கிரிக்கெட்

கொரோனா நிவாரண பணிகளுக்கு விராட்கோலி-அனுஷ்கா ஷர்மா ரூ.2 கோடி நன்கொடை + "||" + Virat Kohli and Anushka Sharma donate Rs 2 crore for corona relief work

கொரோனா நிவாரண பணிகளுக்கு விராட்கோலி-அனுஷ்கா ஷர்மா ரூ.2 கோடி நன்கொடை

கொரோனா நிவாரண பணிகளுக்கு விராட்கோலி-அனுஷ்கா ஷர்மா ரூ.2 கோடி நன்கொடை
கொரோனா நிவாரண பணிகளுக்கு இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட்கோலி மற்றும் அவருடைய மனைவி அனுஷ்கா ஷர்மா ஆகியோர் இணைந்து ரூ.2 கோடி நன்கொடையாக வழங்கினார்கள்.

கொரோனா பாதிப்பு

கொரோனா 2-வது அலையின் தாக்கம் தற்போது இந்தியாவில் கடும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை எதிர்பார்ப்புக்கு மிஞ்சியதாக இருப்பதால் சிகிச்சைக்கு ஆஸ்பத்திரிகளில் இடம் இல்லாத நிலையும், ஆக்சிஜன் உள்ளிட்ட சிகிச்சைக்கு தேவையான மருத்துவ வசதிகளுக்கு பற்றாக்குறையும் ஏற்பட்டுள்ளது.

கொரோனாவால் பாதித்தவர்களுக்கு உதவ பல்வேறு தரப்பினரும் உதவிக்கரம் நீட்டி வருகிறார்கள். வெளிநாட்டு கிரிக்கெட் வீரர்கள் மட்டுமின்றி இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர், தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான், வேகப்பந்து வீச்சாளர் ஜெய்தேவ் உனட்கட், பாண்ட்யா சகோதரர்கள் உள்பட பலரும் நிதியுதவி அளித்தனர்.

கோலி தம்பதி ரூ.2 கோடி நிதியுதவி

இந்த நிலையில் கொரோனா நிவாரண பணிகளுக்கு இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட்கோலி மற்றும் அவரது மனைவியும், இந்தி நடிகையுமான அனுஷ்கா சர்மா ஆகியோர் ‘கெட்டோ’ என்ற தொண்டு நிறுவனத்துடன் இணைந்து ஆன்லைன் மூலமாக ரூ.7 கோடி நிதி திரட்டி அளிக்க முடிவு செய்துள்ளனர். இதற்கு தங்களது பங்களிப்பாக விராட்கோலியும், அனுஷ்கா ஷர்மாவும் இணைந்து ரூ.2 கோடி வழங்கி உள்ளனர். இந்த நிதியுதவி இந்தியாவில் கொரோனாவினால் பாதித்தவர்களின் சிகிச்சைக்கு தேவையான ஆக்சிஜன் உள்ளிட்ட மருத்துவ தேவைகளுக்கு தொண்டு நிறுவனம் மூலம் செலவிடப்படும்.

இது குறித்து விராட்கோலி-அனுஷ்கா ஷர்மா தம்பதி நேற்று கூட்டாக சமூக வலைதள சேனலில் வெளியிட்டு இருக்கும் வீடியோவில், ‘தற்போது இந்தியாவில் மிகவும் கடினமான சூழ்நிலை நிலவி வருகிறது. கொரோனாவுக்கு எதிராக நாம் போராடி வருகிறோம். கொரோனாவினால் நமது நாடு இதுபோல் பாதித்து இருப்பதை பார்ப்பதற்கு மிகுந்த வேதனை அளிக்கிறது. தொற்றில் இருந்து நம்மை பாதுகாக்க இரவு பகலாக பாடுபடும் அனைத்து தரப்பினருக்கும் நாம் நன்றிக்கடன் பட்டு இருக்கிறோம். அவர்களது அர்ப்பணிப்பு பாராட்டுக்குரியதாகும். ஆனால் தற்போது நம்முடைய ஆதரவு அவர்களுக்கு தேவையானதாகும். எனவே நாம் அனைவரும் நிச்சயம் அவர்கள் பக்கம் உறுதுணையாக நிற்க வேண்டும். இதனால் தான் நாங்கள் இந்த நிதி திரட்டும் நடவடிக்கையில் ஈடுபட்டு இருக்கிறோம். இந்த நிதி கொரோனா நிவாரண பணிகளுக்கு அளிக்கப்படும்.

ஒன்றிணையுங்கள்

இந்த முயற்சியில் நீங்கள் எல்லோரும் இணைவதுடன், உங்களால் முடிந்த நன்கொடையை அளிக்க வேண்டும் என்று நாங்கள் கேட்டுக்கொள்கிறோம். ஒவ்வொரு சிறிய விஷயமும் வித்தியாசத்தை ஏற்படுத்தும். எங்கள் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், ரசிகர்களுக்கும் சொல்லிக்கொள்வது என்னவென்றால் இது நாம் ஒருவருக்கொருவர் தோளோடு, தோள்கொடுத்து நிற்க வேண்டிய தருணமாகும். நாம் ஒன்றிணைந்து செயல்பட்டால் தான் இந்த போராட்டத்தில் வெற்றி பெற முடியும். எல்லோரும் பாதுகாப்பாக இருங்கள்’ என்று கூறியுள்ளனர்.


தொடர்புடைய செய்திகள்

1. கோலியுடன் விளையாடிய தருணங்கள் சிறப்பானது - ரோகித் சர்மா
ஒவ்வொரு முறை களம் இறங்கும் போதும் அணி வெற்றி பெற வேண்டும் என்ற மனஉறுதியை கோலி வெளிப்படுத்தி இருக்கிறார்.