஐ.பி.எல். போட்டி தொடரில் மொத்தம் 6,021 ரன்கள் குவித்து முதலிடத்தில் நீடிக்கிறார்.

தேவ்தத் படிக்கல்லுக்கு பாராட்டு

வெற்றிக்கு பிறகு பெங்களூரு அணியின் கேப்டன் விராட்கோலி கூறுகையில், ‘தேவ்தத் படிக்கல்லின் இன்னிங்ஸ் மிகவும் அருமையாக இருந்தது. கடந்த சீசனிலும் அவர் இதேபோல் சிறப்பாக விளையாடி இருந்தார். 40-50 ரன்களை எட்டிய பிறகு தேவ்தத் படிக்கல் ரன் வேகத்தை அதிகரிக்கபதில்லை என்று எழுந்த விமர்சனத்துக்கு அவர் தனது ஆட்டத்தின் மூலம் சரியான விடை அளித்துள்ளார். தேவ்தத் படிக்கல்லிடம் சிறப்பான திறமை இருக்கிறது. அவர் வருங்காலத்தில் மிகச்சிறந்த வீரராக உருவெடுப்பார். 20 ஓவர் போட்டியை பொறுத்தமட்டில் நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்து ஆடுவது முக்கியமானதாகும். ஒரே வீரர் தொடர்ந்து அடித்து ஆதிக்கம் செலுத்த முடியாது. முதலில் தேவ்தத் படிக்கல் அடித்து ஆடுகையில் நான் சிங்கிள் ரன் எடுத்து கொடுத்து அவர் அடிக்க வழிவிட்டேன். அதேபோல் நான் அடித்து ஆடுகையில் மறுமுனையில் அவர் சிங்கிள் எடுத்து கொடுத்து உதவிகரமாக இருந்தார். ஆடுகளமும் நன்றாக இருந்தது. சதத்தை முதலில் அடித்து முடிக்கும் படி தேவ்தத் படிக்கல்லிடம் கூறினேன். ஆனால் என்னிடம் இருந்து இன்னும் நிறைய வரும் என்று சொன்னார். இருப்பினும் முதலாவது சதத்தை பூர்த்தி செய்யும்படி அறிவுறுத்தினேன். அவர் ஆட்டத்தில் மேலும் மேம்பட்டு அணிக்கு உதவிகரமாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். இந்த சதத்தை அடிப்பதற்கு தேவ்தத் படிக்கல் தகுதியானவர்.

பந்து வீச்சில் எங்களிடம் நிறைய பெரிய பவுலர்கள் கிடையாது. ஆனால் திறமையாக பந்து வீசக்கூடிய பவுலர்கள் எங்கள் அணியில் இருக்கிறார்கள். அவர்கள் எந்த நேரத்திலும் சிறப்பாக செயல்படகூடியவர்கள். நாங்கள் ஆடிய 4 ஆட்டங்களிலும் கடைசி கட்டத்தில் சிறப்பாக பந்து வீசும் அணியாக செயல்பட்டு இருக்கிறோம். இந்த ஆட்டத்தில் 30-35 ரன்களை கட்டுப்படுத்தி இருக்கிறோம். என்னை பொறுத்தமட்டில் பந்து வீச்சு ஆக்ரோஷமானதாகவும், நம்பிக்கையானதாகவும் இருக்க வேண்டியது மிகவும் முக்கியமானதாகும். தொடர் வெற்றியால் அதிக களிப்படைய வேண்டாம் என்று ரசிகர்களுக்கு சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். தொழில்முறை வீரர்களான எங்களுக்கு வெற்றி உத்வேகம் விரைவில் நம்மை விட்டு போகவும் செய்யும் என்பது புரியும். நாங்கள் ஒவ்வொரு ஆட்டமாக கவனம் செலுத்தி வருகிறோம்’ என்றார்.

சாம்சன் கருத்து

தோல்வி குறித்து ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் கூறுகையில், ‘எங்களது பேட்ஸ்மேன்கள் இந்த ஸ்கோரை (177 ரன்) கொண்டு வர நன்றாகவே பேட்டிங் செய்தார்கள். ஆனால் பெங்களூரு அணியினர் எங்களை விட மிகவும் சிறப்பாக செயல்பட்டு விக்கெட் எதையும் இழக்காமல் வெற்றி இலக்கை அடைந்தனர். நாங்கள் பயிற்சியின் போது இன்னும் சில விஷயங்களில் அதிக கவனம் செலுத்த வேண்டும். குறிப்பாக எங்களது பேட்டிங் குறித்து ஆய்வு செய்ய வேண்டும். சரிவில் இருந்து போராடி எப்படி மீண்டு வருகிறோம் என்பது தான் விளையாட்டின் சுவாரஸ்யமாகும்’ என்று தெரிவித்தார்.

ஆட்டநாயகன் விருது பெற்ற தேவ்தத் படிக்கல் அளித்த பேட்டியில், ‘இந்த இன்னிங்ஸ் எனக்கு மிகவும் சிறப்பானதாகும். ஆடுகளம் நன்றாக இருந்தது. நல்ல பார்ட்னர்ஷிப் அமைந்ததால் ரன் எடுப்பது எளிதானதாக இருந்தது. சதத்தை நெருங்குகையில் நான் பதற்றப்படவில்லை. அணியின் வெற்றியை விட சதம் பெரிதல்ல’ எனறு கூறினார்.


Next Story